உடுமலைப்பேட்டை, ஆக. 30– கடந்த 2019ஆம் ஆண்டு “தினமலர்” பத்திரிகை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பற்றி ஒரு கார்ட்டூன் போட்டு அவமரியாதை செய்திருந்தது. இதை கண்டித்து உடுமலைப்பேட்டை கழகத் தோழர்கள் கிருஷ்ணன், மனோ கரன், மயில்சாமி, மாயவன், ராமசாமி, ஆறுமுகம், நாகராஜ், அர்ஜீனன், நாகராஜன், கஞ்சி மலையான் ஆகியோர் தினமலர் பத்திரிகைக்கு எதிராக கணியூர் பேருந்து நிலையம் அருகில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தி தினமலர் பத்திரிகைக்கு தீயிட முயற்சி செய்தார்கள்.
மேற்கண்ட போராட்டம் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் நடந்தது. கணியூர் காவல்நிலையத்தில் இது சம்பந்தமாக 19.03.2019 அன்று பிரிவுகள் 143, 341, 285 இ.த.ச-இன்படி வழக்குப் பதிவு செய்யப் பட்டது. மேற்படி வழக்குப் பதிவு செய்த பிறகு 3 ஆண்டுகள் கழித்து குற்றப்பத்திரிக்கை தாக் கல் செய்யப்பட்டது. அந்த வழக்கினை ரத்து செய்ய வேண்டுமென்று கழகத் தோழர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சு.குமார தேவன் வழக்கு தாக்கல் செய்தார். கடந்த 28ஆம் தேதி மேற்படி வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஆஜராகி வழக்கு சம்பவம் 2019 ஆண்டு நடைபெற்றாலும் குற்றப்பத்திரிக்கை 3 ஆண்டு களுக்கு பிறகு 2022ஆம் ஆண்டு தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். மனுதாரர்கள் மேல் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குப் பிரிவுகள் 6 மாதங்கள் வரை சிறை தண்டனை அளிக்கக்கூடிய பிரிவுகளாகும். குற்றப்பத்திரிக்கை 6 மாதங்களுக்குள் தாக்கல் செய்யாமல் 3 ஆண்டுகள் கழித்து தாக்கல் செய்யப்பட்டது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 468 பிரிவின்படி தவறானதாகும்.
பொதுமக்கள் யாரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்காத பட்சத்தில் புகார் அளித்த காவல் அதிகாரியே வழக்கின் இறுதி அறிக்கையினை தாக்கல் செய்தது உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு நேர்மாறானதாகும் என்பதை எடுத்துரைத்து வாதாடினார்.
அரசு தரப்பு வழக்குரைஞர் மேற்படி வழக்கினை ரத்து செய் ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடினார். இருதரப்பு வாதங் களையும் கேட்ட நீதிபதி என்.சதீஷ்குமார் மனுதாரர்கள் தரப்பு வாதங்களை முழுமையாக ஏற்று கழகத் தோழர்கள் மீதான வழக் கினை ரத்து செய்து உத்தர விட்டார்.