ஓசூர், செப்.12- ஓசூரில் நடந்த மாநாட்டில், 50 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ரூ.24 ஆயிரம் கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதே அரசின் நோக்கம் என்றார்.
ஒப்பந்தங்கள்
தமிழ்நாட்டை தொழில்துறையில் முதல் மாநிலம் ஆக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.
மாநாட்டில், ரூ.23,303.15 கோடி முத லீட்டில், 44,870 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கிடும் வகையில் 53 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத் தாகின.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் ரூ.1003.85 கோடி முதலீட்டில் 4,483 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில், 39 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மொத்தம், ரூ.24,307 கோடி முதலீட்டில் 49,353 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
புதிய திட்டங்கள்
நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.250 கோடி முதலீட்டில் 1,100 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும், 3 முடிவுற்ற திட்டங்களை தொடங்கியும், ரூ.1210 கோடி முதலீட்டில் 7,900 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 4 புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.
அத்துடன், 4 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
நமது சாதனைகளை நாமே முறியடிக்கிறோம்
சமீபத்தில் நான் சென்று வந்த வெளிநாட்டு பயணத்தில், ரூ.15 ஆயிரத்து 516 கோடி முதலீடு என்றால், இங்கு ரூ.24 ஆயிரம் கோடி முதலீடுகள் கையெழுத்தாகியிருக்கின்றன. நமது சாதனைகளை நாமே முறியடிக்கிறோம்.
அடுத்தடுத்த மாதங்களுக்கும் இலக்கு கொடுத்திருக்கிறேன். பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டும் என்றால், அதற்கு தொழில் வளர்ச்சிதான் அடிப்படை. அதனால்தான் அதற்கான கட்டமைப்புகளை மிகவும் சிறப்பான வகையில் உருவாக்கி அவற்றை மேலும், மேலும் மேம்படுத்தி அதன் மூலமாக தொழில் செய்யும் சூழலை வலுப்படுத்துகிறோம். அதனால்தான், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்தியாவில் எங்கும் இல்லாத அளவில் 11.19 சதவீதத்தை தொட்டிருக்கிறது.
77 சதவீதம் செயல்பாட்டுக்கு வந்துள்ளன
இந்த வளர்ச்சியை இன்னும் அதி கரிக்கத் தான், முதலீட்டாளர்கள் மாநாடு களையும், முதலீட்டாளர்களுடனான சந்திப்புகளையும் தொடர்ச்சியாக நடத்தி வருகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந் தங்களில் 77 சதவீதம் செயல்பாட்டிற்கு வந்திருக்கின்றன.
எங்களுடைய குறிக்கோள், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டும் என்பதுதான். ஓசூர் உட்பட கிருஷ்ணகிரி மாவட் டத்தில் ஏராளமான புதிய தொழிற்சாலைகளை கொண்டு வந்திருக்கிறோம். ஒருகாலத்தில், சிறிய தொழில் நகரம் என்று சொல்லப்பட்ட ஓசூர், இன்று பல கம்பெனிகளுக்கு விரும்பப்பட்ட தொழிலிடமாக உருவெடுத் திருக்கிறது.
ஓசூரின் தொழில் வளர்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 1 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில். நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஓசூர் தொழில் வளர்ச்சிக்காக நாம் செய்ததில் முக்கியமானது சிப்காட் தொழில் பூங்கா. அங்கு 371 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள்.
மற்ற மாநிலங்களுக்கு சவால்விடும் நகரமாக ஓசூர் வளர்ந்துள்ளது. ஓசூரை நோக்கி தொழிற்சாலைகள் தொடர்ந்து சாரைசாரையாக வருகின் றன. இ-ஸ்கூட்டர் உற்பத்தியின் தலை நகராகவும் ஓசூர்தான் இருக்கிறது. ஓசூரின் அடுத்தகட்ட உயர்வுக்கான கதவுகளைத் இந்த மாநாடு திறக்கும். நான் அதை தொடர்ந்து கண்காணிப்பேன்.
இரும்பு மனிதர்
ஸ்டாலின் என்ற பெயருக்கு ‘இரும்பு மனிதர்’ என்று பொருள், அந்த உறுதி யுடன் என்னுடைய இலக்குகளில் வெற்றி பெறுவேன்.
இந்த அரசு மீது நம்பிக்கை வைத்து, முதலீடு செய்ய வந்திருக்கும் நீங்கள், தமிழ்நாட்டுடன் இணைந்து பயணம் செய்தால் கண்டிப்பாக வெற்றிதான். அதனால் எப்போதும் உங்கள் முதலீடுகளை தமிழ்நாட்டிலேயே மேற் கொள்ளுங்கள். நாளைய தமிழ்நாடு, வளர்ச்சிக்கு நல்லுதாரணமாக உலகத்திற்கு தன்னை வெளிப்படுத்தியிருக்கும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அமைச்சர்கள்
அமைச்சர்கள் அர.சக்கரபாணி, டி.ஆர்.பி.ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோபிநாத் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல் ஆனந்த். தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி.அருண்ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தாரேஸ் அகமது,தொழில் வணிக ஆணையர் நிர்மல்ராஜ். சிப்காட் மேலாண்மை இயக்குனர் செந்தில்ராஜ், மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் உள்பட அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.