தந்தை பெரியார் கொள்கையை உலகறியச் செய்ய, உருவாகும் பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கி வரும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்தும், இப்பணியை மேலும் நிறைவேற்றி முடிக்க நன்கொடைக்கான வேண்டுகோள் விடுத்தும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
எனது பாசத்திற்குரிய கொள்கை உறவுகளே,
தமிழ் – திராவிட உணர்வாளர்களே,
பெரியாருக்கு நன்றி காட்டுவது நமது கடமை என்று கருதும் கண்ணுக்குத் தெரியாத பெரியார் பற்றாளர்களே!
உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!
நன்கொடையாளர்களுக்குத் தலைதாழ்ந்த நன்றி கலந்த பாரட்டுகள்!
கடந்த சில வாரங்களுக்குமுன், திருச்சி – சிறுகனூ ரில் வளர்ந்து ஓங்கிக் கொண்டிருக்கும் ‘‘பெரியார் உலகம்’’ உருவாக்கப் பணிகள் – சுணங்காது, தடைபடாமல் தொடர் வேகத்துடன் தொய்வின்றி நடைபெற்று முடிவடைய, அனைவரது பேராதரவும், நன்கொடை ஊக்குவிப்பும், பங்களிப்பும் மிக மிக அவசரத் தேவை என்பதை வலியுறுத்தி விடுத்த அன்பு வேண்டுகோளைப் பார்த்து, ஓடோடி வந்து ‘எமது கடமை’ இது என்ற உணர்வுடன் நன்கொடைகளைத் தந்து வரும் – ‘நன்றி மறவாத’ பலருக்கு – முதலில் தலைதாழ்ந்த நன்றி கலந்த பாராட்டுகள்!
வெளியூர் பயணத்தில் முதல் நிகழ்வாக – நேரே ‘பெரியார் உலக’ப் பணிகளைத்தான் சென்று கண்டோம்; மகிழ்ச்சிக் கண்ணீருடன் அய்யாவின் மாளிகைக்குச் சென்றோம், அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட வலி இருந்த நிலையிலும்!
குறுகிய காலத்தில் திரண்ட நன்கொடைகள்!
இந்தக் குறுகிய காலத்தி்ல, சுமார் ஒன்றரை மாதத்தில் நமது இலக்கு 2 கோடி ரூபாய் (எனது திரட்டல் கோட்டா) என்று இருகரங்கூப்பி விடுத்த வேண்டுகோளை ஏற்று, இதுவரை ஒரு கோடியே 2 லட்சம் ரூபாயை நேற்றுவரை (27.8.2025) அள்ளித் தந்துள்ளீர்கள். நன்றி! நன்றி!!
அந்த நன்கொடைகளை முறைப்படி சட்டம், விதி களுக்கு உடன்பட்ட முறையில் காசோலை, வரை வோலை (டி.டி.), அக்கவுண்ட் டிரான்ஸ்பர்மூலம் – நமது முறையான வேண்டுகோளை நன்கு உள்வாங்கி, நாளும் அனுப்பிக்கொண்டே உள்ளனர்.
நம்மிடம் நேரில் தந்து, நலம் விசாரித்து, சந்தித்து மகிழ ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தியும் வருகின்றனர். தந்தை பெரியார் என்ற சுயமரியாதைச் சூரியனின் ஒளிக்கதிர்கள் உலகத்தின் பற்பல பகுதிகளிலும் பரவிவரும் நிலையில், ‘பெரியார் உலக மயம்’ – ‘உலகம் பெரியார் மயம்’ என்ற இலக்கை அடைய, நாளும் பெரியாரை நாம் தெரிந்துகொண்டால் போதாது; இனிவரும் உலகமும், தலைமுறையும் தெரிந்து, தெளிதல்வேண்டும். அதன்மூலம் மானமும், அறிவும் பெற்ற மனிதர்களை அழகுடன் மூளை விலங்குடைத்து உருவாக்கவேண்டும்; திராவிடப் பேரினத்து மக்களை முன்னேற்ற வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போட வைத்த வரலாறு மக்களுக்குத் தெரியவேண்டும். சாக்ரடீஸ் வரலாறு எப்படி சரித்திர ஒளியாகிற்றோ அதுபோன்று காலத்தை வென்ற பெரியாரின் கருத்தி யலும், அதன் செயல்முறையும் பெற்ற வெற்றி ஆகியவற்றையும் வன்முறைக்கு இடமில்லாது அமைதியான அறிவுப் புரட்சியாக எப்படி அறிவாசான் சாதனைச் சரித்திரம் படைத்தார் என்பதை வெறும் சொல்லில் அல்ல, செயலில் காட்டத்தக்க வகையில் ‘பெரியார் உலக’த்தில் காட்சிப்படுத்தவிருக்கின்றோம்.
ஒப்பற்ற பகுத்தறிவு – சுயமரியாதை அறிந்திட ‘பெரியார் உலகம்!’
ஒரு தனி மனிதரின் – தலைவரின் தொடர் எதிர்நீச்சல் எப்படி பல நூற்றாண்டு ‘‘குருட்டு நம்பிக்கைகளை’’க் காலாவதியாக்கி, களம்கண்டு, வெற்றிக் கொடி நாட்டியது என்ற வரலாறு ‘வியப்பிற்கே வியப்புத்தருவதாக’ ஓங்கி உலகை அளந்து வென்று நின்று காட்டுகிறது என்பதை மழலையர் முதல் முதியவர்கள் வரை அனைவரும் – வயது இடைவெளியின்றி அறிந்திட பெரியார் உலகம் ஒப்பற்ற பகுத்தறிவு – சுயமரியாதை வரலாற்று ஊருணிபோல் அமையும்!
‘மண்டைச் சுரப்பின்’ மேன்மையை மேதினி உணர்ந்துகொள்ளச் செய்யும் ஏற்பாடு – காலக் கருவூலம் – கவனச் சிதறல் இல்லாத கண்காணிப்புடன் என்றும் இருக்க, நமது பங்களிப்பும் அவசியம் அல்லவா!
‘பெரியார் உலகத்தின்’ ஒரே ஒரு செங்கல்லாக இருந்தாலும், மனநிறைவு ஏற்படும்தானே! இந்த நன்கொடைகள் என்றும் மாறா மகிழ்ச்சியை நம் அனைவருக்கும் ஏற்படுத்தியிருப்பது உறுதி அல்லவா!
2026–இலும் ‘திராவிட மாடல்’ ஆட்சி!
ஒரு பெரும் (காது) அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, 100 விழுக்காடு பணிக்கு நான் ஆயத்தமாக இன்னும் ஓரிரு வாரங்கள் ஆகலாம் என்ற மருத்துவ யதார்த்தத்தையும் புறந்தள்ளி, நான், நமது தோழர்களையும், கொள்கை உறவுகளையும், நம்மீது கொள்ளை அன்பைப் பொழியும் பேராதரவுப் பெருந்தகைகளையும் சந்திக்கின்றோம். நமது கொள்கை லட்சியப் பயணத்தைத் தடுத்து நிறுத்திட முயலும் ‘தந்திரமூர்த்திகளின்’ சூழ்ச்சித் திட்டங்களை முறியடித்து, ஒப்பற்ற நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியை – அதன் ஒப்புவமை இல்லாத முதலமைச்சர், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை, 2026–க்குப்பின் முழு பலத்துடன் ஆட்சியில் அமர்த்திட, கொள்கை எதிரிகளின் மூல பலம் கண்டு, அதனை முறியடிக்கும் அறப்போர் களத்தினையும் எண்ணும் நமக்கு ஒரு புது சக்தி பிறக்கிறது – நோய் நொடி, வலிகள் மறைந்து, வலிமை வந்து நம்மைப் ‘பெருஉரு’க் கொள்ள வைக்கிறது!
நம்மால் முடியாதது – யாராலும் முடியாது!
தோழர்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை தரும் ஊக்கம் – நன்கொடைகள் – உற்சாக மூட்டலுக்குப் பதிலாக, அதனால் உங்களுக்குக் கடனை அடைக்கக் கவலைப்படும் நாணயமானவன் என்ற மனநிலையில், மேலும் மேலும் எஞ்சிய களப்பணிமூலம் – இயன்றவரை நான் உறுதியளிப்பதோடு,
‘‘நம்மால் முடியாதது யாராலும் முடியாது!
யாராலும் முடியாதது, நம்மால் மட்டுமே முடியும்’’ என்ற தன்னலம் மறுத்த தன்னம்பிக்கையின் உச்சத்தில் நின்று, ஓங்கி முழங்கிடுவோம்,
வாருங்கள் தோழர்களே!
தாருங்கள் நன்கொடைகள்!! என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்!
பல மாவட்டத் தோழர்கள் குறிப்பாக, உரத்தநாடு, மதுரை, தஞ்சை, மேட்டுப்பாளையம், தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்கள் அப்பணியை வேகமாகச் செய்து வருவது, எனக்கு மிக்க மகிழ்ச்சி!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
28.8.2025