மருத்துவத்துறையில் தமிழ்நாடு தான் இந்தியாவுக்கே வழிகாட்டி அமைச்சர் மா. சுப்பிரமணியன் பெருமிதம்

2 Min Read

சென்னை, செப்.12 மருத்துவத் துறையில் இந்தியாவுக்கு தமிழ்நாடு தான் வழிகாட்டி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் காப்பீடு திட்டத்தின் மூலம், 50-க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில், இதன் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்ச்சி அப்போலோ மருத்துவமனை சார்பில், சென்னை கிண்டியில் நேற்று (11.9.2025)  நடந்தது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு அப்போலோ மருத்துவர்களைப் பாராட்டினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதா வது:

தமிழ்நாட்டில் அப்போலோ போன்ற தனியார் மருத்துவமனை களில் அரசின் மருத்துவ சேவைகள் ஏழை, எளிய மக்களுக்கு முதல்வர் காப்பீடு திட்டத்தின் மூலம் தொடர்ந்து கிடைத்து வருகிறது. 2009-ஆம் ஆண்டு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது.

இந்த திட்டம் தொடங்கப்பட்டு 10ஆண்டுகளுக்குப் பிறகு, ஒன்றிய அரசின் மருத்துவத் துறை அலுவலர்கள், இந்திய அளவில் இத்திட்டத்தை செயல்படுத்த பிரதமர் விரும்புகிறார் எனக் கூறினர். அதைத் தொடர்ந்து, 2018-ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் பிரதமர் காப்பீடு திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது.

இதேபோல், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் குறித்து டில்லியில் மருத்துவத்துறை சார்பில் நடந்த கூட்டம் ஒன்றில், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அனைத்து மாநில அமைச்சர் களுக்கும் விளக்கினேன். அப்போது, இத்திட்டத்தையும் இந்தியா முழுவதும் செயல்படுத்த இருப்பதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார்.

இதேபோல், சமீபத்தில் தமிழ்நாடு வந்த ஒன்றிய சுகாதாரத் துறை அலுவலர்கள், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48’ திட்டம் செயல்பாடு குறித்து விளக்கங்களைக் கேட்டனர். அந்த வகையில், இந்த திட்டத்தைப் பின்பற்றி ஒன்றிய அரசும் ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறது. மருத்துவத் துறையில் தமிழ்நாடு தான் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் 1.47 கோடி குடும்பங்கள் காப்பீடு திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றன. 1,450 சிகிச்சைகளுக்கு மட்டுமே இத்திட்டத்தில் காப்பீடு தொகை வழங்கப்பட்டு கொண்டிருந்த நிலையில், தற்போது 2,053 சிகிச்சை களாக உயர்த்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *