முதியோர்கள் கீழே விழுவதைத் தடுக்க மருத்துவ ஆலோசனை (2)

5 Min Read

மருத்துவம்

முதியோர்கள் கீழே விழுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இதற்கான காரணத்தைக் கண்டறிவது அவசியம்.

முழு உடல் பரிசோதனைகள்

கீழே விழுந்தவர்களுக்கு முதல் உதவி அளித்தபின்பு அவர்கள் விழுந்ததற்கான காரணத்தை கண்டறிய முயல வேண்டும். விழுவதற்கு முன்பு மார்பு வலி, படபடப்பு, மயக்கம், மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய தொல்லைகளைப் பற்றி அறிய வேண்டும். விழுந்த பின்னர் சுயநினைவை இழந்துவிட்டாரா என்பதையும் அறிய வேண்டும். இதைத் தவிர கீழே விழுதலுக்கு சுற்றுப்புறச் சூழல் சார்ந்த தொல்லைகளையும் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். மேலும் அவருக்கு இருக்கும் நோய்களைப் பற்றியும், தற்பொழுது எடுத்து கொள்ளும் மருந்துகளைப் பற்றியும் மற்றும் மது அருந்துதலைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

உடல் பரிசோதனையில் கண் பார்வை, காது கேட்கும் திறன், காய்ச்சல், நாடித் துடிப்பு, இரத்த அழுத்தம் (மூன்று நிலைகளில் – படுத்து இருக்கும் போதும், உட்காரும் போதும், நிற்கும் போதும்) கண்டு அறிய வேண்டும், கழுத்து பகுதி சரியான நிலையில் அசைக்க முடிகிறதா என்பதை பார்க்கவேண்டும். நரம்பு பரிசோதனையில் சதையின் வலிமை மற்றும் தொடு உணர்ச்சி குறைபாடு ஆகியவற்றை பரிசோதனை செய்யவேண்டும். முதியவரால் நடக்க முடிந்தால் பிறர் உதவியின்றி, எப்படி நடக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.

நிலை தடுமாற்றத்தை அறியும் பரிசோதனைகள்

ராம்பெர்க் பரிசோதனை: முதியவரின் கால்களை நெருக்கமாக வைத்து நிற்கச் சொல்லவேண்டும். பின்னர் கண்களை திறந்து மறுபடியும் கண்களை மூடி திறக்கச் சொல்ல வேண்டும். கண்களை மூடியபின்னர் அவரின் நிலை தடுமாறினால் அவர் கீழே விழுவதற்கு நிலை தடுமாற்றம் தான் காரணம் என்று தெரிந்து கொள்ளலாம்.

நேர்கோட்டில் அடிமேல் அடி வைத்து நடக்கச் சொல்ல வேண்டும். எவ்வித சிரமமும் இன்றி 10 அடித் துாரத்தை சரியாக நடந்தால், அவர் உடலில் பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் தொல்லை எதுவும் இல்லை என்பதை அறியலாம்.

முதியவர் கைப்பிடியுள்ள நாற்காலியிலிருந்து எழுந்து நேர் கோட்டில் 10 அடி தூரம் நடந்து, பின்பு திரும்பி வந்து நாற்காலியில் அமரவேண்டும். இந்த பரிசோதனை செய்ய 12 வினாடிக்கு மேல் ஆனால் அவருக்கு கீழே விழும் வாய்ப்பு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த பரிசோதனையின் மூலம் கால்களில் உள்ள பலம், நிற்கும் போது ஏற்படும் நிலைதடுமாற்றம், உட்காரும் போது ஏற்படும் நிலைதடுமாற்றம் மற்றும் சரியாக நடை இல்லாத நிலை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

முழு இரத்த பரிசோதனை, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, உப்பின் அளவு, ஈ.சி.ஜி, எக்கோ, கழுத்துப் பகுதி எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஆகியவற்றை தேவைப்பட்டால் எடுக்க வேண்டும்.

சிகிச்சை முறை

  • கீழே விழுதலுக்கு நோய் ஒரு காரணமாக இருந்தால் அதற்கு தக்க சிகிச்சை அளிக்க வேண்டும். உ.ம். உதறுவாதம் என்ற பார்க்கின்சன்ஸ் நோய், பக்கவாதம்
  • கீழே விழுவதற்கு மருந்துகள் ஒரு காரணமாக இருந்தால் அதை நிறுத்தவேண்டும் அல்லது குறைக்க வேண்டும்.
  • எலும்பு வலிமை இழந்து இருப்பின் அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கவேண்டும்.
  • வைட்டமின் டி குறைவு உள்ளவர்களுக்கு, வைட்டமின் டி மற்றம் கால்சியம் மாத்திரையை கொடுக்க வேண்டும். இத்தோடு தினமும் 30 – 60 நிமிடங்கள் வெய்யில் உடம்பில் படுமாறு அறிவுறுத்த வேண்டும்.
  • மூட்டு தேய்மானம் உள்ளவர்களுக்கு வலி நிவாரணி, இயன்முறை சிகிச்சை மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மூலம் கீழே விழுதலை தடுக்கமுடியும்.
  • பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு கண் கண்ணாடியை மாற்றியோ அல்லது கண் புரை அறுவை சிகிச்சை மூலமோ கீழே விழுதலை தடுக்க முடியும்.

இயன்முறை சிகிச்சை முறை

சிறப்பு பயிற்சி பெற்ற இயன்முறை சிகிச்சை நிபுணர் உடலை சமநிலையில் வைத்துக் கொள்ள வேண்டி சில பயிற்சி முறைகளைச் சொல்லிக் கொடுப்பார். இதைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் நிலை தடுமாற்றம் மெதுவாகக் குறையும். இந்த சிகிச்சை முறையை தொடர்ந்து குறைந்தது மூன்று மாதம் செய்தால்தான் தக்க குணம் தெரியும்.

எலும்பு வலிமை இழத்தல் நிலையில் உள்ளவர்களுக்கு சதையை வலிமையடையச் செய்யும் பயிற்சிகளை கொடுக்கவேண்டும்.

கீழே விழுதலை தடுக்க கைத்தடி மற்றும் வாக்கர் போன்ற உபகரணங்களை உபயோகிக்கலாம். கீழே விழ வாய்ப்பு அதிகம் உள்ளவர்களுக்கு (இரண்டு முழங்கால்களில் மூட்டு தேய்மானம் அல்லது கால்களில் வலிமை இழந்தவர்கள்) சக்கரம் உள்ள வாக்கரை உபயோகிக்கலாம்.

  • பொருத்தமான காலணிகள் அணிய வேண்டும்.
  • தேவையான வெளிச்சம் அளிக்கும் விளக்குகளை பொருத்த வேண்டும்.
  • இரவு விளக்குகளை பொருத்த வேண்டும்
  • அறையில் நுழைந்த உடனே விளக்கு போடும் பட்டனை தொடும் உயர்நிலையில் பொறுத்தவேண்டும்.
  • தரை விரிப்புகளை முடிந்தவரை போடாமல் இருப்பது நல்லது
  • மேசை மற்றும் நாற்காலிகள் மிகவும் உறுதியுடனும், நாற்காலியில் கைப்பிடி இருப்பதாகவும் இருக்கவேண்டும்.
  • அதிகமாக உபயோகிக்கப் படுத்தப்படும் அறைகளில் தேவையற்ற சாமான்களை எடுத்து விட வேண்டும்.
  • குளியல் அறையில் உள்ள தாழ்ப்பாள்களை நீக்கிவிட வேண்டும். குளியல் அறையில் வெளியிருந்து தாழ்ப்பாளை திறக்கும்மாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • படிக்கட்டுகளின் உயரம் 15 செ.மீ.க்கு மேல் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

கீழே விழுதலை தடுக்க…

  • உடலை முழுமையாக பரிசோதனை செய்து, கீழே விழுவதற்கு நோய்கள் ஏதேனும் காரணமா என கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.
  • கண் பார்வை சரியாக உள்ளதா என்பதை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
  • பார்வைக் குறைவால் அணியும் கண்ணாடி சரியில்லாமல் போனால் கூட, கீழே விழ ஒரு காரணமாக அமையும். ஆகவே, சரியான கண்ணாடி அணிவது மிகவும் அவசியம்.
  • காதை முழுமையாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காதில் அழுக்கு (wax) சுத்தம் செய்யப்படாமல் இருந்தால் கூட நிலை தடுமாறலாம். அதை அகற்றிவிட்டால் இதுபோன்ற தொல்லைகள் ஏற்படாது.
  • முதியவர்கள், சாப்பிடும் மருந்துகளைப் பற்றியும் டாக்டரிடம் கலந்தாலோசிக்க வேண்டும். ஏனென்றால், மருந்துகளின் பக்க விளைவுகளால் கூட கீழே விழ வாய்ப்பு உண்டு.
  • மது அருந்துவதை நிறுத்த வேண்டும்.
  • படுக்கையில் இருந்து எப்போதும் வேகமாக எழுந்து, உடனே நடக்கக்கூடாது. தொடர்ந்து படுக்கையில் படுத்திருப்பவர், எழும்போது முதலில் மெதுவாக எழுந்து உட்கார வேண்டும். பிறகு சற்று நேரம் கழித்து மெதுவாக நிற்க வேண்டும். அதன்பின்னரே நடக்க வேண்டும்.
  • நடக்கும்போது கைத்தடி அல்லது தேவையான உபகரணங்களை (walking frame) உபயோகிக்க வேண்டும். மற்றவர்கள் கேலியாகப் பார்ப்பார்கள் என்று கூச்சப்படத் தேவையில்லை. நம் உடலை நாம் தான் பேணிக்காத்துக்கொள்ள வேண்டும்.
  • நாள்தோறும் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி, தசைகள் மற்றும் மூட்டுகளின் திறனை அதிகப்படுத்தி கீழே விழுவதைத் தடுக்க உதவுகிறது, உடலைச் சரிசமமாக வைத்துக்கொள்ள சிறப்பு உடற்பயிற்சிகளும் (balance training exercise) தேவை.
  • படுக்கை அறை, குளியல் அறை, படிக்கட்டுகளில் போதுமான வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை கைக்கு எட்டும் துாரத்திலேயே வைக்க வேண்டும். உதாரணம்: டெலிபோன், பேனா, கண்ணாடி, டைரி, சாவி.
  • முதியவர்கள் அதிகமாக பயன்படுத்தும் இடங்களில் இரும்புக் கைப்பிடிகளை பொருத்த வேண்டும். உதாரணம்: குளியலறை, கழிவறை, படிக்கட்டு.
  • குளியலறை வழுவழுப்பு இல்லாமலும், தண்ணீர் தேங்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். இறுதியாக

“நடந்தால் நாடும் உறவாடும்

படுத்தால் பாயும் பகையாகும்”

என்பதை அடிக்கடி நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *