காணொலி மூலம் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரை
சென்னை, செப்.10- ‘ஓய்வறியாச் சூரியனாக உழைப்போம். 2026-லும் நாமே உதிப்போம்’ என்று காணொலி காட்சி மூலம் நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்தார்.
ஓரணியில் தமிழ்நாடு
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் மாவட்ட செயலாளர் களிடம் நேற்று (9.9.2025) ஆலோசனை மேற்கொண்டார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில், படுபாதாளத்துக்குப்போன தமிழ்நாட்டின் வளர்ச்சியை மீட்டெடுத்து, 11.19 சதவீதம் வளர்ச்சியோடு, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக நம் திராவிட மாடல் ஆட்சியில் உயர்த்தி இருக்கிறோம். வரவிருக்கும் 2026 தேர்தலிலும் மாபெரும் வெற்றியைப் பெறவேண்டும். இதற்கான அடித்தளமாகத் தான், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பைக் கடந்த ஜூலை மாதம் 3ஆம் தேதி தொடங்கினோம். சர்வாதிகார மனப்பான்மையோடு தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜனதா அரசுக்கு எதிராக, தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காக்க, தமிழ்நாட்டு மக்களை ஒன்றிணைக்க நீங்கள் எல்லோரும் களத்தில் சிறப்பாகப் பணியாற்றினீர்கள்.
ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்களை, ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைத்துள்ளோம்.
தமிழ்நாட்டுக்கான
வெற்றி
வெற்றி
உங்கள் எல்லாருக்கும் ஏன், உங்கள் மூலமாக கட்சியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சொல்கிறேன், தேர்தல் முடியும் வரைக்கும் ‘ஓய்வு’ என்ற சொல்லையே மறந்துவிடுங்கள். ஏனென்றால், 2026இல் நாம் பெறப்போகும் வெற்றி, தி.மு.க.வுக்கான வெற்றி மட்டுமல்ல; ஒட்டுமொத்தத்தமிழ்நாட்டுக்கான வெற்றி.
மக்களை ஒன்றிணைத்து, அவர்களின் துணையோடு தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காக்க நம்மால் தான் முடியும். அதற்கான வலிமையை நாம் பெறப்போகும் நாள் தான், வரும் செப்டம்பர் 17ஆம் தேதி முப்பெரும் விழா.
அதற்கு முன், நம்மையெல்லாம் ஆளாக்கிய அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி, 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் இணைந்த குடும்பங்களை அழைத்து, பூத் ஏஜெண்டுகள், பூத் கமிட்டிகளின் கூட்டங்களை நடத்த வேண்டும். இது நிறைவு விழா கூட்டம் இல்லை. இதுதான் தொடக்க விழா கூட்டம்.
தமிழ்நாட்டின் நலனைப் பாதுகாக்கும் பாதுகாவலர்களாக, ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் நம்மோடு இணைந்திருக்கும் எல்லோரையும் தேர்தல் வரைக்கும் நம்முடனே இணைத்துக் கொண்டு களப்பணியாற்ற வேண்டும். அதற்கான உறுதி மொழியை அந்தக் கூட்டங்களில் எல்லோரும் எடுக்க வேண்டும்.முப்பெரும் விழாவில் தி.மு.க. தொண்டர்கள் அனைவரையும் ஒருசேர ஒரே இடத்தில் பார்ப்பதற்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.
திராவிட மாடல் 2.0
லட்சக்கணக்கான தொண்டர்கள் கரூர் நோக்கி திரண்டு வருவார்கள். எல்லோரும் பாதுகாப்பாக வந்து செல்வதை உறுதி செய்யுங்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் இருக்க வேண்டும். மேற்கு மண்டலத் தேர்தல் பொறுப்பாளரும், மாவட்ட செயலாளருமான செந்தில்பாலாஜி, விழாவுக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்து வருகிறார். அத்தனை மாவட்ட செயலாளர்களும் செந்தில் பாலாஜிக்குத் துணையாக இருக்கவேண்டும்.
முப்பெரும் விழா முடிந்த பிறகு, செப்டம்பர் 20ஆம் தேதி, ஓரணியில் தமிழ்நாடு கூட்டங்களை அமைப்பு ரீதியிலான மாவட்டங்கள் வாரியாக நடத்த வேண்டும். நமது அரசின் திட்டங்களால், மக்களிடையே நமக்கு இருக்கும் ஆதரவு உணர்வை அப்படியே தேர்தல் வரைக்கும் எடுத்துச் சென்று அறுவடை செய்ய ஒவ்வொருவரும் களத்தில் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். அடுத்து நமது இலக்கு ஒன்று தான், அது, 2026இல் திராவிட மாடல் 2.0 அமைய வேண்டும் என்பதே.
ஓய்வறியா சூரியனாக உழைப்போம்
அதற்கு நான் உங்களிடம். கேட்பது ஒன்றே ஒன்று தான், தேர்தல் நாள் வரைக்கும் பசி, தூக்கம், ஓய்வை மறந்து உழைப்பை கொடுங்கள். ஓய்வறியாச் சூரியனாக உழைப்போம். 2026-லும் நாமே உதிப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் கனிமொழி, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை அமைப்புச் செயலாளர் எஸ்.ஆஸ்டின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.