சென்னை, ஆக.29- தி.மு.க. கட்சியின் தலைமை பொறுப்பில் 8-வது ஆண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடியெடுத்து வைத்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்சி தலைமைப் பொறுப்பை ஏற்று நேற்று 8-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். மக்களிடையே ஆழ்ந்த பாசமும், தொண்டர்களிடையே உறுதியான ஒற்றுமையும் ஏற்படுத்திய இவருடைய தலைமையின் பயணம், கட்சி வளர்ச்சியின் பொற்காலமாக அமைந்து இருக்கிறது.
‘தி.மு.க. தலைமை பொறுப்புக்கு 2018-ம் ஆண்டு அவர் வந்த பின்பு, 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொண்டார். அதில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில், 38 தொகுதிகளை வென்று மகத்தான வெற்றிச் சரித்திரத்தை பதிவு செய்தார்.
அதனைத்தொடர்ந்து 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. ஆட்சியை அகற்றி, 6-வது முறையாக தி.மு.க. ஆட்சியை நிறுவி, முதலமைச்சர் மகுடத்தை சூட்டிக்கொண்டார். அதே ஆண்டு அக்டோபரில் நடை பெற்ற 9 மாவட்டங்களின் ஊராட்சித் தேர்தலிலும் வெற்றிப்பாதையில் தொடர்ந்தார். 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற நகராட்சித் தேர்தல்களில் அதுவரை எந்த ஒரு அரசியல் கட்சியும் பெறாத மாபெரும் வெற்றியை தி.மு.க.வுக்கு பெற்றுத்தந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
11 தேர்தல்களில் வெற்றி
2023-ம் ஆண்டில் நடைபெற்ற ஈரோடு இடைத்தேர்தலிலும் மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்தார். அதன் தொடர்ச்சியாக 2024-ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் தி.மு.க. அதன் கூட்டணிக்கட்சிகளின் கையில் வெற்றிக்கனியாக்கிக் கொடுத்து, புதிய வரலாற்று சாதனையை படைத்தார்.
அந்த வகையில், தி.மு.க. தலைவராக பொறுப்பேற்ற பின்னர் நடந்த 11 தேர்தல் களில் வெற்றிபெற்று, எதிர்க்கட்சிகளுக்கு தோல்விகளைப் பரிசாக தந்தவர் மு.கஸ்டாலின். இது மட்டுமல்லாமல், 2018-ம் ஆண்டு கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற நாள் முதல் தி.மு.க. தொண்டர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தி, கட்சி வளர்ச்சியையும் உறுதி செய்துள்ளார்.
தமிழ்நாடு மக்களின் நலனை முன்னிறுத்தி, பல்வேறு நவீன திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளார். சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை என்ற தத்துவங் களை உறுதியாக நிலைநிறுத்தி இருக்கிறார்.
மகத்தான திட்டங்கள்
முதலமைச்சராக பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் மக்களின் நலனுக்காக பல்வேறு முத்திரைத் திட்டங்களை அறிமுகப்படுத்தியதோடு, தமிழ்நாட்டைச் சமூகநீதியும், வளர்ச்சியும் இணைந்து விளங்கும் மாநிலமாக மாற்றி வருகிறார். உதாரணமாக மகளி ருக்கான விடியல் பேருந்து பயணத்திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், இன்னுயிர் காப்போம் –
நம்மைக் காக்கும் 48 திட்டம். நான் முதல்வன் திட்டம், முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு, பணிபுரியும் மகளிருக்கு தோழி விடுதிகள், மாணவர்கள் நலனுக்காக தமிழ்ப் புதல்வன், உங்களுடன் ஸ்டாலின், நலன் காக்கும் ஸ்டாலின், தாயுமானவர் உள்ளிட்ட பல்வேறு மகத்தான திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இதில் சில திட்டங்களை இந்தியாவில் பிற மாநிலங்களும், வெளிநாடுகளும் பின்பற்றும் வகையில் அமைந்துள்ளது. இதற்கு சான்றாக அண்மையில் சென்னை வந்திருந்த பஞ்சாப் மாநில முதல்-மந்திரி காலை பகவந்த்மான் உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்து, மக்கள் போற்றும் உன்னதத் தலைவர் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள். அனைத்து மாநிலங்களும் பின்பற்றக்கூடிய வகையாக உள்ளன என மனதாரப் பாராட்டினார்.
தமிழ்நாடு அரசின் நவீன வளர்ச்சிக்கும், திராவிட இயக்கத்தின் தொடர்ச்சிக்கும், மு.க.ஸ்டாலினின் 8 ஆண்டுகாலத் தலைமை எழுச்சியைத் தந்திருக்கிறது.