ராமேசுவரம், செப்.3- ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 7ஆம் தேதி விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற 10 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த 10 பேரும் வழக்கு விசாரணைக்காக நீர்க்கொழும்பு அருகே உள்ள வெளிச்சுரா நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் (1.9.2025) ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது நீதிபதி, 10 மீனவர்களுக்கும் இலங்கை பணம் தலா ரூ.5 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராதத் தொகையை கட்டத்தவறினால் 18 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து 10 மீனவர்களும் வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இலங்கை பணம் தலா ரூ.5 கோடி அபராதம் என்பது, இந்திய மதிப்பில் தலா ரூ.1 கோடியே 46 லட்சம் என்பதாகும்.இவ்வளவு அதிகமான தொகையை பாம்பன் மீனவர்களுக்கு அபராதமாக இலங்கை நீதிமன்றம் விதித்தது, அவர்களுடைய குடும்பத்தினருக்கு மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.
எனவே ஒன்றிய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை நீதிமன்றம் விதித்த அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும். சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை மீட்டுக்கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தகுதித் தேர்வு பிரச்சினை
ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் கைவிடாது
கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி
திருச்சி, செப். 3- ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரத்தில், ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு எக்காரணம் கொண்டும் கைவிடாது என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தகுதித் தேர்வு
தமிழ்நாடு முழுவதும் 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக அண்மையில் தரம் உயர்த்தப்பட்டன. இதில், திருச்சி கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியும் ஒன்று. இந்நிலையில், இப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வகுப்புகளை நேற்று (2.9.2025) தொடங்கி வைத்து, பள்ளியில் சேர்ந்த மாணவர்களை வரவேற்று புத்தகம், பேனா ஆகியவற்றை வழங்கினார்.
பின்னர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியது: தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள், டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் விவரம் முழுமையாக கிடைத்தவுடன் அதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து, பின்னர் மேல் முறையீடு செய்யப்படும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஆசிரியர் சங்கங்களும் மேல் முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. அதேவேளையி்ல், எக்காரணத்தைக் கொண்டும் ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு கைவிடாது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் மு.மதிவாணன், பள்ளித் தலைமை ஆசிரியை எலிசபெத் ராணி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
சென்னையில் கடந்த 21 நாட்களில்
29 ஆயிரம் நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி
சென்னை, செப்.3- தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முகாமினை கடந்த 9ஆம் தேதி மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த ஆண்டு தனியார் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட தெருநாய்கள் கணக்கெடுப்பில் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் தெருநாய்கள் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, வெறிநாய்க்கடி நோய் பாதிப்பிலிருந்து பொதுமக்களை காத்திடவும், வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை மாநகரை உருவாக்கிடவும் அனைத்து தெருநாய்களுக்கும் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டது.
அந்த வகையில், தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முகாமினை கடந்த 9ஆம் தேதி மேயர் பிரியா தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக மணலி, மாதவரம் மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் நேற்று (2.9.2025) வரையில் (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) 21 நாட்களில் 29 ஆயிரத்து 748 தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.