கவீ (வீ.கருப்பையன் – க.வீரம்மாள்) இல்லத்தினைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை

10 Min Read

மக்களை முட்டாளாக்குவதைத் தடுக்கும் பணியைச் செய்யும் ஒரே ஒரு இயக்கம் திராவிடர் கழகம் மட்டும்தான்!
மக்கள் பின்னால் நாங்கள் செல்லவேண்டிய அவசியமில்லை; மக்கள் எங்கள் பின்னால் வருவார்கள்!
நம் இயக்கத் தோழர்கள் கட்டுகின்ற இல்லத்திற்கு எந்தப் பெயர் வைத்தாலும், அது பெரியார் இல்லம்; பகுத்தறிவு இல்லம்தான்!

திருப்பாலைத்துறை, செப்.13 மக்களை முட்டாளாக்கு வதைத் தடுக்கும் பணியைச் செய்யும் ஒரே ஒரு இயக்கம் திராவிடர் கழகம் மட்டும்தான். முட்டாளாக இருந்தாலும் பரவாயில்லை, எங்களுக்கு ஓட்டுப் போடு என்று சொல்லுகிறார்கள் அரசியல்வாதிகள். அதனால்தான், தேர்தலில் நிற்காத இயக்கம் திராவிடர் கழகம். தேர்தலில் நிற்பவர்களை ஆதரிப்போம். ஆனால், உண்மையைச் சொல்வோம். மக்கள் பின்னால் நாங்கள் செல்லவேண்டிய அவசியமில்லை; மக்கள் எங்கள் பின்னால் வருவார்கள். நம் இயக்கத் தோழர்கள் கட்டுகின்ற இல்லத்திற்கு எந்தப் பெயர் வைத்தாலும், அது பெரியார் இல்லம்; பகுத்தறிவு இல்லம்தான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கவீ (வீ.கருப்பையன் – க.வீரம்மாள்) இல்லத் திறப்பு விழா!

கடந்த 8.9.2025 அன்று தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் திருப்பாலைத்துறையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கவீ (வீ.கருப்பையன் – க.வீரம்மாள்) இல்லத்தினைத் திறந்து வைத்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

தஞ்சாவூர்  மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை பகுதியில், திராவிடர் கழக அமைப்பாளராகவும், ரோட்டரி சங்கத்தில் முக்கியப் பொறுப்பாளராகவும் இருக்கக்கூடிய அருமைத் தோழர் மானமிகு கணேசன் – இராஜேஸ்வரி, இனியாள் ஆகியோருடைய கவீ (வீ.கருப்பையன் – க.வீரம்மாள்) இல்ல அறிமுக விழா என்ற பெயரால் நடைபெறுகின்ற இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இல்லத் திறப்பு விழா என்பது ஓர் எடுத்துக்காட்டான இல்லத் திறப்பு விழாவாகும். நம்முடைய கணேசன் அவர்கள் கவீ என்று பெயர் வைத்திருக்கிறார்.

இரண்டு எழுத்துகளை இணைத்து வைத்திருப்பதின் அடையாளம் என்னவென்றால், அவருடைய பெற்றோர் பெயரான வீ.கருப்பையன் – க.வீரம்மாள் ஆகியோருடைய நினைவாக புதிதாகக் கட்டப்பட்ட இல்லத்திற்கு கவீ இல்லம் என்று பெயர் வைத்திருக்கிறார். இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

பெற்றோரை, பிள்ளைகள் மறக்கக்கூடாது என்பதை மிகத் தெளிவாகப் பதிவு செய்திருக்கின்றார்!

தாய் – தந்தையருடைய முக்கியத்துவம் என்ன? பிள்ளைகள் அவர்களை என்றைக்கும் மறக்கக் கூடாது என்ற உணர்வை மிகத் தெளிவாக இங்கே பதிவு செய்திருக்கின்றார், நிரந்தரமாக தன்னுடைய இல்லத்திற்குப் பெற்றோரின் பெயர் வைத்து.

பொதுவாக கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு. “கல்யாணத்தைப் பண்ணிப் பார்; வீட்டைக் கட்டிப் பார்’’ என்பதுதான் அது. இந்த இரண்டையும் மிகச் சிறப்பாக நடத்தி, இன்றைக்கு இந்த அருமையான இல்லத்தை மிகச் சிறப்பாக கட்டியிருக்கிறார்.

இல்லத்தினுள், தந்தை பெரியார், அன்னை மணியம்மையாருடைய உருவங்களைக் கொண்டு அற்புதமான ஒரு நிலைப்பாட்டை உருவாக்கியிருக்கிறார்.

அதுமட்டுமல்ல, பகுத்தறிவாளர்கள், இயக்கத் தோழர்கள் அமைக்கின்ற எந்த இல்லமாக இருந்தாலும், அந்த இல்லத்தில் நல்ல நூல் நிலையம் உண்டு.

பூஜை அறை முக்கியமல்ல;
புத்தக அறைதான் மிகவும் முக்கியம்

நம்முடைய நாட்டில் வீடு கட்டினால், பூஜை அறை இருக்கிறதா? என்பதைத்தான் முக்கியமாகப் பார்ப்பார்கள். ஆனால், பூஜை அறை முக்கியமல்ல; புத்தக அறைதான் மிகவும் முக்கியம்.

ஏனென்றால், பூஜை அறை எதற்குப் பெரும்பாலும் பயன்படுகிறது என்றால், வெறும் பக்திக்காக மட்டும் பயன்படவில்லை.  அது வெளியில் தெரிகின்ற விஷயம்.

பல நேரங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள், பெரிய பெரிய வசதி படைத்தவர்களது வீட்டிற்கு ரெய்டு நடத்தச் சென்றால், அவர்கள் முதலில் செல்கின்ற அறை எதுவென்றால், பூஜை அறைக்குத்தான்.

அங்கே விநாயகர் பொம்மை, மற்ற பொம்மைகள் இருக்கும். அவற்றை ஒரு ஆட்டு ஆட்டுகிறார்கள். அதனுள் ரகசிய அறையின் திறப்பிற்கான வழி இருக்கிறது.

வருமான வரி கட்டாமல் இருப்பதற்கும், கருப்புப் பணத்தைப் பதுக்கி வைப்பதற்கும்தான்!

எனவே, பிள்ளையார் எதற்குப் பயன்படுகிறார் என்றால், வருமான வரி கட்டாமல் இருப்பதற்கும், கருப்புப் பணத்தைப்  பதுக்கி வைப்பதற்கும்தான் பயன்படுகிறார்; பூஜை அறையும் பயன்படுகிறது என்பதை பல வழக்குகளில் பார்த்திருக்கின்றோம்.

ஆனால், நம்முடைய தோழர்களின் இல்லத்தில் அதுபோன்று எதுவும் இல்லை. காரணம், எங்களுடைய தோழர்கள் நாணயமானவர்கள், ஒழுக்கமானவர்கள்.

அவர்களுடைய நேர்மையும், உழைப்பும் இந்த இல்லத்தை உருவாக்கியிருக்கிறது.

நம்முடைய தோழர் ஜெயக்குமார் அவர்கள் இங்கே சொன்னதுபோல, எளிய தோழர்கள் எங்களுடைய தோழர்கள்.

ஒரு நவீன பகுத்தறிவு மூடநம்பிக்கை!

ஆசிரியர் வந்துதான் புதிய இல்லத்தைத் திறந்து வைக்கவேண்டும் என்று கிட்டதட்ட 3, 4 மாதங்களுக்குமேலாகப் பிடிவாதமாக இருக்கிறார். இதுவே ஒரு நவீன பகுத்தறிவு மூடநம்பிக்கையாகும்.

பகுத்தறிவும், மூடநம்பிக்கையும் ஒன்றுக்கொன்று எதிரி. ஆனால், இதில் இரண்டும் கலந்திருக்கிறது. இருந்தாலும், இதில் ஒரு நியாயம் இருக்கிறது. அது என்னவென்றால், நாங்கள் ஒரு குடும்பம் – கொள்கைக் குடும்பம். குருதிக் குடும்பத்தைவிட, மிக ஆழமான உறவு எங்களுடைய உறவு.

குருதி உறவைவிட, கொள்கை உறவுதான் மிகவும் முக்கியம்!

குருதி உறவைவிட, கொள்கை உறவுதான் மிகவும் முக்கியம் என்று காட்டக்கூடிய உணர்வு ஒவ்வொரு பகுதியிலும் இருக்கின்றது.

நான், மருத்துவமனையில் இருக்கும்போதுகூட சொன்னேன், தோழர்கள், யாராவது நிகழ்ச்சி என்று அழைத்தால், நிச்சயமாகப் போகவேண்டும் என்று.

நம்முடைய தோழர் கணேசன் அவர்கள், ‘‘கழகத் தலைவர் என்றைக்குத் தேதி கொடுக்கிறாரோ, அன்றைக்கே இல்லத் திறப்பு விழாவினை வைத்துக் கொள்கிறோம்’’ என்று சொன்னார்.

உழைப்பினால் உயர்ந்த அவர். சிறப்பான வகையில் இல்லத்தினைக் கட்டியிருக்கிறார். இதில் எந்த மூடநம்பிக்கையும் இல்லை.

கட்டடத்தை எப்படிக் கட்டவேண்டும் என்று பொறியாளரிடம் கேட்பார்கள்; பகுத்தறிவாளர்கள், பொறியாளரிடம்தான் கேட்டுத்தான் செய்தார்கள்.

50 ஆண்டுகளுக்குமுன் வாஸ்து சாஸ்திரப்படிதான் வீடு கட்டினார்களா?

ஆனால், மூடநம்பிக்கையாளர்கள் யாரிடம் கேட்பார்கள் என்றால், பொறியாளர்களிடம் கேட்பதைவிட, புதிதாக ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்; 50 ஆண்டுகளுக்குமுன் வாஸ்து சாஸ்திரம் அதிகமாகப் பிரபலமாகவில்லை. அப்படிப்பட்ட வாஸ்து சாஸ்திரப்படிதான் வீடு கட்டுகிறார்கள்.

வீட்டின் முன் பெயர்ப் பலகை வைத்திருக்கிறார்கள். ‘‘இஞ்னியர், ஓய்வு பெற்றவர்; அல்லது ஆர்கிடெக் – கட்டடக் கலை நிபுணர் என்று போட்டுவிட்டு, அதற்குக் கீழே ‘வாஸ்து ஸ்பெஷலிஸ்ட்’’’ என்று போட்டிருக்கிறார்கள்.

வாஸ்து என்பது அறிவியலா? என்றால், இல்லை. யாரோ சொன்னார்கள் என்பதற்காக அதனைக் கடைப்பிடிக்கிறார்கள்.

அரசியல்வாதிகள்தான் மிக அதிகமாக வாஸ்து சாஸ்திரத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்.

தேர்தலில் ஒருவர் போட்டியிடும்போது, வெற்றி பெற்றவரும் நல்ல நேரத்தில்தான் வேட்பு மனுதாக்கல் செய்கிறார்; தோல்வியுற்றவரும் நல்ல நேரத்தில்தான் வேட்பு மனுதாக்கல் செய்கிறார். ராகுகாலம், எமகண்டம், குளிகை இல்லாமல், நல்ல நேரத்தில்தான் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள். ஆனால், ஒருவர்தானே தேர்தலில் வெற்றி பெறுகிறார்.

நோய் எதிர்ப்புச் சக்தி குறையும்போதுதான், நோய்க் கிருமிகள் பலம் பெறுகின்றன!

தோல்வியுற்றவர் மனம் நொந்து போய் இருக்கையில், மூடநம்பிக்கைகளைக் கைக்கொள்கிறார்கள்.  நோய் நம் உடலை எப்போது தாக்கும் என்றால், நோய் எதிர்ப்புச் சக்தி குறையும்போதுதான், நோய்க் கிருமிகள் பலம் பெறுகின்றன.

அதுபோன்று, நம்முடைய அறிவுச் சிந்தனைத் திறன் குறையும்போதுதான், மூடநம்பிக்கைகளை விதைக்கிறார்கள்; பக்தியை விதைக்கிறார்கள்.

தேர்தலில் தோல்வியுற்று ஒருவர் சோர்ந்து போய் இருக்கும்போது, ஒருவர் அவரிடம் வந்து, ‘‘அய்யா, நாம் தோற்றுப் போனதற்கு என்ன காரணம் என்பதை நான் கண்டுபிடித்துவிட்டேன்’’ என்று சொல்கிறார்.

அடுத்த தேர்தலிலாவது நாம் வெற்றி பெறவேண்டுமே என்று நினைத்த இவர், ‘‘அப்படியா, அது என்னவென்று சொல்லுங்கள்’’ என்கிறார்.

‘‘இப்போது இருக்கின்ற வீட்டின் வாசற்படியை தவறான திசையில் வைத்திருக்கிறார்கள். அதை இடித்துவிட்டு, வாஸ்து சாஸ்திரப்படி பின்பக்கத்தில்  வைத்தால் நன்றாக இருக்கும்’’ என்பார்.

வாஸ்து சாஸ்திரத்தில், கழிப்பறைக்கு இடம் உண்டா? என்று  பாருங்கள்.

‘‘மாஸ்டர் பெட்ரூம்!’’

புதிய வீட்டைக் கட்டியவுடன், வருகின்றவர்களுக்கு வீட்டைச் சுற்றிக் காட்டுவார்கள். இது படுக்கை அறை, இது வரவேற்பறை என்று சொல்லிவிட்டு, இது ‘‘மாஸ்டர் பெட்ரூம்’’ என்று காட்டுவார்கள். அதனுடைய சிறப்பு என்னவென்றால், அந்த அறைக்குள்ளேயே ‘அட்டாச் பாத்ரூம்’ (குளியலறை, கழிப்பறை சேர்ந்து இருக்கும்).

வீட்டிற்குள், கழிப்பறையை மாஸ்டர் பெட்ரூம் என்று காட்டுகிறோம். இது வாஸ்து சாஸ்திரத்தில் இருக்கிறதா? என்றால், கிடையவே கிடையாது.

வாஸ்து சாஸ்திரத்தில் என்ன எழுதி வைத்திருக்கிறார்கள் என்றால், ஒவ்வொருவரும் என்ன ஜாதி? எந்த ஜாதிக்கு எப்படி வீடு கட்டவேண்டும் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

நம்முடைய தோழர் கணேசன் அவர்கள் இயக்கத்தில் நீண்ட காலமாக இருக்கிறார்; இங்கே இவ்வளவு தோழர்கள் இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் என்ன ஜாதி என்று எங்களுக்குத் தெரியாது. தெரியவேண்டிய அவசியமும் கிடையாது.

ஜாதி, மதம் எல்லாம் பார்க்காமல், மிகப்பெரிய அளவிற்குப் பாசத்தோடு இருக்கின்றோம். ரோட்டரி சங்கத்தில் கணேசன் அவர்கள் பொறுப்பில் இருக்கிறார். ரோட்டரி சங்கத்திலிருந்து அவருடைய நண்பர்களும் பலர் இங்கே வந்திருக்கின்றார்கள்.

ரோட்டரி சங்கம் என்பது உலளாகவிய இயக்கமாகும்!

ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன், ரோட்டரி கிளப்பில், ரோட்டரி சங்கம் என்பது உலளாகவிய இயக்கமாகும். ரோட்டேரியன் சொல்லிக் கொடுக்கும்போது,  நான்கு கேள்விகள் கேட்பார்கள். அந்த நான்கு கேள்விகள்தான் மிகவும் அடிப்படையானது.

அந்த நான்கு கேள்விகள்தான், திராவிடர் கழகம்.

உண்மையானதா? நியாயமானதா? ஏற்கத்தக்கதா? என்பது உள்பட கேள்விகள் இருக்கும்.

ஆகவே, பெரியார் சொன்னவற்றையும், ரோட்டரி சங்கத்தில் கேட்கப்படும் நான்கு கேள்விகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டும் ஒன்றாகத்தான் இருக்கும்.

கணேசன் அவர்கள் உழைத்தார், வீட்டினை மிகச் சிறப்பாகக் கட்டியிருக்கிறார். அவருடைய அன்பை மறுக்க முடியாத அளவிற்கு இங்கே வந்திருக்கின்றோம்.

நம்முடைய நாட்டில் அதிகமான அளவிற்கு மூடநம்பிக்கை நிலவுகிறது. சென்னை, தியாகராயர் நகரில் திடீர் பிள்ளையார் வந்தார். 50 ஆண்டுகள் கழித்து, இப்போது ஒருவர் ஆரம்பித்திருக்கிறார்.

பத்திரிகையில் வெளிவந்த செய்தி!

இன்று காலையில் வெளிவந்த பத்திரிகையில் ஒரு செய்தி – விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள வண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி (வயது 20). இவருக்கு கடந்த மூன்று நாள்களாக நள்ளிரவில் கனவு வந்ததாம். அதில், காளியம்மாள் கோவில் பின்புறம் உள்ள குளத்தில் முருகன் சிலை மற்றும் சூலம் மண்ணில் புதைந்து இருப்பதாகவும், அதைத் தோண்டி எடுத்து வழிபாடு நடத்துமாறும் கனவு வந்ததாம். இதுகுறித்து அவர் கிராம முக்கியஸ்தர்களிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, கிராம மக்கள், அதே ஊரில் உள்ள முருகன் கோவிலில் திரண்டனராம்.

அப்போது புவனேசுவரி சாமி ஆடியபடியே, முருகன் கோவிலில் இருந்து வேல் எடுத்துக்கொண்டு, குளத்துக்குச் சென்றாராம். அங்கு ஓரிடத்தில் வேலை குத்தி, அந்த இடத்தைத் தோண்டுமாறு கூறினாராம். அதன்படி பொக்லைன் எந்திரம்மூலம் 7 அடி பள்ளம் தோண்டப்பட்டதாம். அப்போது அங்கு மிகவும் பழைமையான சூலம் கண்டெடுக்கப்பட்டதாம். அய்ந்தரை அடி உயரமுள்ள அந்த சூலத்திற்கு வழிபாடு செய்யப்பட்டு கோவிலில் வைக்கப்பட்டதாம்.

மேலும் அதே இடத்தில் முருகன் சிலை உள்ளதா? என்று தோண்டப்பட்டதாம். 10 அடிவரை தோண்டியபோது, ஊற்று நீரால் பள்ளம் நிரம்பியதினால், பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டதாம்.

மறுநாள் முருகன் கோவிலில் பூஜை நடந்தபோது, அப்போதும் சாமி ஆடிய புவேனசுவரி, கோவிலிலிருந்து வேலை எடுத்துக்கொண்டு, குளத்திற்குச் ஓடிச் சென்றாராம். ஏற்கெனவே சூலம் கிடைத்த இடத்தின் அருகில் வேலை குத்தி, இந்த இடத்தில்தான் முருகன் சிலை இருப்பதாகவும், இந்த இடத்தில் தோண்டுமாறும் கூறினாராம்.

எனவே, நாம் எந்தக் காலத்தில் வாழுகிறோம்? மக்களை இந்த அளவிற்கு முட்டாளாக்குவதைத் தடுக்கும் பணியைச் செய்யும் ஒரே ஒரு இயக்கம் திராவிடர் கழகம் மட்டும்தான்.

முட்டாளாக இருந்தாலும் பரவாயில்லை, எங்களுக்கு ஓட்டுப் போடு என்று சொல்லுகிறார்கள் அரசியல்வாதிகள்.

மக்கள் பின்னால் நாங்கள் செல்லவேண்டிய அவசியமில்லை; மக்கள் எங்கள் பின்னால் வருவார்கள்!

அதனால்தான், தேர்தலில் நிற்காத இயக்கம் திராவிடர் கழகம். தேர்தலில் நிற்பவர்களை ஆதரிப்போம். ஆனால், உண்மையைச் சொல்வோம். மக்கள் பின்னால் நாங்கள் செல்லவேண்டிய அவசியமில்லை; மக்கள் எங்கள் பின்னால் வருவார்கள்.

இன்றைக்குச் சிறந்த முறையில் இல்லத்தைக் கட்டித் திறப்பு விழா செய்திருக்கின்ற கணேசன் அவர்களையும், அவருடைய தாய் – தந்தையரையும், வாழ்விணையராக இருக்கக் கூடிய அம்மையார் அவர்களையும், இராஜேசுவரி அவர்களையும், இனியாள் அவர்களுக்கும், குழந்தைகளுக்கும் வாழ்த்துகளைக் கூறிக்கொள்கிறேன்.

தோழர்கள் கட்டுகின்ற இல்லத்திற்கு எந்தப் பெயர் வைத்தாலும், அது பெரியார் இல்லம்;
பகுத்தறிவு இல்லம்தான்
!

எல்லா நிகழ்வுகளிலும் நான் சொல்வதுதான், கட்டாயம் நம்முடைய இயக்க நூல்கள் இருக்கவேண்டும். நம் இயக்கத் தோழர்கள் கட்டுகின்ற இல்லத்திற்கு எந்தப் பெயர் வைத்தாலும், அது பெரியார் இல்லம்; பகுத்தறிவு இல்லம்தான். இந்தக் கொள்கைப்பூர்வமான இல்லம்தான்.

அப்படிப்பட்ட இந்த இல்லத்தில், நல்ல நூலகம் அமைத்திருப்பார்; குறைந்தபட்சம் ஒரு அலமாரியாவது நூல்களாக ஒதுக்கப்பட்டு இருக்கும்.

இயக்க நூல்களை அளித்து, இல்லத்தை அறிமுகப்படுத்துகின்றேன்!

புத்தகங்களின்மூலமாகத்தான், ஒரு புத்தகப் புரட்சியை உண்டாக்கினார் தந்தை பெரியார் அவர்கள். அப்படிப்பட்ட அந்தப் புத்தகப் புரட்சி தொடரவேண்டும் என்பதற்காக, இவர்களைப் பாராட்டி, இயக்கத்தின் சார்பாக, தலைமை நிலையம் சார்பாக இயக்க நூல்களைக் கொடுத்து அவர்களிடம் கொடுத்து, இந்த இல்லத்தை நான் அறிமுகப்படுத்துகிறேன்.

ஒவ்வொருவரும் இதுபோன்ற புத்தகங்களை வாங்கிப் படிக்கவேண்டும்; படித்துச் சிந்திக்கவேண்டும்.

இன்றைய காலகட்டத்தில், நரபலி என்று சொல்கிறார்கள்; அதைக் கேட்டால், நமக்கு வேதனையாகவும், தலைகுனிவாகவும் இருக்கிறது.

ஆணவக் கொலைகள் ஒரு பக்கம்; நரபலிகள் ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் பகுத்தறிவு; இன்னொரு பக்கம் அறிவியல்.

ஆடம்பரத்தைக் குறைத்துக்கொண்டு, எளிய முறையில் வாழவேண்டும்!

வாழ்வியலைப்பற்றி இங்கே சொன்னார்கள்.  ஆடம்பரத்தைக் குறைத்துக்கொண்டு, எளிய முறையில் வாழவேண்டும். அவர்களுடைய உழைப்பினால், படிப்படியாக இந்த இல்லத்தைக் கட்டியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு தோழரும், வரவிற்குட்பட்டு செலவழிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் சொல்லியிருக்கிறார்.

ஆகவே, வரவிற்குட்பட்டு செலவழித்த வாழ்க்கை முறை – எளிய வாழ்க்கை முறை என்பது எல்லா வகையிலும் சிறப்பாக அமையும்.

இங்கே திரண்டிருப்பவர்களுக்கு வாழ்த்துகளைக் கூறி, என்னுரையை முடிக்கின்றேன்.

வாழ்க பெரியார்! வளர்க சுயமரியாதை!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *