முதலீடுகளை ஈர்த்ததா அ.தி.மு.க. ஆட்சி! அறியாமையை காட்டிக்கொள்வதற்காகவே அறிக்கை வெளியிட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

சென்னை, செப்.10 அ.தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களை திராவிட மாடல் அரசின் கணக்கில் எழுத வேண்டிய அவசியம் இந்த அரசுக்கு இல்லை என்று அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கூறியுள்ளார்.

அமைச்சர் பி.ஆர்.டி. ராஜா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

அறியாமை

முந்தைய அ.தி.மு.க ஆட்சியின் 10 ஆண்டுகால சீர்கெட்ட நிர்வாகத்தால் தமிழ்நாடு என்று பெயரைக் கேட்டாலே தொழில் முதலீட்டாளர்கள் தெறித்து ஓடிக் கொண்டிருந்த நிலையை மாற்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, கடந்த நான்காண்டுகளில் தொழில்துறையில் தமிழ்நாட்டை உயர்வான நிலைக்குக் கொண்டு வந்திருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சலுடன் அறிக்கை விடும் எதிர்க்கட்சித் தலைவரின் அறியாமையைப் பார்த்து பரிதாபப்படுகிறேன்.

முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்களால் எவ்வளவு முதலீடு வந்தது என்று ‘திரும்பத் திரும்ப பேசும்’ அரசியல் களத்தின் வடிவேலு வாகியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர். முதலமைச்சர் தன்னுடைய ஜெர்மனி-இங்கிலாந்து பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பே முந்தைய வெளிநாட்டுப் பயணங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் எவ்வளவு முதலீடுகளாக மாறி, எங்கெங்கே தொழில்நிறுவனங்கள், எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு என்பதை ஊடகங்களிடம் தெளிவாக விளக்கிவிட்டுத்தான் புறப்பட்டார்.

இது எதுவும் அறியாமலும்-புரிந்து கொள்ளத் தெரியாமலும் சொந்தக் கட்சிப் பிரச்சினைகளால் கோமாவில் இருந்து திடீரென விழித்து, ‘அன்னைக்கு காலையில 6 மணிக்கு இருக்கும். கோழி கொக்கரக்கோன்னு கூவுச்சு..’ என்று எதிர்க்கட்சித் தலைவர், சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார். அவருடைய கேள்விகளுக்கு தொழில்துறை மானியக் கோரிக்கையிலும், அதன்பிறகு பல அறிக்கைகளிலும் தெளிவாக பதில் தரப்பட்டுள்ளது. சேக்கிழார் எழுதிய இராமாயணத்தைப் படித்தவருக்கு தொழில்துறையின் அறிக்கையில் உள்ள புள்ளிவிவரங்கள் எந்த அளவுக்குப் புரியும் என்றும் தெரியவில்லை.

வேலை வாய்ப்பு

சுருக்கமாக சொல்ல வேண்டு மென்றால், முதலமைச்சர் இதற்கு முன் பயணித்த அய்க்கிய அரபு நாடுகளில் 6 ஒப்பந்தங்கள், 6100 கோடி முதலீடு, சிங்கப்பூர் 1 ஒப்பந்தம், 312 கோடி முதலீடு, ஜப்பான் 7 ஒப்பந்தங்கள், 1030 கோடி முதலீடு, ஸ்பெய்ன் 3 ஒப்பந்தங்கள் 3440 கோடி முதலீடு, அமெரிக்கா 19 ஒப்பந்தங்கள் 7616 கோடி ரூபாய் முதலீடு எனப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அந்த 36 ஒப்பந்தங்களில் Yield Engineering Services, Infinix Services, Rockwell Automation உள்ளிட்ட 12 ஒப்பந்தங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி நிலையை எட்டிவிட்டன. 11 நிறுவனங்களின் நில எடுப்பு-கட்டுமானப்பணிகள் போன்றவை நடைபெற்று வருகின்றன. சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, திருச்சி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் முதலீடுகள் செய்யப்பட்டு அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களை திராவிட மாடல் அரசின் கணக்கில் எழுத வேண்டிய அவசியம் இந்த அரசுக்கு இல்லை. ஆனால், ஒப்பந்தம் போட்டுவிட்டு எதையுமே செய்யாத உங்களின் உதவாக்கரை ஆட்சியைப் போல இல்லாமல், நீங்கள் போட்ட ஒப்பந்தங்களையும் நம் தமிழ்நாட்டுக்கான முதலீடுகளாக மாற்றும் முயற்சியை முதலமைச்சர் தலைமையிலான அரசு மேற்கொண்டு வரும் நிலையில், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல உங்களின் அமெரிக்க பயணத்தின் லட்சணம் பல்லைக் காட்டுகிறது.

2019ஆம் ஆண்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அன்றைய முதலமைச்சராக அமெரிக்காவுக்கு சென்ற நீங்கள் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 27. இதன் மூலம் 5087 கோடி ரூபாய் முதலீடு கிடைக்குமென்றும் 24,720 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் சொன்னீர்கள். ஆனால், உண்மை நிலையைத் தேடினால், ஒப்பந்தம் போடப்பட்ட ரூ.5087 கோடியில் 25% முதலீடு கூட வரவில்லை.

இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *