பா.ஜனதாவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது தமிழ்நாட்டில் வாக்குத்திருட்டை அரங்கேற்ற விடமாட்டோம் நெல்லை காங்கிரஸ் மாநாட்டில் ப.சிதம்பரம் பேச்சு

2 Min Read

நெல்லை, செப்.9- தி.மு.க. கூட்டணி வலிமையாக உள்ளது. எனவே தமிழ்நாட்டில் வாக்கு திருட்டை அரங்கேற்ற விடமாட்டோம்” என்று நெல்லையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.

காங்கிரஸ் மாநாடு

காங்கிரஸ் கட்சி சார்பில், வாக்குத் திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை காப்போம்” என்ற அரசியல் மாநாடு நெல்லை பாளையங்கோட்டை பெல் மைதானத்தில்   7.9.2025 அன்று இரவு நடைபெற்றது.

மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் வரவேற்று பேசினார். நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் எம்.பி. தொடக்க உரையாற்றினார்.

இந்த மாநாட்டில் மேனாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:-

வாக்குத் திருட்டு அம்பலம்

கருநாடக மாநிலம் மகாதேவபுரா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியில் போலியான முகவரியில், போலியான நபர்களை சேர்ப்பது போன்ற வகையில் வாக்கு திருட்டு நடத்தப்பட்டது. அவர்கள் பெயரில் பா.ஜனதா கட்சியினர் வாக்களித்து தேர்தல் நடந்தது. இதையெல்லாம் அம்பலப்படுத்திய பிறகும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த மறுக்கிறது. அந்த சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கிய நாடாளுமன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சி இழந்தது.

தமிழ்நாட்டிலும் வாக்குத் திருட வாய்ப்பு

ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் நூற்றுக்க ணக்கான நபர்கள் குடிபெயர்ந்து விட்டனர், காணாமல் போய்விட்டனர், மறைந்துவிட்டனர் என தேர்தல் ஆணையம் இயற்கைக்கு மாறான தில்லுமுல்லு செய்துள்ளது.

பீகார், மராட்டியம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் நடந்தது போல் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இருப்பதால் இங்கேயும் வாக்கு திருட்டு நடக்க வாய்ப்பு உள்ளது.

அரங்கேற்ற விடமாட்டாம்

ஆனால் தமிழ்நாட்டில் வாக்குதிருட்டை அரங்கேற்ற விடமாட்டோம். தவறான ஒருவரை சேர்க்கவும், சரியான நபரை நீக்கவும் அனுமதிக்க கூடாது. வாக்கு திருட்டுக்கான காரணம் பாரதீய ஜனதா கட்சியும், தேர்தல் ஆணையமும் கூட்டணி வைத்துள்ளதுதான். தற்போது பா.ஜனதாவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. இன்னும் 8 மாதங்கள் விழிப்புடன் இருந்து வாக்குத்திருட்டை தடுத்து தமிழ்நாட்டில் நியாயமான தேர்தலை நடத்த உறுதுணையாக இருக்க வேண்டும்.

வலிமையான
கூட்டணி

தி.மு.க. தமிழ்நாட்டில் வலிமையான கூட்டணியாக உள்ளது. ஆனால் அ.தி.மு.க. வலிமை குறைந்தது என மதிப்பிட மாட்டேன். தமிழ்நாட்டில் கட்டுகோப்பான அணிகள் உள்ளன. தமிழ்நாட்டில் தி.மு.க., அ தி.மு.க என 2 அணிகள் இருந்தால் வாக்கு திருட்டு நடக்காது. ஆனால் தற்போது அ.தி.மு.க அணியில் பா.ஜனதா புகுந்துள்ளது.

ஆமை புகுந்த வீடு உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது. அதேபோல் பா.ஜனதா புகுந்த இடம் உருப்படாது. அவர்களது கூட்டணியும் உருப்படாது.

இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

கொல்லைப்புறமாக ஆட்சி

அதைத்தொடர்ந்து, மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது:-

நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும் எப்போது வேண்டுமானாலும் பா.ஜனதாவினரின்  காலை வாரலாம் என காத்துக்கொண்டி ருக்கிறார்கள். வாக்கு திருட்டு மூலம் பா.ஜனதா 3 முறை ஆட்சி அமைத்துள்ளது.

அரசியலமைப்பு சட்டத்தை மதிப்பவர்கள் காங்கிரஸ் கட்சியினர். எனவே கொல்லைப்புறமாக ஆட்சி அமைப்பதை விரும்பாமல் அதனை புறக்கணித்தார்கள்.

இந்த மாநாடு முன்னோட்டம் தான். விரைவில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்க்கே ஆகியோர் தமிழ்நாட்டிற்கு வர உள்ளனர். 3 லட்சம் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொள்ளும் கிராம கமிட்டி உறுப்பினர்கள் மாநாட்டில் தேசிய தலைவர்கள் உரையாற்ற உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *