சென்னை செப்.13- மேக்ஸி கேப் வாகனங்களை மினி பேருந்துகளாக இயக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:
மினி பேருந்துகள்
ஊரகப் பகுதிகளுக்கும் செல்லும் வகையில் மினி பேருந்துகள் திட்டத்தை புதுப்பித்து கடந்த ஜூன்மாதம் தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்தது. இதில் சுமார் 1,000 ஆபரேட்டர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். ஆனால் குறைந்தது 5 ஆயிரம் மினி பேருந்துகள் தேவைப் படுகின்றன.
இந்நிலையில், அனைத்து பகுதியில் உள்ள மக்களுக்கும் போக்குவரத்து வசதியை உறுதி செய்யும் வகையில் தனியார் மேக்ஸி கேப் வேன்களை மினி பேருந்துகளாக இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12 முதல் 16 இருக்கைகள் கொண்ட வேன்களை பொது போக்குவரத்துக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக பொதுப் போக்குவரத்து வாகனங்களின் குறைந்தபட்ச உயரம் 185 செ.மீ என்பதை திருத்தி, 200 செ.மீ ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அறிக்கை அளிக்க உத்தரவு:
அதேநேரம், வேன்களில் பயணிகள் நின்று செல்ல அனுமதி இல்லை. இவ்வாறான திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் மலைக் கிராம மக்கள் உள்ளிட்ட ஊரகப் பகுதி மக்களுக்கு பேருந்து சேவை கிடைக்கும். இது பற்றி விரிவாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலரும் அறிவுறுத்தி உள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மெட்ரோ ரயில் பயணிகளுக்காக
துணை நிறுவனம்
துணை நிறுவனம்
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு
சென்னை செப்.13- சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கூடுதல் இணைப்பு வாகனங்களை இயக்குவதற்காக, ஒரு துணை நிறுவனத்தை அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக, மாநில போக்குவரத்து ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன், கால் டாக்ஸி, ஆட்டோ, வேன் போன்ற இணைப்பு வாகனங்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும். தற்போது சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பயணிகளின் வசதி காரணமாக, அன்றாடம் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நான்கு லட்சமாக அதிகரித்துள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் முடிவடையும் போது, பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
எனவே, பயணிகள் தடையின்றி மெட்ரோ நிலையங்களுக்கு வந்து செல்ல வசதியாக, இந்த இணைப்பு வாகன சேவையை அதிகரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.