மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலத்தில் கல்லூரி கட்ட இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர். ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கோயில் நிலத்தில் கல்லூரி அமைக்க அனுமதித்த இந்து சமய அறநிலையத் துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை வைத்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய மறுத்தது. இதையடுத்து கல்லூரி கட்டும் முதல்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு எதிராக ரமேஷ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
விசாரணையில், நீதிபதிகள் ரமேஷிடம் “இந்தக் கட்டுமானத்தைத் தடுக்க உங்களிடம் என்ன காரணம் உள்ளது?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு ரமேஷ் தரப்பு வழக்குரைஞர், “கல்லூரி கட்டுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் உண்மையில் கொளத்தூர் சோம்நாதர் ஆலயத்தின் நிலம். அந்த நிலத்தில் கல்லூரி அமைப்பதோடு, கோயில் நிதியையும் பயன்படுத்துகின்றனர். எனவே அனுமதி ரத்து செய்யப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதற்குப் இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் பதிலளித்த மூத்த வழக்குரைஞர் சண்முகசுந்தரம், “அந்த நிலம் இலவசமாக பயன்படுத்தப்படவில்லை; மாதந்தோறும் ரூ.3,19,000 வாடகை கோயிலுக்கு வழங்கப்படுகிறது. மேலும், கபாலீஸ்வரர் கோவில் சார்பிலேயே கல்லூரி அமைக்கப்படுகிறது. அது கல்விக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது” என்று விளக்கமளித்தார்.
நீதிபதிகள் இதனை ஏற்றுக்கொண்டு, “மாணவர்களின் எதிர்கால நலனுக்காக கோயில் நிதியை கல்விக்குப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை” எனக் குறிப்பிட்டனர். எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று தெரிவித்தனர்.
உண்மையில் இது பாராட்டத்தக்க அரிய தீர்ப்பாகும். சர்வ சக்தி வாய்ந்தவன் கடவுள் என்று ஒரு பக்கத்தில் கூறிக் கொண்டு, அந்தக் கடவுளுக்குச் சொத்து சேர்ப்பது கடைந்தெடுத்த முரண்பாடல்லவா!
கோயில் பணத்தைக் கல்விக்குச் செலவழிக்கக் கூடாது என்று வழக்குத் தொடுப்போர் நோக்கி ஒரு முக்கியமான கேள்வி.
திருப்பதி வெங்கடேஸ்வரன் கோயில் வருவாய் மூலம் ஏராளமான கல்வி நிறுவனங்கள் நடத்தப்படு கின்றன. எடுத்துக்காட்டுக்குச் சில:
(1) சிறீவெங்கடேஸ்வரா வேதிப் பல்கலைக் கழகம்
(2) சிறீபத்மாவதி மகிளா பல்கலைக்கழகம் (பெண்கள் பல்கலைக் கழகம்)
(3) சிறீவெங்கடேஸ்வரா கலைக் கல்லூரி, திருப்பதி.
(4) சிறீவெங்கடேஸ்வரா இசை மற்றும் நடனக் கல்லூரி.
(5) சிறீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக்
(6) சிறீவெங்கடேஸ்வரா கல்லூரி – டில்லி.
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். உண்மை இவ்வாறு இருக்க தமிழ் நாட்டில் மட்டும் கோயில் நிதியிலிருந்து கல்விக் கூடங்களை நடத்தக் கூடாது என்பது இரட்டை வேடம் அல்லவா!
கோயில்களுக்கான தங்கம் டன் கணக்கில் ரிசர்வ் வங்கியில் தூங்குகின்றன பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இது ஏற்கத்தக்கதுதானா?
மக்களால் அளிக்கப்படும் நிதி – அந்த மக்களுக்காகச் செலவழிக்கப்படுவதுதானே நியாயம்!
இந்த வகையில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு போற்றி வரவேற்கத்தக்கதே!
மேலும் கோயிலில் தூங்கும் பெரும் நிதியை மக்கள் நலப் பணிக்கு– குறிப்பாகக் கல்வி பணிக்குத் தாராளமாக செலவழிக்கலாம். அரசுகள் செயல் படுமாக!