சென்னை, ஆக. 25– ஒன்றிய – மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை உரையாற்றினார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
கூட்டாட்சியும் அதிகாரப் பரவலாக்கமும்
இந்தக் கருத்தரங்கில், உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி குரியன் ஜோசப், இந்தியாவின் அரசியல் சட்டம் மாநிலங்களின் ஒன்றியம் எனத் தெளிவாகக் குறிப்பிடுவதைச் சுட்டிக்காட்டினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த உறவுகளை மறு ஆய்வு செய்ய எடுத்த முடிவை வரவேற்ற அவர், ஜனநாயகம் என்பது மக்களும் ஒன்றிய அரசும் பங்குதாரர்களாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி செலமேஸ்வர் பேசுகையில், இந்தியாவின் அரசியல் சாசனம் கூட்டாட்சி முறையை அடிப்படையாகக் கொண்டது என்று தெரிவித்தார். இந்த சாசனம் மட்டுமே இந்தியாவின் பல சமஸ்தானங்களை ஒன்றாக இணைக்க உதவியதாகவும் அவர் குறிப்பிட்டார். உச்ச நீதிமன்றங்களும் உயர் நீதிமன்றங்களும் ஒன்றிய அரசின் நிர்வாகப் பகுதியல்ல, அவை சுயேச்சையானவை என்றும் அவர் கூறினார்.
ஒன்றிய அரசின் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் என்றும், அது அனைவருக்கும் நல்லது என்றும் அவர் தெரிவித்தார். காடு மற்றும் கல்வி போன்ற துறைகளின் நிர்வாகம், மாநிலங்களிடமிருந்து மூன்றாவது பட்டியலுக்கு மாற்றப்பட்டது வேடிக்கையானது என்றும் அவர் விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து டில்லி உயர் நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி ஏ.பி. ஷா: தொகுதி சீரமைப்பு மற்றும் தேர்தல் குறித்து பேசினார். தேசிய நீதித்துறை அகாடமியின் மேனாள் தலைவர் பேராசிரியர் ஜி.மோகன் கோபால்: குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களின் பங்கு குறித்து உரையாற்றினார்.
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் அசோக் வர்தன் ஷெட்டி: மொழி, கல்வி மற்றும் சுகாதாரம் குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
இந்தக் கருத்தரங்கில், கேரள மேனாள் நிதியமைச்சர் டாக்டர் தாமஸ் அய்சக், தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் எம். கோவிந்தராவ், தமிழ்நாடு திட்டக் குழுவின் மேனாள் துணைத் தலைவர் பேராசிரியர் நாகநாதன், மூத்த வழக்குரைஞர் சஞ்சய் எக்டே மற்றும் தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினர். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் வரவேற்புரை ஆற்றினார்.
நடிகர் விஜய் கடந்த காலத்தை மறந்து விட்டு பேசக்கூடாது
முதலமைச்சர் குறித்த பேச்சுக்கு
அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம்
சென்னை, ஆக. 25- அரசியல் கட்சி தொடங்கிவிட்டோம் என்பதற்காக விஜய் கடந்த காலத்தை மறந்துவிட்டு முதலமைச்சரை மரியாதைக் குறைவாகப் பேசுவது சரியல்ல என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று (24.8.2025) அவர் கூறியதாவது:
கடந்த காலத்தை மறக்கக் கூடாது
அறிவுசார்ந்துதான் தமிழ் மொழியை திமுக உயர்த்திப் பிடிக்க நினைக்கிறது. ஆனால், பாஜக போன்ற அரசியல் கட்சிகள் தமிழ் 2,000 ஆண்டுகள் பழைமையானது. சமஸ்கிருதம் போன்ற மொழிகள் பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையானவை எனக் கூறி நமது வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள்.
தமிழினம் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை பயன்படுத்தியுள்ளது. ஆனால் அதை மூடி மறைக்கும் வேலையை ஒன்றிய அரசு செய்து வருகிறது. ஆனால், தமிழின் பெருமையை உலக அளவில் எடுத்து செல்வதற்கான முயற்சியில் திமுக இறங்கியுள்ளது.
அந்த வகையில் அடுத்து ஆண்டு ஜனவரி மாதம் பன்னாட்டு புத்தகக் கண்காட்சிக்கு 100 நாடுகளில் இருந்து புத்தகம் மற்றும் தமிழ் மொழி மீது ஆர்வமுள்ளவர்களை வரவழைக்க திட்டமிட்டுள்ளோம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நடிகர் விஜய் மரியாதை இல்லாமல் பேசியது தவறு. கலைஞர் குடும்பத்துடன் விஜய் குடும்பம் நெருக்கமான உறவு கொண்டவர்கள். உதயநிதியின் நல்ல நண்பனாக இருந்தவர். ஆனால். தற்போது ஓர் அரசியல் கட்சி தொடங்கிவிட்டோம் என்பதற்காக அனைத்தையும் மறந்து விட்டுப் பேசுவது சரியல்ல.
அதே போல், திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டுமென ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கருத்து கூறியுள்ளார். அமித்ஷாவுக்கு தமிழ்நாட்டின் அரசியல் பற்றி தெரியவில்லை.
75 ஆண்டுகள் பழமையான கட்சி திமுக, 4 தலை முறைகளையும் சேர்ந்த தொண்டர்கள் திமுகவில் உள்ளனர். அவர்களுக்கு இருக்கும் அரசியல் சிந்தனை தெளிவானவை. மேலும் திமுக கல்வி, சமூகநீதி யுடன் சேர்ந்து வளர்ந்த அரசியல் கட்சி அவ்வளவு எளிதில் அசைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.