ஈரோடு, செப்.3- தமிழ்நாடு அரசு, உயிரியல் பன்மைச் சட்டம் 2002, பிரிவு 37(1)ன் கீழ், அரிட்டாபட்டியை நவம்பர் 2022 இல் பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது மற்றும் காசம்பட்டி மார்ச் 2025 இல் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 37.42.50 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட ஈரோடு மாவட்டத்திலுள்ள எலத்தூர் ஏரியை மாநிலத்தின் மூன்றாவது உயிரியல் பாரம்பரியத் தளமாக அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிக்கையினை நேற்று (01.09.2025) தலைமைச் செயலகத்தில், வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் வெளியிட்டார்.
எலத்தூர் ஏரி
இந்நிகழ்ச்சியில் பேசிய வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், “எலத்தூர் ஏரியை தமிழ்நாட்டின் மூன்றாவது பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிப்பதன் மூலம், அதன் உயிரினங்கள் மற்றும் வாழ்விடங்களின் செழுமையை மட்டுமல்லாமல், பல தலைமுறைகளாக இயற்கையுடன் ஒத்துழைத்து வாழ்ந்த உள்ளூர் சமூகங்களின் ஞானத்தையும் நாம் கொண்டாடுகிறோம்” என்றார்.
தமிழ்நாடு மாநிலத்தில் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்க பல்வேறு விரிவான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் அதிகபட்ச எண்ணிக்கையிலான ராம்சர் தளங்கள் அறிவிக்கப்பட்டது மற்றும் அழிந்து வரும் உயிரின பாதுகாப்பு நிதியை உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் பல்லுயிர் பாதுகாப்பினை உறுதி செய்கிறது. இந்நிலையில், எலத்தூர் ஏரியை மூன்றாவது பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவித்தது இம்முயற்சியில் ஒரு மைல்கல் ஆகும்.
5 ஆயிரம் பறவைகள்
புலம்பெயர்ந்துவரும் பருவங்களில் சுமார் 5,000 பறவைகள் எலத்தூர் ஏரியில் கூடுகின்றன. இந்த ஏரி, ஆபத்தான நிலையில் உள்ள ஸ்டெப் ஈகிள், இரண்டு அழியும் நிலையில் உள்ள உயிரினங்கள் (நதிக்காக் மற்றும் பெரிய புள்ளி ஈகிள்) மேலும் அய்ந்து உயிரினங்களான (ஆசிய கம்பளக்கழுத்து நாரை, சிவந்த கழுத்து பறவைகள், ஓவிய நாரை, கிழக்கு நீர்த்தாரை மற்றும் கருந்தலை வெண்ணாரை) ஆகியவற்றைப் பாதுகாக்கும் இடமாக உள்ளது. மொத்தமாக, இங்கே 187 வகையான பறவைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இங்கு காணப்படும் முக்கிய பறவை இனங்கள் பின்வருமாறு நார்தெர்ன் பின்டெய்ல், கர்கனேய் (Garganey), வாக்டெயில்கள் (Wagtails), சாண்ட்பைபர்கள் (Sandpipers), வார்பிளர்கள் (Warblers), பார்-ஹெடெட் கூஸ் (Bar-headed Goose), கிரீன்-விங்க்டு டீல் (Green-winged Teal), ஷவுலர் (Shoveler), விஜியன் (Wigeon) மற்றும் ஷ்ரைக் (Shrike).
எலத்தூர் ஏரியில் பதிவாகியுள்ள முக்கிய உயிரினங்கள் பின்வருமாறு:
38 தாவர வகைகள், 35 பட்டாம்பூச்சி வகைகள், 12 தட்டான் பூச்சி (Dragonflies), 12 இழைச்சிட்டிகள் (Damselflies), 12 ஊர்வன (Reptiles), 7 பாலூட்டிகள் (Mammals), நீர்நில வாழ்வன (Amphibians), மீன்கள் மற்றும் முதுகெலும்பில்லா பிராணிகள் (Invertebrates) மேலும், எலத்தூர் ஏரி ஒரு உயிரியல் பரம்பரை மையமாக (genetic diversity) செயல்பட்டு, பருவநிலை மாற்றத்தினை தழுவும் திறனையும் நிலைத்தன்மையையும் வழங்குகிறது.