கணிதப்போட்டியில் சிறப்பிடம்
திருச்சி, செப்.11: கல்வியில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் நோக்கில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் கணித மன்றம் சார்பில், 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளி அளவில் நடைபெற்ற கணிதப் போட்டியில், சிறப்பாகப் பங்கேற்று, பல்வேறு பிரிவுகளில் வெற்றி சாதனைகளைப் பெற்றுள்ளனர். அறிவாற்றல், சிந்தனை திறன், கணிதத்தில் உள்ள ஆர்வம் ஆகியவை மாணவர்களுக்கு வெற்றியை அளித்தது.
1ஆம் வகுப்பு மாணவன் எஸ்.எம். சக்திதரன், கூட்டல் தொடர்பான போட்டியில் முதலிடம் பெற்று, கணிதத் திறமையில் தனது சிறப்பை நிரூபித்துள்ளார். 2ஆம் வகுப்பு மாணவன் எஸ். தரணீஸ் கண்ணன் பகா எண்கள் தொடர்பான போட்டியில் இரண்டாம் இடம் பெற்று, ஆர்வத்துடனும், ஆராய்ச்சி மனப்பான்மையுடனும் செயல்பட்டுள்ளார். 3ஆம் வகுப்பு மாணவன் S. ஃபாதில், பெருக்கல் தொடர்பான போட்டியில் மூன்றாம் இடம் பெற்று, கழித்தல் தொடர்பான அடிப்படை கணக்கு செயல்பாடுகளிலும் சிறப்பாக செயல்பட்டுள் ளார். இந்த வெற்றிகள், பள்ளியின் கல்வி நோக்கத்தை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்தது. பள்ளி முதல்வர், “கணிதத்தை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் சிந்திக்க, தீர்க்க, பகுத்தறிய கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இது. இதன் மூலம் கல்வியில் சிறந்து விளங்கும் தலைமுறை உருவாகும்” எனப் பாராட்டினார். மாணவர்களின் சாதனை, பள்ளியின் கல்வி முன்னேற்றத்திற்கும், அறிவுப் புலத்தின் வளர்ச் சிக்கும், சமூகத்தில் சிறந்த முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளது. இது எதிர்காலத்தில் மேலும் பல மாணவர்கள் அறிவு சார்ந்த போட்டிகளில் பங்கேற்று சாதனை படைக்க ஊக்கமளிக்கும் நிகழ்வாக அனைவராலும் பாராட்டப்பட்டது.
டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்பில் மாணவர்கள் அசத்தல் சாதனை!
திருச்சி, செப்.11: திருச்சி மாவட்ட டேக்வாண்டோ பயிற்சிக் குழுமம் மற்றும் அருணா விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மய்யம் இணைந்து, மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகளை 06.09.2025 மற்றும் 07.09.2025 ஆகிய தேதிகளில், திருச்சி புத்தூரில் மிகுந்த ஆர்வத்துடனும், சிறப்பான ஏற்பாடுகளுடனும் நடத்தினர். மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் அய்நூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தங்கள் திறமையைக் காட்டிய இந்தப் போட்டி, இளம் விளையாட்டு வீரர் களுக்கான முக்கியமான மேடையாக அமைந்தது.
இந்த மாவட்ட அளவிலான போட்டியில், பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் பல்வேறு எடைப்பிரிவுகளில் பங்கேற்று, சிறப்பாக செயல்பட்டு, மாவட்ட அளவிலான போட்டியில் முத்திரை பதித்தனர். மாணவர்கள் காட்டிய ஒழுக்கம், மனவலிமை, விடாமுயற்சி ஆகியவை அனைவரையும் ஈர்த்தது.
முக்கிய சாதனைகள்:
பி. ஆதில் சமி (11ஆம் வகுப்பு) – முதலிடம், தங்கப் பதக்கம் பி. மாலினி (10ஆம் வகுப்பு) – முதலிடம், தங்கப் பதக்கம் ஏ. தனிஸ்க் (10ஆம் வகுப்பு) – இரண்டாம் இடம், வெள்ளிப் பதக்கம்
எஸ். எம். முகமது ஹாரிஸ் அப்பாஸ் (10ஆம் வகுப்பு) – மூன்றாம் இடம், வெண்கலப் பதக்கம்
இந்த வெற்றிகள் பள்ளியின் பெயரை மாவட்டம் முழுவதும் உயர்த்தியுள்ளன. மாணவர்கள் சிறப்பாக விளையாடி, பள்ளியின் விளையாட்டு மேம்பாட்டிற்கு உறுதுணையாக உள்ளனர். அவர்களின் வெற்றியைத் தொடர்ந்து, பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் மாணவர்களை மனமார பாராட்டி, மேலும் உயர்ந்த சாதனைகளை நோக்கிப் பாடுபட ஊக்கமளித்தனர்.
மாணவர்கள் மாநில அளவிலான ‘கிக் பாக்சிங்’ போட்டியில் மகத்தான சாதனை!
திருப்பூர், செப்.11- தமிழ்நாடு முழுவதும் உள்ள இளம் வீரர் கள் பங்கேற்ற மாநில அளவிலான குத்துச் சண்டை வாகையர் பட்டம் (சாம்பியன்ஷிப்) – 2025 போட்டிகள், திருப்பூர் மாவட்டத்தில் 07.09.2025 அன்று சிறப்பாக நடை பெற்றது.
இந்திய கிக் பாக்சிங் அமைப்பு (IAKO) அங்கீகாரத்துடன், தமிழ்நாடு கிக் பாக்சிங் சங்கம் (TNKA) மற்றும் திருப்பூர் மாவட்ட கிக் பாக்சிங் சங்கம் (TDKA) இணைந்து நடத்திய இப்போட்டியில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி சி.ஷிஃபா மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர் இ.ஜீவன், ஆகியோர் தனது அசாதாரணத் திறமையால் அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.
மியூசிக்கல் ஃபார்ம்ஸ் பிரிவில் பங்கேற்ற ஜீவன் மற்றும் ஷிஃபா இருவரும், துல்லியமான அசைவுகள், வேகமான இயக்கங்கள் மற்றும் கட்டுப்பாடான பயிற்சியின் மூலம் சிறந்தத் திறமைகளைக் காட்டி ஷிஃபா முதலிடத்தோடு தங்கப் பதக்கமும், ஜீவன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும் வென்றனர்
நடுவர்களின் பாராட்டு
நடுவர்களாகப் பங்கேற்றவர்கள், மாணவர்களின் மனவலிமை, உறுதியான பயிற்சி மற்றும் விளையாட்டு ஒழுக்கத்தை சிறப்பாக பாராட்டினர். போட்டி முடிவில், தமிழ்நாடு கிக் பாக்சிங் சங்கத்தின் தலைவர் சென்சாய் ஆர். கராத்தே பிரவீன், பொதுச்செயலாளர் அசான் எஸ்.மூர்த்தி, திருப்பூர் மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கத்தின் பொதுச்செயலாளர் மாஸ்டர் கே.சபரீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு, ஷிஃபா மற் றும் ஜீவன் உள்ளிட்ட வெற்றி பெற்ற வீரர் களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
முன்னேற வாழ்த்துகள்
இந்த வெற்றி, மாணவர்களின் கடுமையான பயிற்சி மற்றும் விளையாட்டு மீதான ஆர்வத்தின் பலனாகும். எதிர்காலத்தில் தேசிய மற்றும் பன்னாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்குவார் என அவரது பயிற்சியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்தனர். தேசிய அளவில் விளையாட்டு மேம்பாட்டிற்கு இந்த சாதனை ஊக்கமாக அமையும் என பள்ளித் தாளாளர்,முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பணித் தோழர்கள் அனைவரும் பாராட்டினர்.
சிலம்பம் சுற்றி சாதனை
திருச்சி, செப்.11- திருச்சி, இன்ஃபண்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில், தேசிய சிலம்பப் பயிற்சி பள்ளிகள் கூட்டமைப்பு, தமிழ்நாடு விளையாட்டு மற்றும் கல்வி மேம்பாடு கூட்டமைப்பு, ஆகியவை இணைந்து சிலம்பம், பரதநாட்டியம், உடற்பயிற்சி (யோகாசனம்) மற்றும் கராத்தே உள்ளிட்ட பல்வேறு கலைகளைத் தொடர்ந்து ஒரு மணி நேரம் எந்தவித இடைவெளியும் இல்லாமல் நிகழ்த்தும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவன் ஆர்.தேவ் தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பம் சுழற்றி சாதனை படைத்தார்.. மாணவனின் இச் சாதனையை , சாதனைத் தமிழர் உலக சாதனை புத்தகம் அங்கீகரித்து, சான்றிதழ், பதக்கம் மற்றும் வெற்றிக் கோப்பையை வழங்கிச் சிறப்பித்தது. சாதனை மாணவனைப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.
கம்புச்சண்டை போட்டியில் முதலிடம்
தங்கப்பதக்கம் வென்றனர்
திருச்சி, செப்.11- இந்திய சிலம்ப மேம்பாட்டுக் கழகம், தமிழன் சிலம்பப் பாசறை, இயல் சிலம்பப் பயிற்சி மய்யம், மற்றும் திருச்சி மாவட்ட சிலம்பாட்டக் கழகம் இணைந்து நடத்திய மாநில அளவிலான சிலம்பப் போட்டிகள் 31.08.2025 அன்று, திருச்சி , இன்ஃபண்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த அய்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சிறப்பாக பங்கேற்றனர். இதில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவர்கள் ஆர்.கிர்த்திக் வாசன் மற்றும் கே. சிறீ ஹரி ராம் ஆகியோர் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான கம்புச் சண்டை போட்டியில் முதலிடத்தோடு, தங்கப் பதக்கம் வென்றனர்.
பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள், மாணவர்களின் வெற்றியைப் பாராட்டி, எதிர்காலத்திலும் இன்னும் அதிக சாதனைகளைப் படைக்க அவர்களுக்குத் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.