கடலூர், செப்.4- பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.ம.மு.க. விலகுவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி. வி. தினகரன் நேற்று (3.9.2025) இரவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- துரோகம் என்றைக்கும் வென்றதாக சரித்திரம் கிடையாது. அதேநேரத்தில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு நாங்கள் இவ்வளவு காலம் பொறுமையாக இருந்தோம். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிந்தவுடன் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. எங்கள் வழியில் நாங்கள் வந்து விட்டோம். மேனாள் அமைச்சர் செங்கோட்டையன் என்ன சொல்கிறார் என்று 5-ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம். எனக்கு யூகம் பண்ண தெரியாது.
துரோகம்
அ.தி.மு.க.வுடன் இணைய வாய்ப்பு உள்ளதா என்று கேட்கிறீர்கள். துரோகம் தலை விரித்தாடுகிறது. கடந்த 1½ மாதமாக துரோகம் ஊருக்கு ஊர் போய் பேசி வருகிறது. திருந்துவதற்கு வாய்ப்பு இல்லை.நாங்கள் செய்தது சரி என்பதை போல செயல்படுவதை எப்படி அ.ம.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
விலகுகிறோம்
டிசம்பர் வரை பொறுத்திருங்கள் எங்கள் நிலைப்பாடு தெரியும். 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது, பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று ஒரே நோக்கத்தோடு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தோம். ஆனால் இப்போது வர வேண்டிய தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தல். இது தமிழ்நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் தேர்தல், யாரை எதிர்த்து கட்சி ஆரம்பித்தோமோ. அவர்களை முதுகில் தூக்கி செல்ல நாங்கள் ஏமாளிகள் அல்ல. நாங்களும் டில்லியை சேர்ந்தவர்கள் நல்ல முடிவு எடுப்பார்கள் என்று 3, 4 மாதங்களாக காத்திருந்தோம். ஆனால் அதற்கு வாய்ப்பு தெரியவில்லை. ஆகவே டிசம்பர் மாதத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி தெரிவிப்போம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (பா.ஜனதா) இருந்து விலகுகிறோம். அந்தக் கூட்டணியில் இருந்து விலகுகிறோம் வெளியே வருகிறோம். எங்களின் நிலைப்பாடு குறித்து டிசம்பரில் அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.