ஒரு தகவலை உங்களிடம் பலமுறை சொல்லி யிருக்கிறேன்.
முதல் முறையாக வெற்றிப் பெற்றவுடன், எம்.ஜி.ஆர். அவர்கள், எழுத்தாளர் திரு.சோலை மூலமாக எனக்கு ஒரு தகவல் சொல்லி அனுப்பினார்.
எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்ததினால், நாங்கள் பிரிந்தோம். இப்போது இணையலாம் என்று நினைக்கிறேன். கலைஞரும், நானும் ஒன்று சேர விரும்புகிறோம் என்று சொல்லியதைப்பற்றி, ஒரு மணிநேரத்திற்குமேலாக என்னிடம் சோலை, பேசினார்.
கலைஞரிடம் இந்தத் தகவலைச் சொல்லுங்கள் என்று சொன்னார்.
அன்றைக்கு முதலமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தார். எதிர்க்கட்சித் தலைவராக கலைஞர் இருந்தார். அப்போது பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்புச் சட்டம் கொண்டு வந்திருந்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.
அந்தக் காலகட்டத்தில், கலைஞரிடம் போய் நான் இந்தத் தகவலைச் சொன்னேன்.
உடனே கலைஞர் அவர்கள் கொஞ்சம் தயங்கி, ‘‘ஏற்கெனவே ஒருமுறை இதுபோன்று சொன்னார்; பிறகு ஏமாற்றினார். உங்கள்மூலம் இரண்டாவது முறையாக ஏமாற்றுகிறாரா?’’ என்று கேட்டார்.
‘‘இல்லீங்க, ஏமாற்றுவதுபோன்று தெரியவில்லை. அவர் சொல்வது மிகவும் உண்மைபோல்தான் எனக்குத் தோன்றுகிறது’’ என்றேன்.
இந்த இணைப்பு விவகாரம்பற்றிய தகவல்களை யெல்லாம் நான் வெளியிட்டவையல்ல. சோலை அவர்கள்தான் வெளியிட்டார்.
ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்யாமல் இருந்தனர்!
எம்.ஜி.ஆர். அவர்கள், “உடனடியாக நாமெல்லாம் சேர்ந்தால், கட்சித் தொண்டர்கள் இணையமாட்டார்கள். ஆகவே, சில மாதங்கள், ஒருவருக்கொருவர் விமர்ச னம் செய்யாமல் இருக்கவேண்டும்’’ என்றார். அதை ஒப்புக்கொண்டார் கலைஞர் அவர்கள்.
பட்ஜெட் உரையில்கூட, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் அவர்களும், எம்.ஜி.ஆர். அவர்களும் ஒருவருக்கொருவர் எதிர்த்துப் பேசவில்லை.
டில்லியில் இருந்த ஒன்றிய அரசு, இவர்கள் ஒன்று சேரக்கூடாது என்று நினைத்தனர். அ.தி.மு.க. கட்சியை உருவாக்கியதே டில்லிதான் என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆகவே, இந்தக் கட்சிகள் பிரிந்தே இருந்தால்தான் நமக்கு வசதி என்று அன்றைக்கும் டில்லி ஒன்றிய அரசு நினைத்தது.
இன்றைக்கு அந்தத் தீ அதிகமாக இருக்கிறது. அன்றைக்காவது அவர்கள் ஏற்கெனவே காலூன்றி இருந்தார்கள். ஆனால், இன்றைக்கு இந்தக் கட்சி, காலூன்றவே இல்லை.
ஆகவே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தத் திட்டத்தை நடத்துகிறது.
இதற்கும், பா.ஜ.க.விற்கும், சம்பந்தம் இல்லை என்று அ.தி.மு.க.வினர் எப்படி சொல்ல முடியும்?
– செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்