முசாபர்பூர் நகரம் இந்தியாவின் வரலாற்று நெடுவரிசையில் பல பரிமாணங்களை இணைக்கும் ஒரு புள்ளியாகும். மகதப் பேரரசின் தொடக்கம், புத்தரின் போதனைகள், காந்தியாரின் சுதந்திரப் போராட்டம், மதச்சார்பற்ற அரசியல் போன்றவற்றின் அடையாளம் முசாபர்பூர்!
இதன் பழைய பெயர் ‘ராஜகிருஹ’ என்பதாகும். இதுதான் இந்திய தீபகற்பத்தில் தோன்றிய முதல் மன்னர் வம்சத்தின் தலைநகராகவும் திகழ்ந்தது.
4,000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்துசமவெளி திராவிட நாகரிகம் செழித்து இருந்தது. அதன் பிறகு ஆரியர்களின் வருகையால் சிந்துசமவெளி நாகரிகம் அழியத் துவங்கியது. அங்கிருந்து இந்திய தீபகற்பத்தின் உட்பகுதியில் சிந்துவெளி திராவிட நாகரிக மக்கள் பரவத் துவங்கினர். அப்படி பரந்து வாழ்ந்த பகுதிகள் அனைத்துமே நதிக்கரைகளில் அமைந்தன. அப்படி அமைந்த முதல் பேரரசு மகதம்.
அதன் முதல் தலைநகர் இன்றைய முசாபர்பூர் (ராஜகிருகம் என்று முன்பு அழைக்கப்பட்டது). இந்தியாவின் நாட்டைக் கைப்பற்ற நடந்த முதல் போரும் முசாபர்பூரில் தான் நடந்தது.
மகதப் பேரரசானான அஜாத சத்ருவிற்கும், லிச்சாவி என்ற இனக்குழுவிற்கும் இடையே நடந்த போர் இந்திய வரலாற்றில் முதல் போராக பதியப்பட்டுள்ளது. அந்தப் போரின் வெற்றிக்குப் பிறகு லிச்சாவிக் கோட்டை எழுப்பப்பட்டது. ராஜகிருகம் உருவாக்கப்பட்டு அது மகதப் பேரரசின் தலைநகராக்கப்பட்டது. இங்கிருந்து இந்தியாவின் மன்னராட்சி வரலாறு தொடங்குகிறது. பின்னர் மகதப் பேரரசின் தலைநகரை பாடலிபுத்திரத்திற்கு மாற்றினார்கள். அதுதான் இன்றைய பாட்னா.
இதே முசாபர்பூர் பவுத்த, சமண மதங்களுக்கு முக்கியமான இடமாகவும் விளங்குகிறது. கவுதம புத்தர் தனது போதனைகளின் ஒரு பகுதியை இங்கு நிகழ்த்தினார். புத்தர் நடத்திய ராஜகிருஹ போதனை போலவே, பின்னாளில் இயேசுவின் மலைப்போதனை என்று கிறிஸ்துவ மதத்தில் எழுதப்பட்டதாகவும் கூறுவார்கள். காரணம், இரண்டுமே ஒரே மாதிரி மலைப்பிரசங்கம். கிறிஸ்துவ மலைப்பிரசங்கத்தில் ரொட்டியையும், மீனையும் பங்கிட்டுக் கொடுத்ததாக வரும்.
இங்கே தன்னைக் காணவந்த மக்களுக்குப் புத்தர் பொதுமக்கள் கொண்டுவந்த பழங்களையும், தானியங்களையும் பிரித்துக் கொடுத்ததாக அபிதம்ம பீடகம் கூறுகின்றது.
அதேபோல சமணரான மகாவீரர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை இங்குதான் செலவிட்டார்.
1917ஆம் ஆண்டு காந்தியாரின் பீகார் பயணம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆணிவேராகத் திகழ்ந்தது.
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ், பீகாரின் சம்பாரண் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தங்கள் நிலத்தில் கட்டாயமாக அவுரி (Indigo) பயிரிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இது ‘தின் காதியா’ முறை என அழைக்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் நிலத்தின் மூன்று பங்கு நிலத்தில் அவுரிச் செடியைப் பயிரிட்டு, அதை மிகக் குறைந்த விலைக்கு ஆங்கிலேயர்களுக்கு விற்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இதனால் விவசாயிகள் கடுமையாகச் சுரண்டப்பட்டு, வறுமையில் வாடினர்.
இந்தக் கொடுமைகளைப் பற்றி அறிந்த உள்ளூர் தலைவரான ராஜ்குமார் சுக்லா, கிருபளானி இருவரும் காந்தியாரைச் சந்தித்து சம்பாரண் மக்களின் துன்பங்களை எடுத் துரைத்தனர். இதன் காரணமாக, காந்தியார் ஏப்ரல் 1917இல் சம்பாரண் மாவட்டத்திற்கு வந்தார். அங்கு அவர் விவசாயிகளின் நிலை குறித்துக் கேட்டறிந்தார்.
காந்தியார் மக்களைச் சந்தித்து, அவர்களிடமிருந்து தகவல்களைச் சேகரித்தபோது, பிரிட்டிஷ் அதிகாரிகள் பீதியடைந்தனர். அவர்கள் காந்தியார் உடனடியாக சம்பாரணை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டனர். ஆனால், காந்தியார் அந்த உத்தரவை மீறி, விசாரணை நடத்துவதில் உறுதியாக இருந்ததால் கைது செய்யப்பட்டார். ஆனால், மக்களின் ஆதரவைக் கண்ட பிரிட்டிஷ் அரசாங்கம், அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்தது.
காந்தியார் பீகார் செல்ல வழிகாட்டியாக இருந்து பீகார் மாநிலத்தை இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஆணிவேராக மாற்றிய கிருபளானியும் வெளியில் இருந்து சென்றவர்தான். கிருபளானி இன்றைய பாகிஸ்தானில் உள்ள அய்தராபாத் நகரில் பிறந்தவர். காந்தியாரோடு பீகாரில் நிலமில்லாத ஏழைகளுக்கான நில உரிமைப் போராட்டத்தில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். காந்தியார் ரயிலில் இருந்து இறங்கிய இடம் முசாபர்பூர் ஆகும்.
முசாபர்பூர் நகர் மக்களவையில் இருந்து 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மேனாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அன்றைய பிரிக்கப்படாத மெட்ராஸ் பிரசிடென்ஸியில் இருந்த மங்களுரூவில் பிறந்தவர். பீகார் மக்களால் பீகாரின் மைந்தனாகவே கருதப்பட்டார். அதே போல் மதச்சார்பற்ற கொள்கையில் தன்னுடைய இறுதி மூச்சுவரை உறுதியாக நின்று இறுதிக்காலத்தில் பாஜகவோடு அவரது கட்சியான மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சி கூடிக்குலாவியபோதும் தன்னை தனித்து நிலை நிறுத்திய சரத் யாதவ் மத்தியப் பிரதேசத்தில் பிறந்தவர்.
அதே போல் சோசலிசக் கட்சியின் தலைவரான மது லிமாயே புனேவில் பிறந்தவர். இவர் பீகார் மாநிலத்தில் பன்கா மற்றும் முங்கேர் நாடாளுமன்றத் தொகுதியில் 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இவ்வாறு பீகார் தனது அரசியல் பாதையில் சமத்துவம் பொது உடமை மற்றும் மதச்சார்பின்மை சிந்தனை கொண்ட தலைவர்களை என்றுமே அரவணைத்து அழகுபார்த்த பூமி!
மண்டல், லாலு ஆகிய சமூகநீதி நாயகர்களைத் தந்த பூமி! மீண்டும் அந்த நிலைக்காகத் தனது குரலை அழுத்தமாகப் பதியை வைக்கப் போராடுகிறது!