சென்னை, செப்.13- ஆசிரியர் தகுதித்தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுதாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு
ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) நடைமுறைக்கு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அவ்வாறு தேர்ச்சி பெற தவறினால், அவர்களுக்கு இறுதி சலுகைகளுடன் கட்டாய ஓய்வு வழங்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவால் தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 176,000 ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என சொல்லப்பட்டது. இதே போல்,தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் பாதிக்கப்படுவார்கள்.
இந்த விவகாரத்தில் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். என்பது குறித்து தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் சங்கங்களை நேரில் அழைத்து ஆலோசனை நடத்தியது. அதில் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு டெட் தேர்வு விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்ய முடிவு செய்திருக்கிறது.
சீராய்வு மனு
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில், ‘டெட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனுதாக்கல் செய்யப்படும்’ என பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:- ஆசிரியர் தரம் தொடர்ந்து மேம் படுத்தப்பட வேண்டும் மற்றும் எதிர்கால நியமனங்களுக்கு ‘டெட்’ ஒரு கட்டாயத் தேவையாக இருக்க வேண்டும் என்ற கொள்கையை தமிழ்நாடு அரசு முழுமையாக ஆதரிக்கும் அதே வேளையில், ஏற்கனவே பணியில் இருந்த ஆசிரியர்களுக்கு இந்த தேவையை பின்னோக்கிப் பயன்படுத்துவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த காரணங்களுக்காக சீராய்வு மனுதாக்கல் செய்யப்படுகிறது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய இப்போது அணுகுவோம். மேலும் இந்த பிரச்சினை சட்டம் மற்றும் அரசமைப்பு கொள்கைகளை மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் உள்ள மாணவர் களின் எதிர்காலத்தையும் உள்ளடக்கியது என்பதை அரசு வலுவாக முன்வைக்கும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.