சென்னை, செப்.4- வதந்திகளை போல வெறுப்புப் பேச்சும் பெரிய அளவில் நாட்டையே பாதித்து வருகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
வதந்திகள்
சமூக ஊடக சவால்களை எதிர்கொள்வது குறித்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை நிறைவு நாள் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று (3.9.2025) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசியதாவது:-
சமூக ஊடகங்கள் பெருகியுள்ள இந்த காலகட்டத்தில், மிகப்பெரிய அளவிலான பொய்யான செய்திகளும், வதந்திகளும் பரப்பப்பட்டு வருகிறது. இன்றைக்கு இந்தியாவில் ஒரு பாசிச கும்பல், பொய்ச்செய்தி பரப்புவதையே அடிப்படை கொள்கையாக கொண்டுள்ளார்கள். பொய்யான செய்திகள் மூலம் மக்களிடையே குழப்பம் ஏற்படுத்தவும், அறிவை மழுங்கச் செய்யும் நோக்கத்தோடுதான் பொய்யான கதைகளை அவிழ்த்து விட்டு கொண்டே உள்ளார்கள். இது போன்ற பொய்யான செய்திகளை எவ்வாறு கையாள்வது? என்ற கேள்விகள் உலகம் முழுவதும் எழுந்துகொண்டே உள்ளது.
வெறுப்புப் பேச்சு
போலிச்செய்திகள் மட்டுமல்ல, இன்றைக்கு வெறுப்புப் பேச்சும் பெரிய அளவில் நாட்டையே பாதித்து வருகிறது. குறிப்பாக சிறுபான்மையின மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், வெறுப்புப் பேச்சால் மிகவும் பாதிக்கப்படுகிற சூழல் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னால், நான் ஒரு நிகழ்ச்சியில் பேசினேன். பிறப்பால் ஏற்றத்தாழ்வு சொல்கின்ற எந்த விஷயத்தையும் அழிக்க வேண்டும் என பேசினேன். உடனே, என் பேச்சை திரித்து, நான் சொல்லாத விஷயங்களையும் சொன்னேன் என, ஒரு கும்பல் நாடு முழுக்க பரப்பிவிட்டனர். அதற்காக, என் தலையை சீவினால் ரூ. 10 லட்சம் தருகிறேன் என ஒரு சாமியார் சொன்னார்.
தமிழ்நாடு உடனே நம்பாது
மற்ற மாநிலங்கள் போல தமிழ்நாடு எதையும் உடனே நம்பாது. ஏனென்றால், இது பெரியாரால் பண்படுத்தப்பட்ட மண். பெரியார் ஒரு விஷயத்தை யார் சொன்னாலும், ஏன் நானே சொன்னாலும் உடனே நம்பாதே. “உன் பகுத்தறிவுக்கும். புத்திக்கும் அது சரி என்று பட்டால் மட்டும் ஏற்றுக் கொள்ள இல்லை என்றால், ஏன், எதற்கு என்று கேள்வி கேள்” என்று சொன்னவர்தான் நம் பெரியார். முக்கியமாக, நீங்கள் எல்லோரும் சமூகத்தில் தவறான தகவல்களை வீழ்த்துவதற்கான போர் வீரர்களாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். அதற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பொய்கள் வீழட்டும், உண்மை ஓங்கட்டும். பொய்ச் செய்தியற்ற சமூகத்தை அமைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.