சென்னை, செப்.4 கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மூலம் கடந்த 4 ஆண்டு களில் 20 லட்சத்துக்கும் மேற் பட்ட தொழிலாளர்களுக்கு ரூ.1,752 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் 41-ஆவது கூட்டம் சென்னையில் நேற்று (3.9.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு வாரியத்தின் தலைவர் பொன்.குமார் தலைமை வகித்தார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம் பாட்டுத் துறை செயலர் கொ.வீர் ராகவ ராவ், கட்டுமான தொழிலாளர் நலவாரிய செயலர் கே.ஜெய பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்டுமான தொழிலாளர் நலவாரியம் தொடங்கப்பட்ட நாள்முதல் கடந்த ஜூலை 31-ஆம் தேதி வரை 27 லட்சத்து 46,572 தொழிலாளர்கள் வாரியத்தில் பதிவு செய்துள்ளதாகவும் ரூ.2,608 கோடி மதிப்பீட்டில் தனி நபர் விபத்து நிவாரணம், விபத்து, ஊனம், இயற்கைமரணம், கல்வி, திருமணம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், நோய்களுக்கான சிகிச்சைக்கு நிவாரணம் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
புதிதாக 15.74 லட்சம் பேர் பதிவு
மேலும், கடந்த 4 ஆண்டுகளில் 15 லட்சத்து 74,116 பேர் புதிதாக வாரியத்தில் பதிவு செய் துள்ளதாகவும், 20 லட்சத்து 60,600 பேருக்கு பல்வேறு நலத் திட்டங்களின்கீழ் ரூ.1,752 கோடி மதிப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அரசு பிரதிநிதிகள், வேலை யளிப்பர் தரப்பு பிரதிநிதிகள், தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
வீட்டு மின் இணைப்பு – பெயர் மாற்றம் செய்ய புதிய விதிமுறைகள் அமல்
விண்ணப்பத்தாரர்களிடம் தேவையற்ற ஆவணங்கள் கேட்கக் கூடாது
சென்னை, செப்.4 வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யும் நடைமுறையை எளிதாக்க, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பதாரர்களிடம் இருந்து அதிகப்படியான ஆவணங்கள் கேட்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் படிவம் (படிவம் 2) கட்டாயம் பெறப்பட வேண்டும். இதனால், பல்வேறு காரணங்களால் அந்த படிவத்தை சமர்ப்பிக்க முடியாத விண்ணப்பதாரர்களுக்கு கால தாமதம் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு, இந்தப் படிவம் இனிமேல் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும்போது, கீழ்க்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் கொடுத்தால் போதுமானது: விற்பனை, பாகப் பிரிவினை, அல்லது பரிசளித்தல் மூலம்: விற்பனைப் பத்திரம், பாகப் பிரிவினைப் பத்திரம், சொத்து வரி ரசீது, அல்லது நீதிமன்றத் தீர்ப்பு. அத்துடன், ஓர் ஒப்புதல் கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். உரிமையாளர் மறைவுக்குப் பிறகு: குடும்பத்தின் மூத்த உறுப்பினர் இறந்த காரணத்தால் பெயர் மாற்றம் செய்ய நேர்ந்தால், வாரிசுச் சான்றிதழ் அல்லது அண்மையில் பெறப்பட்ட சொத்து வரி ரசீது மற்றும் இழப்பீட்டுப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தச் சுற்றறிக்கை, பெயர் மாற்ற நடைமுறையை விரைவுபடுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தப் புதிய விதிமுறைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மின்வாரியத்தின் தலைமைப் பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.