என்ன கொடுமையடா! ஒரு வாரத்தில் 3ஆவது முறையாக நில அதிர்வு; ஆப்கான் நிலநடுக்க பலி 2,200-அய் தாண்டியது

காபூல், செப். 7– ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக 5.9.2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 2,205ஆக உயர்ந்துள்ளதாக தக வல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வார காலமாகத் தொடர்ந்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்தத் தொடர் நில அதிர்வுகளால் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த நிலநடுக்கங்கள் மக்களின் வாழ்க்கையை மட்டுமின்றி, நாட்டின் உள்கட்டமைப்பையும் கடு மையாகப் பாதித்துள்ளன. இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை உள்ளூர் நேரப்படி சுமார் 6 மணியளவில் கிழக்கு ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், ஜலாலாபாத் நகரில் இருந்து சுமார் 41 கிலோமீட்டர் வடகிழக்கே மய்யம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு மிகவும் வலுவாக இருந்ததால், பீதியடைந்த மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் அல்லது உயிர்ச்சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணங்களில் கடந்த வாரம், ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம், ஏராளமான கிராமங்களைத் தரை மட்டமாக்கியதுடன், ஆயிரக்கணக்கானோரை இடிபாடுகளில் சிக்க வைத்தது. குறிப்பாக, குனார் மாகாணத்தில் உள்ள மலைப்பகுதி கிரா மங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இடி பாடுகளில் இருந்து நூற் றுக்கணக்கான உடல்கள் மீட்கப்பட்டு வருவதால், பலி எண்ணிக்கை தற்போது 2,200அய் கடந்துள்ளதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது.

பலியானோரின் எண்ணிக்கை 2,205 ஆக உயர்ந்துள்ளதாக தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஹெலிகாப்டர்கள் மற்றும் ராணுவ கமாண்டோக்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கூடாரங்கள், முதலுதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், நிலச் சரிவுகள் மற்றும் பாறை சரிவுகளால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ள கரடுமுரடான மலைப்பாதைகள் மீட்புப் பணிகளுக்குப் பெரும் தடையாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *