திருச்சி, செப். 5- தமிழ்நாடு தடகள வீரர்கள் கூட்டமைப்பு, திருச்சி மாவட்ட தடகள விளையாட்டு வீரர்கள் கூட்டமைப்பு மற்றும் திருச்சி நியூரோ ஒன் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய, மாவட்ட அளவிலான குழந்தைகள் மற்றும் இளையோர்களுக்கான தடகளப் போட்டிகள், திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் கடந்த 20.08.2025 மற்றும் 21.08.2025 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றன.
இந்தப் போட்டியில் திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர் எஸ்.ஹரிகரன் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 23.25 மீட்டர் தூரத்தில் ஈட்டி எறிந்து மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். மாணவர் ஹரிகரனை, பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.
பெரியார் கல்வி நிறுவன மாணவி
சிலம்பாட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று தேசிய அளவில் சாதனை
திருச்சி, செப். 5- திருச்சி, புனித வளனார் கல்லூரியில் 10.08.2025 அன்று, தேசியப் பள்ளிகள் கூட்டமைப்பு, பள்ளி களுக்கான தற்காப்புக்கலை விளையாட்டுக் கூட்டமைப்பு, இளைஞர் தற்காப்புக் கலை விளையாட்டுக் கூட்டமைப்பு, உலக சார்பட்டா சிலம்பக் கூட்ட மைப்பு ஆகியவை இணைந்து நடத்திய தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் நாடு முழுவதிலிருந்தும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அய்நூறுக்கும் மேற்பட்ட சிலம்பாட்ட மாணவர்கள் பங்கேற்று தங்கள் சிலம்பத் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில், பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பாகப் பங்கேற்றனர். பத்தாம் வகுப்பு மாணவி, எஸ்.ஏ.சிறீமித்ரா முதல் இடத்தோடு தங்கப் பதக்கமும், வென்று தேசிய அளவில் சாதனை புரிந்துள்ளார். மேலும், சிறப்புப் பரிசாக 5 கிராம் வெள்ளி நாணயத்தைப் பெற்றார்.
மாணவியின் இந்த வெற்றிக்குப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் உள்ளிட்டோர் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.