முதுமையைப் பெருஞ்சுமையாகக் கருதும் பலருக்கு நடுவே முதுமையை மகிழ்ச்சியின் மைதானமாக நினைக்கும் சிலரும் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் தங்கள் நோயிற்காக மருந்து எடுத்துக் கொள்கிறார்கள்.
ஆனால், நோயைப் பற்றிப் புலம்பிக் கொண்டேயிருப்பதில்லை. உயர்த்திப் பிடிக்கப்பட்ட குடையைப் போலப் பிறருக்கு நிழல் தருகிறார்கள். மகிழ்ச்சிப்படுத்துகிறார்கள். அது போன்றவர்களைப் பொதுவெளியில் எளிதாக அடையாளம் கண்டுவிடலாம்.
மகிழ்ச்சியின் தூதுவர்களைப் போல நடந்து கொள்வார்கள். முன்பின் தெரியாதவர்களிடம் கூட இயல்பாகப் பேசுவார்கள். புன்னகை செய்வார்கள். இனிமையாக நடந்து கொள்வார்கள்.
இதற்கு முக்கியக் காரணம், அவர்கள் சொந்தக் குடும்பத்தின் பொறுப்புகளிலிருந்து விடுபட்டிருக்கிறார்களே அன்றிப் பொறுப்புகளே அற்றவர்களாகத் தங்களை நினைப்பதில்லை. தங்களின் மீதமுள்ள வாழ்க்கையை உலகிற்கானதாக மாற்றிவிடுகிறார்கள். மரம் அனைவருக்கும் பொதுவாகவே நிழல் தருகிறது. அப்படித் தங்களைத் தருநிழலென மாற்றிக்கொண்டு விடுகிறார்கள்.
தகவல்: கி.தளபதிராஜ்