மாநிலக் கல்விக் கொள்கை சமத்துவமான திறன்சார் கல்வியை வலுப்படுத்தும்! மாணவர்கள், ஆசிரியர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

3 Min Read

சென்னை, ஆக. 24- தமிழ்நாட்டில் அனைத்து மாணவர்களும் சமத்துவமான கல்வி பெறுவதை மாநிலக் கல்விக் கொள்கை- 2025 மேம்படுத்தும் என்று அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழ்நாட்டிற்கென தனித்துவ மாநிலக் கல்விக் கொள்கை-2025 வடிவமைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான சந்தேகங்கள், கேள்விகளை ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் கேட்டிருந்தனர். அதற்கு அவர் அளித்த பதில்கள்:

கேள்வி: மாநில கல்விக் கொள்கை சமச்சீர் கல்வி முறையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும்?

– க.செல்வசிதம்பரம், ஆசிாியர், திருவாரூர்.

பதில்: சமச்சீர் கல்வி முறைதான் தமிழ்நாட்டின் முதுகெலும்பாக திகழ்கிறது. அதை மேலும் வலுப்படுத்தும் விதமாகவே மாநிலக் கல்விக் கொள்கை மூலம் உருவாக்கப் பெறும் பாடத்திட்டம் அமையும். அவை திறன்சார்ந்த கற்பித்தலையும், எதிர்காலத் தேவை மற்றும் சவால்களைக் கருத்தில் கொண்டும் வடிவமைக்கப்படும். இந்த ஓரே மாதிரியான பாடத்திட்டம் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் சமத்துவமான கல்வி பெறுவதை உறுதிசெய்யும்.

கேள்வி: மாநில கல்விக் கொள்கைக்கும் தற்போதைய நிலைமைக்கும் இடையே உள்ள முக்கிய வித்தியாசம் என்ன?

– வி.பூஜா, பிளஸ் 1 மாணவி, திருப்பத்தூர்.

பதில்: தற்போதைய கல்விமுறை வலுவான சமத்துவமிக்க கட்டமைப்பை கொண்டுள்ளது. எனினும், கரோனா தொற்று காலத்துக்குப்பின் கற்றலில் ஏற்பட்ட இடைவெளிகளை முழுமையாக சாிசெய்ய வேண்டும். தொழில்நுட்ப வழி மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கான கற்பித்தலையும் செம்மைப்படுத்த வேண்டிய அவசியமுள்ளது. அதனடிப்படையில்தான் மாநில கல்விக் கொள்கையின்  பாடத்திட்டம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்.

கேள்வி: மாநிலக் கல்விக் கொள்கை, தேசியக் கல்விக் கொள்கையுடன் எவ்வாறு மாறுபடுகிறது?

– செ.சந்தியா, பிளஸ் 2 மாணவி, தேனி

பதில்: தேசியக் கல்விக் கொள்கை நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை அமல் செய்ய முயற்சிக்கிறது. ஆனால், கல்வியென்பது ஒவ்வொரு மாநிலத்தின் தன்மைக்கேற்ப வழங்கப்பட வேண்டும். எனவேதான் நம் மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கையை உருவாக்கியுள்ளோம். தேசிய கல்விக் கொள்கையைத் திணிக்க நினைக்கும் மும்மொழிக் கொள்கையை ஏற்காமல் மாநில கல்விக்கொள்கை இருமொழிக் கொள்கைப் பின்பற்றலை உறுதி செய்கிறது. மேலும், தேசிய கல்விக்கொள்கை நாடு முழுவதும் ஒரே மாதிாியான பரந்த இலக்குகளை வழங்கும்போது, நாம் மாநிலத்தின் சமூகம், பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப நமது திட்டமிடல்களை வடிவமைத்து வழங்குகிறோம்.

கேள்வி: மாநில கல்விக் கொள்கையில் மதிப்பீடு மற்றும் தோ்வுகள் எப்படி மாறும்?

– வி.துர்காதேவி, ஆசிாியர், ஆரணி

பதில்: மதிப்பீடுகள் என்பது இனி மனப்பாடத்திறனை மட்டும் சார்ந்ததாக இல்லாமல் புாிந்து அறிதல், தீர்வு காணல், நடைமுறை பயன்பாடு ஆகியவற்றை கொண்டுஅமையும். கல்வி செயல்திறன்களுடன், வாழ்க்கைத் திறன்களையும் சோதித்து அறிவதாக பொதுத்தேர்வு அமையும்.

கேள்வி: சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் மாற்றப்படுமா?

– டி.சுபசிறீ, பிளஸ் 2 மாணவி, தஞ்சாவூர்

பதில்: இல்லை. சமச்சீர் கல்வியின் பாடப்புத்தகங்கள் அடிப்படை பாடப்பொருளாக இருக்கும். ஆனால், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறிவரும் சூழலுக்கேற்ப தொழில்நுட்பம், திறன்கள் சார்ந்தும், உள்ளுர் சூழலுக்கு ஏற்பவும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு அச்சு, டிஜிட்டல் வடிவிலும் கற்றல் வளங்கள் மேம்படுத்தப்படும்.

கேள்வி: மாநிலக் கல்விக் கொள்கையில் கூறியுள்ளதுபோல், கிராமப்புறப் பள்ளிகள் ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களை எவ்வாறு பெறும்?

– வி.ஆ.ஹர்சிதா, பிளஸ் 1 மாணவி, காரமடை

பதில்: டிஎன்ஸ்பார்க் விாிவாக்கம், வட்டார அளவில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைத்தல் சிறிய கிராமப்புற பள்ளிகளுக்கும் தொழில்நுட்ப வசதிகள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. வானவில் மன்றம் மற்றும் நடமாடும் ஆய்வகங்கள் மூலமாக தொலைதூரப் பகுதியிலுள்ள பள்ளி மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.

கேள்வி: மாநில கல்விக் கொள்கை வழியாக பின்தங்கிய பிாிவினருக்கு சமவாய்ப்பு எவ்வாறு வழங்கப்படும்?

– எஸ்.குமரேசுவாி, ஆசிாியர், திருப்பூர்

பதில்: உதவித்தொகை வசதிகள் மேலும் விாிவாக்கம் செய்யப்படும். ஆண்டுதோறும் சமத்துவ மதிப்பாய்வு மூலம் எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்கொள்ளும் தடைகளை நீக்குவதை உறுதி செய்கிறோம். மேலும், மாதிாிப் பள்ளிகள் மற்றும் வெற்றிப் பள்ளிகள் முன்னெடுப்புகளிலும் உள்ளடங்கிய கல்வியை முன்னிலைப்படுத்துகிறோம்.

– இவ்வாறு அமைச்சர் பதிலளித்துள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *