திருவனந்தபுரம், செப் 14 கேரளாவைச் சேர்ந்த மாளவிகா ஜி நாயர், அய்ஆர்எஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்தபோதிலும், இந்திய நிர்வாகப் பணியில் (அய்ஏஎஸ்) சேர வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க, கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட உடல்நல சவால்களையும் கடந்து, 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 45-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
2020 பேட்ச் அய்ஆர்எஸ் அதிகாரியான மாளவிகா, மீண்டும் 2024-ஆம் ஆண்டு UPSC தேர்வுக்குத் தயாரானபோது, கர்ப்பமாக இருந்தார். கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட பல்வேறு உடல்நல சவால்கள் அவரைப் பெரிதும் பாதித்தன. இருந்தும், அவர் தனது கனவை கைவிடவில்லை. செப்டம்பர் 3-ஆம் தேதி குழந்தை பிறந்த நிலையில், வெறும் 17 நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 20-ஆம் தேதி நடைபெற்ற UPSC முதன்மைத் தேர்வை அவர் எழுதினார்.
மாளவிகாவின் இந்த மன உறுதி, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு ஆகியவை, கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகளை ஒரு தடையாகக் கருதாமல், தனது கனவை அடைய ஒரு உந்துதலாக மாற்றிக்கொண்டதை உலகிற்கு உணர்த்துகிறது. இந்த வெற்றியை, சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் அனைவருக்கும் ஒரு உத்வேகமானதாக மாறியுள்ளது.