அமெரிக்க அரசின் 50% வரிவிதிப்பால் கடும் பாதிப்பு:
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் – ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக செப்.2 அன்று திருப்பூரில் ‘மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!’
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் – ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக செப்.2 அன்று திருப்பூரில் ‘மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!’
சென்னை, ஆக.30– அமெரிக்க அரசின் 50% வரிவிதிப்பால் கடும்பாதிப்பிற்குள்ளாகி உள்ள திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களைக் கண்டுகொள்ளாமல்கைவிட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திருப்பூரில் செப்.2 அன்று “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்கள்.
- அமெரிக்க அரசின் 50% வரிவிதிப்பால் கடும் பாதிப்பு: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் – ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக செப்.2 அன்று திருப்பூரில் ‘மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!’
- ஒன்றிய பா.ஜ.க. அரசின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வி!
- துளியும் கவலையின்றி இருக்கிறது பா.ஜ.க. அரசு!
- ஒன்றிய அரசு வரிச்சலுகை வழங்க வேண்டும்!
அவர்களின் அறிக்கை வருமாறு:
இந்தியப்பொருட்கள் இறக்குமதி மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி விதிப்பால் கடும் நெருக்க டியையும், பெரும் பாதிப்பினையும் சந்தித்துள்ளது பின்னலாடை தொழிலின் மய்யமான திருப்பூர். கிட்டத்தட்ட 3000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதோடு லட்சக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
ஒன்றிய பா.ஜ.க. அரசின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வி!
பணமதிப்பிழப்பு, முறையற்ற GST, கரோனா பேரிடர் என்ற அடுத்தடுத்த தொடர் தாக்குதல்களால் நசிந்துபோயிருந்த திருப்பூர் பின்னலாடை தொழி லானது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சியில் புத்துயிர் பெற்று மீண்டும் பழைய நிலையை எட்டிப்பிடித்து ஆண்டுக்கு ரூ.45,000 கோடிக்கும் அதிகமான ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற தொடங்கியது. ஆனால் அதன் மீது விழுந்த பேரிடியாக அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு வந்து விழுந்தது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் வெளியுறவுக் கொள்கைகளில் ஏற்பட்ட மோசமான தோல்வியையே இந்த விளைவுகள் காட்டுகின்றன.
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் ஏற்று மதியாளர் சங்கங்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, கடந்த16–ஆம் தேதியே முதலமைச்சர் அவர்கள் பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் தமிழ்நாட்டின் ஜவுளித் துறை கிட்டத்தட்ட 75 இலட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துவருகிறது என்பதை குறிப்பிட்டு, அமெரிக்க வரி விதிப்பின் காரணமாக, 30 இலட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி இருந்தார்.
துளியும் கவலையின்றி இருக்கிறது பா.ஜ.க. அரசு!
அமெரிக்க வரி விதிப்பால் ஏற்படப்போகும் பாதிப்பு களை முன்கூட்டியே முதலமைச்சர் அவர்கள் சுட்டிக் காட்டி நிவாரண நடவடிக்கைகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு மேற்கொள்ள வேண்டும் என எடுத்துரைத்தும் எந்த நிவாரண நடவடிக்கையையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு எடுக்கவில்லை. மீண்டும் ஒருமுறை முதலமைச்சர் அவர்கள் 28.08.25 அன்று வலியுறுத்தியும் கிணற்றில் போட்ட கல் போல அமைதியாய் இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. ஆபத்து வர போகிறது என்று எச்சரித்தும் அதை எதிர்கொள்ள எந்த நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வில்லை ஆபத்து வந்த பின்னும் அதை பற்றி துளியும் கவலையின்றி அமைதியாய் இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. பெரும் முதலாளி களான அதானி அம்பானிக்கு ஒரு பிரச்சினை என்றால் ஓடோடி வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, உள்நாட்டில் உள்ள சிறு வணிகர்களின் நலனை கவனத்தில் கொள்வதில்லை. குறிப்பாக தமிழ்நாட்டின் திருப்பூர் உள்ளிட்ட தொழில்நகரங்களைத் தொடர்ந்து புறக்கணிப்பது ஏன்? பாதிப்புகளை சரி செய்ய முன்வராமல் மவுனம் சாதிப்பது பின்னலாடை ஏற்றுமதியின் மய்யமான திருப்பூரை முடக்கும் அமெரிக்காவின் சூழ்ச்சிக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசும் துணை போகிறதோ? என்ற சந்தேகத்தை உண்டாக்குகிறது. அமெரிக்கா ஒருபுறம் வரிபோட்டு நம்மை முடக்க நினைத்தால் மறுபுறம் வரி நிவாரணம் ஏதும் கொடுக்காமல் ஒன்றிய பா.ஜ.க. அரசும் நம்மை முடக்கி வருகிறது.
அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணியாமல், திருப்பூர் பின்னலாடை தொழில் நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையில் உடனடி நிவாரண நடவடிக்கை களை ஒன்றிய பா.ஜ.க. அரசு எடுக்க வேண்டும்.
ஒன்றிய அரசு வரிச்சலுகை வழங்க வேண்டும்!
இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய ஒன்றிய பா.ஜ.க. அரசு வரி சலுகைஉள்ளிட்ட நிவா ரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். அமெரிக்க வரி விதிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்கள் மட்டும் தொழிலாளர்களின் குரலாய் இருந்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்றும் போராடும். திருப்பூரைத் தொடர்ந்து புறக்கணித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும் – உடனடி நிவாரணநடவடிக்கைகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு மேற்கொள்ள வலியுறுத்தியும் ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” வருகிற 2.9.2025 அன்று காலை 10 மணியளவில் திருப்பூர் ரயிலடி அருகில் நடைபெறும்.
இவ்வாறு தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப் பெருந்தகை, ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுச் செயலாளர் பெ.சண்முகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக் குழுச் செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் ஆர்.அருணாசலம், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.