பெரம்பலூர், ஆக. 24- செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் 04.10.2025 அன்று நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா கழக மாநில மாநாட்டை விளக்கி பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சி.தங்கராசு தலைமையில் பெரம்பலூர் எசனையில் 22..8.2025 அன்று நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் கழகப் பேச்சாளர் சிந்தனை செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில்;
சுயமரியாதை இயக்கத்தினுடைய 100ஆவது நிறைவு விழா மாநில மாநாடு செங்கல்பட்டு-மறைமலைநகரில் அக்டோபர் 4ஆம் தேதியன்று நடக்க இருக்கின்றது. சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்ததற்கான காரணம், தந்தை பெரியாருடைய தொண்டு, தந்தை பெரியார் அவர்கள் ஊட்டிய பகுத்தறிவை நாம் எப்படி பெற வேண்டும், சுயமரி யாதை இயக்கத்தினுடைய நோக்கங்கள் போன்றவற்றை விவரித்தார்.
மாநாட்டைக் குறித்து தமிழ்நாடு முழுக்க 100 விளக்க கூட்டம் எதற்காக? திராவிடர் கழகம் எதை செய்தாலும், எப்பொழுது செய்தாலும் அதை மக்கள் மத்தியிலே ஒரு பிரச்சார இயக்கமாக, பரப்புரை இயக்கமாக தந்தை பெரியாருடைய தத்துவத்தையும் கொள்கைகளையும் மக்கள் மத்தியிலே விதைக்கக்கூடிய இயக்கமாகத் தான் தான் இந்த இயக்கம் செயல்பட்டுக் கொண் டிருக்கிறது.
தற்போது கூட ஒருவர் புதிதாக கட்சி துவங்கி மாநாட்டை நடத்தி இருக்கிறார், அந்த மாநாட்டில் அவருடைய கொள்கையாக என்ன கூறுகிறார் , மிகச் சிறப்பாக மண்ணின் மக்களுக்காக உழைத்து வரும் திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தலைவர், முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திராவிட இயக்கத்தின் தத்துவ தலைவராக மக்களுக்காக உழைத்து வருகிறார். அப்பேர்ப்பட்ட ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று பெரியாரை வழிகாட்டியாக கொண்டிருக்கக் கூடிய அவர் சொல்லுகிறார் என்று சொன்னால் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்த சுயமரியாதை இயக்கம் தோன்றுவதற்கு முன்னால் ஆரிய பார்ப்பனக் கூட்டம் நம்முடைய மக்களை எவ்வாறு அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள், கடவுள்களின் பெயர் களால் முட்டாளாக்கி வைத்திருந்தார்கள், ஆனால் அவற்றையெல்லாம் இன் றைக்கு மாற்றி அமைத்திருக்கும் இயக்கம், இனிவரும் காலங்களில் மாற்றி அமைக்கக்கூடிய இயக்கம்தான் நம் முடைய சுயமரியாதை இயக்கம்.
பெண் கடவுள்களை நம்முடைய பெண்கள் வணங்கிக் கொண்டிருந்த நம் நாட்டிலே, இந்த கடவுள்களால் கொடுக்க முடியாத உரிமைகளையே நம்முடைய பெண்களுக்கு ஆணுக்கு உள்ள அனைத்து உரிமைகளையும் சமமாக பெற்றுத் தந்த இயக்கம் தான் நம்முடைய சுயமரியாதை இயக்கம்.
மதத்தின் பெயரால், சாஸ்திரத்தின் பெயரால், சம்பிரதாயத்தின் பெயரால் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டபோது அவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடிய இயக்கம் நம்முடைய சுயமரியாதை இயக்கம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இவ்வளவு ஏன்? நம் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடினாரே – காந்தியடிகள் சொல்கிறார், தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் துவங்குவதற்கு முன்பு மயிலாப்பூர் சீனிவாச அய்யங்கார் வீட்டிற்கு நான் சென்றால் என்னை திண்ணையில் தான் உட்கார வைப்பார், ஆனால் 1925இல் இந்த இயக்கத்தை துவங்கிய பின்பு 1927இல் சொல்கிறார் – இந்த இரண்டு ஆண்டுக்கு பிறகு என்னுடைய மனைவி சீனிவாச ஐயங்கார் வீட்டிற்கு அவர் சென்றால் அடுப்பங்கரை வரை புழங்குகிறார், இப்போதெல்லாம் முன்பு போல பேதம் காட்டுவதில்லை என்று கூறுகிறார்.
இது எதை காட்டுகிறது? தந்தை பெரியாருடைய கருத்துகள் பரவி காந்தியையே உள்ளே நுழைய வைத்தது நம்முடைய சுயமரியாதை இயக்கம்.
இதுபோல பல்வேறு மிகப்பெரிய தலைவர்களுக்கே சுயமரியாதை பெற்று தந்த இயக்கம் நம்முடைய இயக்கம் ஆகும்.
எனவே தோழர்களே இதுபோன்ற நிலைமைகளை எல்லாம் தொடர்ந்து மாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் நம்முடைய சுயமரியாதை இயக்கம் போராடி வருகிறது.
சுயமரியாதை இயக்கத்தினுடைய வரலாற்றை எல்லாம் மக்களுக்கு நாம் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டும், அதற்காகத் தான் இந்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, சுயமரியாதை இயக்கத்தினுடைய கொள்கைகளை எல்லாம் இந்த மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும், மீண்டும் மீண்டும் இந்த நாட்டிலே வர்ணாசிரம தர்மத்தை இங்கே நிலை நிறுத்துவதற்காக பாசிச பாஜக அரசு பல்வேறு சூழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறது.
இவற்றையெல்லாம் எதிர்த்து சுயமரியாதை இயக்கத்தை உயர்த்திப் பிடிக்கக் கூடிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் இந்த மாநாட்டிலே கலந்து கொள்ள இருக்கிறார்கள், இன்னும் பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்,
மாநாடு என்பது தமிழ்நாட்டினுடைய திருப்புமுனையாக அமையக் கூடிய மாநாடாக, திராவிட இயக்கத்தினுடைய ஆட்சியை தொடர்ச்சியாக கொண்டு செல்ல வழிவகுக்கும் ஒரு மாநாடாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இந்த மாநாட்டை வடிவமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாநாட்டிலே பெருந்திரளாக நாம் பங்கேற்க வேண்டும் என்று சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் சின்னசாமி, மாவட்ட செயலாளர் மு.விசையந்திரன், மாவட்ட காப்பாளர் அக்ரி ஆறுமுகம், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, பொதுக்குழு உறுப்பினர் அரங்கராசன், பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் நடராசன், ஆத்தூர் பகுத்தறிவாளர்கள் கழக தலைவர் முருகானந்தம், தமிழ்வழி கல்வி இயக்கம் சின்னப்பத்தமிழர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.