சென்னை, செப்.7– சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் தமிழ்வேந்தன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், ‘உரிய பாதுகாப்பு நடைமுறை விதிகளை பின்பற்றாமல் ‘ராட் வீலர்’ என்ற வெளிநாட்டு நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும்போது, அது குழந்தை களையும், வயது முதிர்ந்தவர் களையும், கடித்து குதறுகிறது. இதுபோன்ற நாய்களை தடை செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு, கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி கால்நடை மருத்துவர் ஆஜராகி, “நாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டம்” குறித்து விளக்கம் அளித்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.சிறீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு 4.9.2025 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “தெருநாய்கள் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் வழக்குகள் எல்லாம் உச்சநீதிமன்ற உத்தரவின்படி உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. அதனால், இந்த வழக்கையும் மாற்ற வேண்டும்” என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட்டனர்.
பின்னர் நீதிபதிகள், “தெரு நாய் விவகாரம் தற்போது தீவிர மாக உள்ளது. தெருக்களில் பிடிக்கப்பட்டு, இனப்பெருக்க கட்டுப்பாடு செய்து அதே பகுதிகளில் விடும் பட்சத்தில், ரேபிஸ் நோய் தாக்கிய நாய்களை அரசு என்ன செய்யும்?.
தனி காப்பகம் அமைத்து பாதுகாத்தலும், அப்படிப்பட்ட நாய்களுக்கு யார் தைரியமாக உணவு அளிக்க முன் வருவார் கள்? வேறு விதமான நடவடிக்கை எடுத்தால், மிருகவதை சட்டத்தை சுட்டிக்காட்டி, தொண்டு நிறுவனங்கள் வழக்கு தாக்கல் செய்ய முன்வரும். அதனால், வெளிநாடுகளில் தெரு நாய் பிரச்சினைகளை எவ்வாறு கையாளுகின்றனர்? என்பதை தெரிந்துகொண்டு, அந்த நடைமுறையை நம் நாட்டிலும் பின்பற்றலாம்” என்று யோசனை தெரிவித்தனர்.