ஆகஸ்ட் 23 அன்று இரண்டாவது தேசிய விண்வெளி நாள்.
“சந்திரயான் – 3” செயற்கைக்கோள் பாதுகாப்பாகத் தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் இந்த நாளைக் கொண்டாடுவது பொருத்தம் தான்! ஆனால், தரையிறங்கிய இடத்துக்குச் ‘சிவசக்தி பாய்ண்ட்’ என்று அறிவியலுக்குத் தொடர்பில்லாத இந்து மதக் கடவுளரின் பெயரை வைத்து, இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மைக்குக் கேடு விளைவித்த நாள் என்பதையும் கூடுதலாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சரி, ரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததுக்கு இப்போது என்ன என்று கேட்கிறீர்களா?
செய்திகளில் தான் பார்த்திருப்பீர்களே… ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் என்றொருவர். இமாச்சல் பிரதேசத்தில், தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ள பி.எம்.சிறீ நவோதயா பள்ளித் திட்டத்தின் கீழ் வரும் “ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி” மாணவர்கள் மத்தியில் உரையாற்றியிருக்கிறார் – தேசிய விண்வெளி நாளையொட்டி!
“முதன்முதலில் விண்வெளிக்குச் சென்றவர் யார்?” என்று அவர் கேள்வி எழுப்ப, பிள்ளைகள் பலர் கும்பலில் கோவிந்தா போட, சிலர் “நீல் ஆம்ஸ்ட்ராங்” என்று கூச்சலிட்டிருக்கிறார்கள்.
விவரம் தெரிந்த ஒன்றிரண்டு ஆசிரியர்கள் ‘அச்சச்சோ’ என்று பதறிப் போயினர்! நிலாவுக்குப் போன முதல் மனிதன் தானே ஆம்ஸ்ட்ராங்க்!
விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் ரஷ்யாவின் ‘யூரி ககாரின்’ ஆயிற்றே! இப்படி நம் பள்ளிக் குழந்தைகள் தவறாகச் சொல்லிவிட்டார்களே என்று தவித்துக் கொண்டிருந்த அதே நொடியில், “நை…” என்றிருக்கிறார் அமைச்சர் அனுராக்.
மேலும், கிலி கொண்டனர் பள்ளி ஆசிரியர்கள். ஒரு கணம் மூச்சை இறுக்கப் பிடித்துக் கொண்டனர்.
சரியான விடை என்ன தெரியுமா? என்று புதிர் போட்ட அமைச்சர் அனுராக் தாக்கூர், “ஹனுமான் என்பது தான் சரியான விடை! அவர் தான் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர்” என்றதும் தான் ஆசிரியர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
அமைச்சரே சொன்னபிறகு அதற்குத் தலையாட்ட வேண்டியது தானே!
“மூனைத் தொட்டது யாரு?”
“ஆம்ஸ்ட்ராங் சார்!”
“ங்கொய்யால… மூனைத் தொட்டது அமிர்தலிங்கம் டா! எந்த அமிர்தலிங்கம்? மூனைத் தொட்டது இந்த அமிர்தலிங்கம்!” என்று ‘கிங்’ படத்து வடிவேலு காமெடி பாணியில், சீரியசாக அனுராக் தாக்கூர் காமெடி செய்ய, நாடே கைகொட்டிச் சிரிக்கிறது.
போதாக்குறைக்கு நம்ம அக்கா தமிழிசை வேற, பத்திரிகையாளர்கள் இதைப் பற்றிக் கேட்டப்போ… “அது அவரோட நம்பிக்கை. அதை எப்படி நீங்க தப்பு சொல்ல முடியும்?” அப்படின்னு கேட்டிருக்காங்க!
அடேயப்பா… அப்போ இனிமேல் பரீட்சைப் பேப்பர்லயும் அவரவர் நம்பிக்கைப் படி பதில் எழுதலாமில்லையா? அதையும் அப்படியே தேசியக் கல்விக் கொள்கையில சேர்த்துட்டீங்கன்னா ஒரேடியா ‘பாடியை எடுத்துறலாம்’!
l புவி ‘ஈர்ப்பு’ விசையைக் கண்டுபிடித்தவர் யார்?
“விஷ்ணுவின் பன்றி அவதாரம்”
l சார்பியல் கொள்கையைக் கண்டுபிடித்தவர் யார்?
“சாணக்கியர்”
l உலகை வென்ற மாவீரன் நெப்போலியன்
போனோபார்ட் எங்கு பிறந்தார்?”
“அயோத்தியை அடுத்துள்ள நந்திகிராமில்!”
கவலையே வேண்டாம்! இதே லட்சணத்தில் போனால், மாணவர்களிடமே தேசியக் கல்விக் கொள்கைக்கு ஆதரவு பெருகிவிடும் போலவே! “எங்கள் நம்பிக்கைப் படி இது தான் பதில்” என்று சொன்னால், மறுக்காமல் ‘மார்க்’ போடுவது தானே ஆசிரியர்களின் கடமையாகிவிடும்.
நமக்கு என்ன கேள்வின்னா? முதலில் ஹனுமன் மனிதனா? வானரமா?
வாயு புத்திரன் ஹனுமன் என்றால், அதற்கு முன்பு வாயு கூட விண்வெளிக்குப் போனதில்லையா?
சைவர்கள் நம்பிக்கைப்படி, “ராவணனை வதம் செய்வதற்காக விஷ்ணு அவதாரம் எடுக்கும்போது, அவருக்கு உதவுவதற்காக சிவனும், பார்வதியும் ‘விண்ணுலகம்’ விட்டு மண்ணுலகம் வந்து வானர உரு எடுத்து, கலவி செய்து, பிள்ளை கருக் கொண்டு, இடையில் வந்த வாயுவுக்கு விசயத்தைச் சொல்லி, வானரப் பிள்ளையோடு விண்ணுலகம் திரும்பாமல், வாயுவின் வழியாக வானரக் குலத் தலைவனான கேசரியின் மனைவி அஞ்சனாவின் கருவறைக்குப் பிள்ளையைக் கடத்தி, அதன் மூலம் பிறந்த பிள்ளை தான் ஹனுமன்” (ஷ்ஷ்ஷப்பா… இப்பவே கண்ணைக் கட்டுதே!) என்று இவ்வளவு நாளும் சொல்லி வந்ததெல்லாம் பொய்யா கோப்ப்…..பால்!
“ஹனுமனின் தந்தை – சிவனா? வாயுவா? கேசரியா? என்று “பொருத்தமான விடையைத் தேர்ந்தெடு” பகுதிக்கு வினா வந்தால், மாணவர்களும் அவர்கள் விருப்பம் போல் பதில் அளிப்பதற்கு வசதியாகத் தானே கதையும் உள்ளது.
சரி, நம்ம சந்தேகத்துக்கு வருவோம்.
ஹனுமனுக்கு முன்னாடி கடவுள்கள் எல்லாம் விண்ணுலகில் இல்லையா?
உண்மையைச் சொல்லுங்கள் அனுராக்! மூனைத் தொட்டது அமிர்தலிங்கமா? அனுமானா?
– குப்பைக் கோழியார்