சென்னை, செப்.11- சென்னை பாரிமுனை பேருந்து நிலையத்தில் ஒருங்கிணைந்த வசதிகளை கொண்ட ‘பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து வளாகம்’ (மல்டி மாடல் வளாகம்) உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் அருகில் பழுதடைந்துள்ள குறளகம் கட்டடத்தையும் இடித்து இத்திட்டத்துடன் இணைத்து பெரிய பேருந்து நிலையமும், வணிக வளாகமும் கட்டுவதற்கு தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் ஆலோசனை வழங்கியது.
ஒருங்கிணைந்த போக்குவரத்து போலீஸ் நிலையம்
சென்னை மாநகராட்சி மூலம் பாரிமுனையில் உள்ள குறளகத்தை உள்ளடக்கிய பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்துக்கான பேருந்து நிலையம் அமைக்க ரூ.823 கோடிக்கான திருத்திய நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவை இணைந்து மேற்கொள்கின்றன. தற்போது இதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
பாரிமுனையில் 27 மாடி மய்ய கோபுரத்துடன் அமைக்கப்படும் மல்டி மாடல் வணிக மய்யம் 4.42 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. பாரிமுனையின் பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்துள்ள விற்பனையாளர்களுக்கு 200-க்கும் மேற்பட்டேருக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டவுடன், மெட்ரோ நிறுவனம் ரூ.823 கோடி செலவில் மல்டி மாடல் வளாகத்தை கட்டுவதற் கான கட்டுமானத்தை தொடங்க திட்ட மிடப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் 2 அடித்தளங்களுடன் 10 தளங்களும், பேருந்து நிலையத்திற்கு 2 தளங்களும், வணிக நிறுவனங்களுக்கு 6 தளங்களும் இருக்கும். இதில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், ஓய்வறைகள், பயணச்சீட்டு விநியோகம் பகுதி, காத்திருப்பு பகுதி மற்றும் பிற வசதிகளும் இருக்கும். சுரங்கப் பாதைகள் கட்டிடத்தை உயர் நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் குறளகத்துடன் இணைக்கும். இதற்கான கட்டுமான பணி தொடங்குவதற்கு முன்பாக மண் பரிசோதனை தற்போது தொடங்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.