திருவனந்தபுரம் செப்.9- ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள புதிய ஜி.எஸ்.டி வரி விதிப்பு மாற்றங்கள், பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே லாபத்தை ஏற்படுத்தும் என்றும், மாநில அரசுகளின் வருவாயை மேலும் குறைக்கும் என்றும் கேரள நிதி அமைச்சர் கே.என். பால கோபால் தெரிவித்துள்ளார்.
புதிய ஜி.எஸ்.டி. வரி
மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து அனைத்துப் பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜி.எஸ்.டி மூலம் ஒன்றிய அரசுக்கு அதிக வருமானம் கிடைத்துவந்தாலும், மாநில அரசுகளின் வருமானம் பெரிதும் குறைந்துள்ளது. இதற்கு ஈடாக ஒன்றிய அரசு வழங்கிவந்த சிறப்பு நிதி விரைவில் நிறுத்தப்பட உள்ளது. புதிய வரி மாற்றத்தால், கேரளாவுக்கு கடந்த ஆண்டு கிடைக்க வேண்டிய ரூ. 51,000 கோடியில், ஜி.எஸ்.டி மூலம் ரூ. 32,000 கோடி மட்டுமே கிடைத்தது. புதிய மாற்றங்கள் மேலும் ரூ. 9,000 கோடியை குறைக்கக்கூடும் என்று அமைச்சர் பால கோபால் கவலை தெரிவித்துள்ளார்.
ஆய்வு இல்லாமல்….
கே.என்.பால கோபால் மேலும் பேசுகையில், “போதிய ஆய்வு நடத்தாமல் ஒன்றிய அரசு இந்த வரி குறைப்பு திட்டத்தை செயல்படுத்த முன்வந்துள்ளது. எதிர்கட்சி மாநிலங்கள் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களும் இதன் மூலம் பாதிக்கப்படும்.
எனவே, மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய புதிய திட்டம் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இந்தப் புதிய வரி மாற்றங்கள் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களை நேரடியாக பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.