கழகத் தலைவர் ஆசிரியர் கருத்துக்கு கைமேல் பலன் நோயாளிகள் இனி ‘மருத்துவப் பயனாளர்கள்’ என அழைக்கப்படுவர்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

4 Min Read

சென்னை, செப்.11  மருத்துவமனை நோயாளிகள் இனி ‘மருத்துவப் பயனாளர்கள்’ என அழைக்கப்படுவார்கள். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துக்கு கை மேல் கிடைத்த பலனாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கழகத் தலைவர் ஆசிரியர் கருத்து

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி முதலமைச்சர்  மு.க. ஸ்டாலினுக்கு  வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களது மேலான சிந்தனைக்கு, மருத்துவமனைகளில் ‘நோயாளிகள்’ (Patients) என்று தற்போது புழங்கி வரும் சொல்லுக்கு மாற்றாக ‘மருத்துவப் பயனாளிகள்’ (Medical Beneficiaries) என்ற சொல்லைப் பயன்படுத்தினால் அவர்களிடம் (நோயாளிகளிடம்) உள்ள நம்பிக்கைக் குறைவு சற்று மாற வாய்ப்புண்டு.

முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் ‘மாற்றுத் திறனாளிகளாக’ மாற்றி (உடல் ஊனமுற்றோர் என்பதைத் தவிர்த்து) ஒரு தன்னம்பிக்கையை ஊட்டியது போல, தங்களது ‘திராவிட மாடல்’ ஆட்சியில், இது தங்களுக்கு ஏற்கத்தக்கதாக   இருந்தால் ஆணை பிறப்பிக்கலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ஆசிரியர் கி. வீரமணி குறிப்பிட்டு இருந்தார்.  ஆசிரியரின் இந்த கருத்தை வரவேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2.8.2025 அன்று நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை திறந்து வைத்து பேசும்போது  ‘மருத்துவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், சில நாள்களுக்கு முன்னால், நம்முடைய மானமிகு திராவிடர் கழகத்தின் ஆசிரியர் அய்யா அவர்கள், எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார். அதில், மருத்துவமனைக்கு வருகின்றவர்களை நோயாளிகள் என்று அழைக்கக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். அதுவும் சரிதான்! ஏனென்றால், எல்லோருக்கும் உடலில் ஏதாவது ஒரு சிறிய பிரச்சினை இருக்கும்; அதற்காக அவர்களை நோயாளி என்று சொல்லக்கூடாது!

மருத்துவர்களையும் – மருத்துவமனைகளையும் நாடி வருகின்றவர்களை “மருத்துவப் பயனாளிகளாக” நாம் பார்க்க வேண்டும்! இந்த முகாம்களுக்கு வருகின்ற மக்களையும், மருத்துவப் பயனாளிகளாகதான் நீங்கள் பார்க்க வேண்டும்!’ என்று குறிப்பிட்டிருந்தார்.

 கைமேல் பலன்

கழகத் தலைவர் ஆசிரியர் கருத்துக்கு கைமேல் பலன் கிடைத்தாற்போல் நோயாளர்கள் இனி ‘மருத்துவப் பயனாளர்கள்’ என்று அழைக்கப்படுவர்கள் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பாக எச்.அய்.வி. எய்ட்ஸ் மற்றும் பல்வினை நோய்த் தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தினை தொடங்கி வைத்து பேசுகையில் அவர் இதை குறிப்பிட்டார்.

விழாவில் அவர் தனியார் மருத்துவ கல்லூரிகளில் கூட்டு மருந்து சிகிச்சையினை தொடங்கி வைத்தும், மாநில மற்றும் மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கியும், ‘வாழ்வியல் திறன்’ கல்வி திட்டத்தினை தொடங்கி வைத்தும் விழா பேருரையாற்றினார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘மருத்துவப் பயனாளர்கள் என்று அரசின் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மருத்துவம் மற்றும் மக்கள்  நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் ெசயலாளர் அறிவிப்பை அரசாணையாக வெளியிடுவதற்குரிய நடவடிக்கைகள் எடுத்து மிக விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஒப்புதலை பெற்று இனிமேல் நோயாளிகள் என்று சொல்லக் கூடாது.

‘மருத்துவப் பயனாளர்கள்’ என்று சொல்ல வேண்டும் என்கின்ற வகையில் அந்த வாக்கியம் மாற்றப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:

எச்.அய்.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் பாதிப்புகளால் சிகிச்சை பெற்று வருபவர்கள் தமிழ்நாட்டில் 1,39,350 பேர் இருக்கிறார்கள். அவர்களை பாதுகாக்கும் பொருட்டும், புதிய எச்.அய்.வி/எய்ட்ஸ் பால்வினை நோய்கள் பாதிப்புகள் வராமல் தடுக்கும் பொருட்டும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலோடு, கடந்த 4.5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தவகையில் நேற்று (10.9.2025) எச்.அய்.வி/எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்த் தொற்றுகள் குறித்த தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு மருத்துவத்துறையின் நிதிநிலை அறிக்கையில் எச்.அய்.வி/எய்ட்ஸ் பால்வினை தொற்றுகளுக்கு பல்வேறு புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது.

தனியார் மருத்துவமனை

அறிவிப்பு எண் 114இன்படி, தமிழ் நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கட்டண மில்லாமல் எச்.அய்.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களுக்கு சிகிச்சை வழங்கிட வேண்டும் என்கின்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில் முதற்கட்டமாக 4 தனியார் மருத்துவக்கல்லூரிகள் இந்த திட்டத்தில் இணைந்திருக்கிறார்கள். மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கன்னியாகுமரி மெடிக்கல் மிஷன், ஈரோடு நந்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருவள்ளுர் சிறீ வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய 4 தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் எச்.அய்.வி/எய்ட்ஸ், பால்வினை நோய்களுக்கு கட்டணமில்லாமல் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்க நேற்று (10.9.2025) முதல் தொடங்கி வைக்கப்படுகிறது. அதற்கான ஆணைகள் சம்மந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *