திருப்பூர் ஆயத்த ஆடைத் துறை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்கீடு ஒன்றிய நிதி அமைச்சரிடம் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை

3 Min Read

திருப்பூர் ஆயத்த ஆடைத் துறை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்கீடு

ஒன்றிய நிதி அமைச்சரிடம் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை!

திருப்பூர், செப்.3- திருப்பூர் ஆயத்த ஆடைத் துறையை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் ஒன்றிய நிதி அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அமெரிக்கா 50% வரி விதித்திருப்பதன் காரணமாக தமிழ்நாட்டில் உற்பத்தி செய்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக திருப்பூர் ஆயத்த ஆடைகள் பெரும் பகுதி அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரக்கூடிய நிலையில் கடந்த 27ஆம் தேதி முதல் அமெரிக்காவிற்கு செல்ல வேண்டிய சரக்குகள் தேக்கமடைந்தும்,புதிய ஆர்டர்கள் கிடைக்காமலும் இருந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு தொழில்துறையினருடன் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (2.9.2025) கலந்துரையாடி கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில், திருப்பூர் சார்பாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக துணைத்தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் கே.எம்.சுப்பிரமணியம் ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: திருப்பூரில் ஆயத்த பின்னலாடை துறை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றி ஆடைகளை உற்பத்தி செய்து வருகிறது. கடந்த 2024-2025 நிதி ஆண்டில் ரூ.44,747 கோடி மதிப்பில் ஏற்றுமதி, உள்நாட்டு வணிகத்தில் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பில் வர்த்தகம் செய்துள்ளது. இதில் 30 முதல் 35 சதவீதம் அமெரிக்க சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதால், கரோனா தொற்று காலத்தில் ஒன்றிய அரசு வழங்கிய சிறப்பு நிதி உள்ளிட்ட சலுகைகளை தற்போதைய நெருக்கடியில் இருந்து திருப்பூர் தொழில்துறையை பாதுகாக்க வழங்க வேண்டும்.

டியூட்டி டிராபேக் சதவீதம் உயர்த்துதல், ஏற்றுமதியாளர்கள் வங்கிக் கடன் திருப்பி செலுத்துவதில் கால அவகாசம், ஏற்றுமதிக்கு சிறப்பு சலுகை,ஏற்றுமதி வாய்ப்புள்ள மற்ற சந்தைகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நிதி அமைச்சரிடம் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத் துணைத்தலைவர் சக்திவேல் அமெரிக்க சந்தைக்கான போகஸ் சந்தை திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துதல்,வட்டி சமநிலைப்படுத்தும் திட்டத்தை மீட்டமைத்தல், NPA விதிமுறைகளை மறுவகைப்படுத்துவதன் மூலம் 2 ஆண்டு கால அவகாசம் வழங்குதல் மற்றும் அமெரிக்க பருத்தி இறக்குமதியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்திய ஆடைகளுக்கு விலக்கு அளிக்கும் கோரிக்கையை அமெரிக்க அதிகாரிகளிடம் எடுத்துக் கூறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தார்.

கானா நாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பணி நீக்கம்

அக்ரா, செப்.3- மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கெர்ட்ரூட் டோர்கோர்னு (வயது 62). நாட்டின் 3ஆவது பெண் தலைமை நீதிபதியான இவர் கடந்த 2023ஆம் ஆண்டு மேனாள் அதிபர் அகுபோ அமோவின் பரிந்துரையால் நியமிக்கப்பட்டார். எனவே அப்போதைய ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே கடந்த ஏப்ரல் மாதம் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக 5 பேர் கொண்ட குழுவை அரசாங்கம் அமைத்தது. இதில் குற்றச்சாட்டு உறுதியானதால் அவரை பணிநீக்கம் செய்ய அந்த குழு பரிந்துரை செய்தது. அதன்பேரில் தலைமை நீதிபதி கெர்ட்ரூட் டோர்கோர்னுவை பணிநீக்கம் செய்து அதிபர்ஜான் மஹாமா உத்தரவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *