ஆஸ்திரேலியாவில் தந்தை பெரியார் பன்னாட்டு மாநாடு
செங்கற்பட்டு மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு
பெரியார் உலக மயமாகிக் கொண்டிருக்கிறார்!
திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் உருவாகிறது!
திராவிடத்தின் வேர் மக்கள் மனதில் ஊன்றியுள்ளது!
அதனை எவராலும் வீழ்த்த முடியாது – சல்லி வேரைக்கூட அசைக்க முடியாது!
ஊழலைப்பற்றிப் பேசுவோர் முதலில் தங்கள் முதுகைப் பார்க்கட்டும்!
தஞ்சையில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
செங்கற்பட்டு மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு
பெரியார் உலக மயமாகிக் கொண்டிருக்கிறார்!
திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் உருவாகிறது!
திராவிடத்தின் வேர் மக்கள் மனதில் ஊன்றியுள்ளது!
அதனை எவராலும் வீழ்த்த முடியாது – சல்லி வேரைக்கூட அசைக்க முடியாது!
ஊழலைப்பற்றிப் பேசுவோர் முதலில் தங்கள் முதுகைப் பார்க்கட்டும்!
தஞ்சையில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
தஞ்சை, ஆக.24 தந்தை பெரியார் உலக மயமாகிக் கொண்டிருக்கிறார். ‘திராவிட மாடல்’ அரசு இப்பொழுது நடந்துகொண்டிருக்கின்றது. இதனை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நேற்று (23.8.2025) தஞ்சைக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
வருகின்ற செப்டம்பர் 17 ஆம் நாள், தந்தை பெரியார் அவர்களின் 147 ஆம் ஆண்டு பிறந்த நாள் ஆகும். இப்பிறந்த நாளை மிகச் சிறப்பாக தமிழ்நாடு மட்டுமல்லாமல், உலகத்தில் உள்ள பல பகுதிகளிலும் கொண்டாடக்கூடிய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஆஸ்திரேலியாவில்
பெரியார் பன்னாட்டு மாநாடு!
பெரியார் பன்னாட்டு மாநாடு!
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டி ருக்கக் கூடிய பெரியார் பன்னாட்டமைப்பு, இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள பெரியார்– அம்பேத்கர் அமைப்பினரோடு இணைந்து, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, ஜாதி ஒழிப்பு மாநாட்டினை, பன்னாட்டு மாநாடாக (இன்டர்நேஷனல் கான்பரன்சாக) நடத்தவிருக்கிறார்கள்.
அம்மாநாட்டிற்குத் தமிழ்நாட்டிலிருந்து அமைச்சர் பெருமக்கள், தலைவர்கள் பங்கேற்க அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். உலகில் உள்ள பற்பல நாடுகளிலிருந்தும் அம்மாநாட்டில் பங்கேற்கவிருக்கிறார்கள். இரண்டு அல்லது மூன்று நாள்கள் அம்மாநாட்டினை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
மாநாட்டிற்கான தேதியை இன்னும் உறுதிப்படுத்தவில்லையென்றாலும், நவம்பர் மாதம் முதல் வாரத்தில் அம்மாநாடு நடைபெறும்.
21 மொழிகளிலும் தந்தை பெரியார் சிந்தனைகளைக் கொண்டு வந்துள்ளது தமிழ்நாடு அரசு!
எனவே, பெரியாருடைய சிந்தனைகளையும், ஆய்வுகளையும் உலக நாடுகள் பலவும் பின்பற்றி பெரியார் உலகமயமாகிறார். திருச்சி – சிறு கனூரில் பெரியார் உலகப் பணிகளும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தந்தை பெரியாருடைய 150 ஆம் ஆண்டு பிறந்த நாளில், மிகப்பெரும் பகுதி பணிகள் முடிவு பெற்று, பெரியார் உலகம் நடைமுறைக்கு வந்து திறக்கப்படக் கூடிய அளவிற்கு, அதனுடைய பணிகள் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.
தமிழ்நாடு அரசு பெரியாருடைய சிந்தனைகளை ரூ.20 கோடி நிதி ஒதுக்கி, 21 மொழிகளில் கொண்டு வந்திருப்பது மிகச் சிறப்பானது என்பதும் பெரியார் உலக மயமாகிக் கொண்டிருக்கின்றார் என்பதற்குரியதாகும்.
செங்கற்பட்டு மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா!
இந்தச் சூழ்நிலையில், சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு இவ்வாண்டு நிறைவு பெறுவதையொட்டி, செங்கல்பட்டு மறைமலைநகரில் நடைபெறவிருக்கின்ற நிறைவு மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையேற்று நடத்திக் கொடுக்க விருக்கின்றார்.
1929 ஆம் ஆண்டு முதல் சுயமரியாதை மாகாண மாநாடு, அன்றைய முதலமைச்சர் டாக்டர் சுப்பராயன் போன்றவர்களை அழைத்து மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அன்றைக்குக் கலைஞர் அவர்கள் 5 வயது குழந்தையாக இருக்கின்றார். எங்களைப் போன்றவர்கள் பிறக்காத காலம் அது.
அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்களை, பிற்காலத்தில், முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள், குறிப்பாகப் பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டத்தை அவரே நிறைவேற்றினார்.
எனவே, வரலாற்றில் திராவிடர் இயக்கம் எவ்வளவு ஆழமானது என்பதற்கு இது ஓர் அடையாளம்.
அதே செங்கல்பட்டில், அப்படி ஒரு மாநாடு நடைபெற்றபோது, முதலமைச்சராக கலைஞர் அவர்கள் இருந்தார்கள். அமைச்சராக அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அன்பரசன் அவர்கள் இருந்தார்; இப்போதும் இருக்கிறார் அவர்.
செங்கற்பட்டில் கலைஞர் பங்கேற்ற 80 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்க விழா!
இவர்கள் இரண்டு பேரையும் முன்னி லைப்படுத்தி, திராவிடர் கழகம் சார்பாக, முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டின் 80 ஆம் ஆண்டு விழாவினை ஏற்பாடு செய்து, ஒரு பெரிய கருத்தரங்கத்தை நடத்தி, மாநாடு நடைபெற்ற இடத்திலேயே படிப்பகம் மற்றவற்றிற்குக் கலைஞர் அவர்கள் அடிக்கல் நாட்டி, திறந்து வைத்தார்.
இந்த ஆண்டு நூறாவது ஆண்டு – இந்த நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டினை நம்முடைய திராவிட மாடல் அரசின் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தலைமையேற்று நடத்தவிருக்கின்றார்.
திராவிடம் என்பதை நாங்கள் வேரோடு பிடுங்கி எறிவோம் என்றெல்லாம் சிலர் பிடுங்குகின்ற வேலையில் இருக்கிறார்கள். ஏற்கெனவே அவர்கள் தமிழ்நாட்டினுடைய உரிமைகளையெல்லாம் பிடுங்கி விட்டார்கள் என்பதற்காகத்தான நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம்; அவற்றைத் தடுத்து நிறுத்திக் கொணடிருக்கின்றோம்.
‘‘இப்போது வேரோடு பிடுங்குவோம்’’ என்று சொல்லி, உள்ளே நுழைலயாம் என்று, அமித்ஷா போன்றவர்கள் கனவு காண்கிறார்கள்.
திராவிடத்தினுடைய வேர் எங்கே இருக்கின்றது என்று உங்களால் கண்டுபிடிக்க முடியாது. இந்த வேர் மிகவும் சாதாரண வேரல்ல; அது மண்ணில் அல்ல; மக்களிடத்திலே இருக்கிறது.
உலகம் முழுவதும் பெரியாருடைய கருத்து கள், திராவிடக் கருத்துகள், திராவிடத்தால் பயனடைந்த வர்களின் நன்றியுணர்வுகள் மிகத் தெளிவாக இருக்கின் றன என்பதைத்தான் நான் தொடக்கத்தில் சொன்னேன்.
தெருக்கூத்தில் கட்டியம் கட்டிக்கொண்டு, ‘‘நானே ராஜா, மாதம் மும்மாரி பொழிந்ததா மந்திரி?’’ என்று வசனம் பேசக்கூடிய அமைப்புகள் இல்லை. இது ஓர் ஆழமான அமைப்பு என்பதற்காகத்தான், அதனுடைய வரலாற்றைச் சொன்னேன்.
செங்கற்பட்டு மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றினார் முதலமைச்சர் கலைஞர்!
5 வயது குழந்தையாக இருந்தபோது நடைபெற்ற முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை 45 வயதில் முதலமைச்ச ரானவுடன், அந்தத் தீர்மானங்களை செயல்படுத்துகிறார்.
செங்கல்பட்டு மாநாட்டுத் தீர்மானங்கள் எல்லாம் இன்றைக்கு நடைமுறையில் எல்லா அரசுகளாலும் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.
கலைஞருக்குப் பிறகு அந்த இடம் வெற்றிடம் அல்ல; கற்றிடம்தான், தொடரக்கூடிய இடம்தான் என்பதற்கொப்ப நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டினை அக்டோபர் 4 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில். தலைமையேற்று நடத்தவிருக்கின்றார்.
திராவிடத்தின் சல்லி வேரைக்கூட யாராலும் அசைக்க முடியாது!
தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்ல, உலகத்தின் பல பகுதிகளிலிருந்து தோழர்கள் அம்மாநாட்டிற்கு வரவிருக்கின்றார்கள். அன்றைக்கு அமைச்சராக இருந்து, 80 ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடிய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இருந்த அதே அமைச்சர் அன்பரசனும் பங்கேற்கவிருக்கின்றார்.
எனவே, திராவிடத்தின் வேரை அகற்றிவிடலாம் என்று அமித்ஷா போன்றவர்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. காரணம் என்னவென்றால், அந்த வேரை எங்கே இருக்கின்றது என்று கண்டுபிடிக்க, நீங்கள் தோண்டத் தோண்ட மண் ஏறிக்கொண்டே போகும். அதில் பி.ஜே.பி. போன்ற மதச் சார்பு வெறி அமைப்பினர் அந்த மண் சரிந்து உள்ளே போகக்கூடிய வாய்ப்புதான் வரும். அதிலிருந்து பி.ஜே.பி.யை காப்பாற்றுவதற்காக, மற்றவர்கள்தான் மனிதாபிமானத்தோடு பணி செய்யவேண்டிய அவசியம் வருமே தவிர, ஒருபோதும் திராவிடத்தின் வேரை அல்ல; சல்லி வேரைக்கூட உங்களால தொட முடியாது. காரணம், அந்த வேர், மண்ணில் அல்ல; மக்களிடையே இருக்கிறது.
உள்துறை அமைச்சர்
அமித்ஷா கூற்றுக்குப் பதிலடி!
அமித்ஷா கூற்றுக்குப் பதிலடி!
செய்தியாளர்: ஒன்றிய உள்துறை அமைச்சர், 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், தி.மு.க. துடைத்தெறி யப்படும் என்று சொல்லியிருக்கிறாரே?
தமிழர் தலைவர்: மக்கள் வாக்கை மட்டுமே நம்பி நாங்கள் இருக்கின்றோம். மற்ற வித்தைகளையெல்லாம் அவர்கள் நம்பி இருக்கிறார்கள் என்றால், அந்த வித்தைகளுக்குக்கூட தமிழ்நாட்டில் இடம் கிடையாது.
அது அவர்களுடைய ஆசையாக இருக்கலாம்; ஆசைப்படுவதற்கு யாருக்கும் உரிமை உண்டு.
தமிழ்நாட்டில் கிராமியப் பழமொழி உண்டு; அதன் முதல் பகுதியை மட்டும் நான் சொல்லவிரும்புகிறேன். இரண்டாவது பகுதியை சொல்லவேண்டிய அவசியம் இல்லை.
‘‘ஆசை இருக்கிறது ராஜாவாக; அம்சம் இருக்கிறது …………… …………………….’’
அந்த வார்த்தைகளைச் சொன்னால், கொஞ்சம் தரக்குறைவாக இருக்கும்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு என்னென்னமோ செய்து பார்த்தார்கள். எவ்வளவு பேரை நீங்கள் விலைக்கு வாங்கினாலும், அதனால் ஒன்றும் பயனில்லை.
எந்தக் கூட்டணி வலுபெறுகிறது?
மோடி வந்தார், ராஜேந்திர சோழனைப் பிடித்தார். அதனுடைய விளைவு, ஏற்கெனவே உங்கள் கூட்டணியிலிருந்து ஒருவர் விலகிப் போனார்.
தி.மு.க. கூட்டணியில், புதிதாகச் சேருகிறோம், சேருகிறோம் என்று வரிசையில் நிற்கிறார்கள்.
ஒரு கூட்டணியில், இட நெருக்கடி; இன்னொரு கூட்டணியில், இருந்தவர்கள் காலியாகக் கூடிய நிலைமை. அதற்கு உதாரணம், ஓ.பி.எஸ்.
தமிழ்நாட்டிற்கு, மோடி வந்தார், ஓடி வந்தார், பலரைத் தேடி வந்தார்; நாடி வந்தார். மோடி, மோடி என்று சொன்னார்கள். ‘‘மோடி எங்கள் டாடி’’ என்று ஒரு கட்சியைச் சார்ந்தவர் சொன்னார்.
அப்படியெல்லாம் இருந்த ஓரிடத்தில், மோடி வந்துவிட்டுப் போனவுடன், அந்த ஒருவரும் வெளியேறிவிட்டார். பிறகு என்னென்னமோ செய்து, அவரை தாஜா செய்து பார்க்கிறார்கள்; அவர்களுடைய தாஜா பயனிக்கவில்லை.
இந்த நிலையை நன்றாகப் புரிந்துகொண்டி ருக்கின்றார்கள் தமிழ்நாட்டு மக்கள்.
அந்தக் கூட்டணியிலிருந்து தப்பிக்கலாம் என்று வெளியே குதிக்கிறார்கள். ஏனென்றால், பி.ஜே.பி. கூட்டணி மூழ்குகின்ற கப்பல் என்று.
ஆனால், வெளியில் இருப்பவர்கள், தி.மு.க. கூட்டணிதான் மக்களுக்காகப் பாடுபடுகின்ற கூட்டணி என்று சொல்லி, அந்தக் கூட்டணியில் சேருவதற்கு, தங்களுடைய கருத்துகளையெல்லாம் வளைத்து வளைத்து சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ஏற்கெ னவே கூட்டணியில் உள்ளவர்கள் உறுதியானவர்கள். வருகின்றவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஆய்வு செய்து முடிவு செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
அ.தி.மு.க.வில் உள்ள கொள்கை தெரிந்தவர்கள், இப்போது வெளியேறுகிறார்கள் என்றால், இதுதான் மோடியினுடைய சாதனை, இதுதான் ‘அமித்ஷா தி.மு.க.வினுடைய’ சாதனை!
பி.ஜே.பி. செய்யாத ஊழலா?
செய்தியாளர்: தி.மு.க. ஊழல் கட்சி, அடுத்து உதயநிதி முதலமைச்சராகக் கூடிய வாய்ப்பு இல்லை என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லி யிருக்கிறாரே?
தமிழர் தலைவர்: என்னிடம் ஒரு பட்டியலே இருக்கிறது. தேர்தல் பத்திரத்தைப்பற்றி, உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு கொடுத்தது?
தேர்தல் பத்திரத்தில், எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்று சொல்லுகின்ற நேரத்தில், 12 ஆயிரம் கோடி ரூபாயை பி.ஜே.பி. வாங்கியிருக்கிறது. அதற்கு என்ன கணக்கு என்பதைப்பற்றிச் சொல்லவில்லை.
மத்தியப் பிரதேசத்தில் வியாபம் ஊழல் என்று தேர்தல் ஊழலைச் செய்தது அரசாங்கம்.
ஆனால், யார் ஊழல் செய்தார்களோ, அவர்களுக்குப் புரமோஷன் கொடுத்து, ஒன்றிய அரசில் பதவி கொடுத்திருக்கிறார்கள். தேர்தலில் தோல்வி அடைந்த வர்களுக்கெல்லாம் ஒன்றிய அரசில் வைத்திருக்கிறார்கள்
எனவே, ஊழலைப்பற்றிப் பேசுவதற்கு எந்தத் தகுதி யும் பி.ஜே.பி.,க்குக் கிடையாது.
ஊழல் கட்சி தி.மு.க. என்று இன்றைக்கு ஆதாரமில்லா மல் சொல்கிறார்களே, உச்சநீதிமன்றத்திலேயே விவரம் கேட்டிருக்கிறார்கள், ஆயிரம் கோடி ரூபாய்க்கு என்ன கணக்கு என்று?
கடந்த நாடாளுமன்றத் தேர்தல்பற்றி உங்க ளுக்கெல்லாம் நினைவில் இருக்கலாம். கடந்த நாடாளு மன்றத் தேர்தலில், தனியாக நின்றார்கள். 40 இடங்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது.
சிவகங்கை தொகுதிக்கு பா.ஜ.க. வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டார். அவருக்கு மிக அணுகூலமாகப் பிரச்சாரம் செய்வதற்காக, அமாவாசை, கிருத்திகையையெல்லாம் பார்த்து வந்து இறங்கியவர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
அவரை மேடையில் வைத்துக்கொண்டு, அறி முகங்களைச் செய்தார்கள். ஓராண்டாக ஜாமீன் கேட்டிருக்கிறார் நீதிமன்றத்தில். மேடையில் இருந்த ‘‘மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதி லிமிடெட்’’ டில் பணம் டெபாசிட் செய்தவர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டவர். அந்தக் குற்றம் செய்யப்பட்டவர், பா.ஜ.க. வேட்பாளராக, தேசிய முன்னணியின் சார்பில் நிறுத்தப்பட்ட ஒருவர்.
இன்னும் ஜாமீன் மேல் ஜாமீன் கேட்டுக் கொண்டி ருக்கின்றார் அவர்.
அவர்களுடைய ஊழலுக்கு இந்த ஒரே ஒரு சாம்பிள் போதும். இதில் இன்னொன்றைக் கோடிட்டுக் காட்டவேண்டிய விஷயம் என்னவென்றால்,
அந்த நிதி முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுகின்றபோது, நீதிபதி அவர்கள், ‘‘ஏன், பணம் டெபாசிட் செய்தவர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை?’’ என்று.
அப்போது காவல்துறை சார்பில் பதிலளிக்கையில், ‘‘குற்றம் சுமத்தப்பட்டு சிறைச்சாலையில் இருக்கின்ற வருக்கு ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன. 2000 கிலோ தங்கம் வாங்கி வைத்திருக்கிறார்’’ என்று சொன்னார்கள்.
மற்றவர்களுடைய ஊழலைவிட, இது தங்கமான ஊழல். தங்கமான ஊழலைத்தான், சங்கமாக வந்து சொல்கிறார். அவர் யோக்கியர் என்று, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் செய்ய வந்தார்.
இவர்களுடைய நிலை என்ன என்பதற்கு, ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஆகவே, கண்ணாடி வீட்டில் இருக்கின்ற இவர்கள், கல்லெறியக் கூடாது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது ஊழல் ஊழல் என்று சொன்னவையெல்லாம், இதுவரை நிரூபிக்கப்பட்டு இருக்கிறதா? ஏதாவது வழக்குத் தொடுக்கப்பட்டு இருக்கிறதா?
உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விக்குப்
பதில் என்ன?
பதில் என்ன?
அமலாக்கத் துறையைப்பற்றிச் சொல்லுகின்றபோது, உச்சநீதிமன்றம் ஒரு கேள்வி கேட்டது, ‘‘நீங்கள் இது வரையில் 102–க்கும் மேற்பட்ட வழக்குப் போட்டி ருக்கிறீர்களே, இதுவரையில் எத்தனை வழக்குகளில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்?’’ என்று.
102 வழக்கில், இரண்டே, இரண்டு வழக்குகளில்தான் வெற்றி பெற்றிருக்கின்றோம் என்று சொன்னது பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கிறது.
எனவேதான், ஊழல் பிரச்சாரம் என்பது இருக்கின்றதே, இது ஒரு அவதூறின் உச்சக்கட்டம்!
ஆகவேதான், ஊழலுக்காக இதுவரை யார் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஊழலில் யார் சிக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதுகுறித்து பட்டியிலே இருக்கிறது.
உதயநிதி முதலமைச்சராக ஆக முடியாது என்று சொல்கிறார். முதலமைச்சர் பதவியில், மு.க.ஸ்டாலின் அவர்கள், நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். முதலமைச்சருக்கு உதவக் கூடிய பணிகளைத்தான் துணை முதலமைச்சராக இருக்கக்கூடிய உதயநிதி செய்துகொண்டிருக்கின்றார்.
சாவை விட மிகவும் ஆபத்தானது, சாவு பயம். அந்தப் பயம்தான் அமித்ஷாவை ஆட்கொண்டிருக்கின்றது.
ஆகவே, அவர்கள் வெற்றி பெறுவது அவ்வளவு சுலபமல்ல என்று சொல்கிறார்.
நான் ஏற்கெனவே சொன்னதை மீண்டும் சொல்கி றேன், திராவிடத்தின் வேரை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. காரணம், இது பெரியார் மண்.
இப்படித்தான் 1938 இல் சத்தியமூர்த்திகள் தோன்றி னார்கள். ஆழமாகக் குழிதோண்டிப் புதைத்துவிட்டோம் நீதிக்கட்சியை என்று சொன்னார்கள்.
1967 இல் அண்ணா என்ன சொன்னார்?
1967 இல் முதலமைச்சராக அண்ணா வந்தவுடன் சொன்னார், ‘‘நீதிக்கட்சியினுடைய பேரன்தான் இப்போது வந்திருக்கின்றேன்’’ என்று.
அந்த வரலாறு தொடருகிறது. ஆகவேதான், அமித்ஷாக்களின் பேச்சுகள் எல்லாம் வெறும் காட்சி களாகத்தான் இருக்குமே தவிர, ஒரு போதும் செயல்க ளாக மலரப் போவதில்லை. தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்.
அந்தக் கோபத்தினால்தான், கொல்லைப்புற வழியாகக் குறுக்கு வழிச் சட்டங்களைக் கொண்டு வருகிறார்கள்.
மதுரை த.வெ.க. மாநாடுபற்றி…!
செய்தியாளர்: மதுரை த.வெ.க. மாநாட்டில் ஒரு பக்கம் அண்ணாவையும், ஒரு பக்கம் எம்.ஜி.ஆரையும் வைத்துக்கொண்டு, தி.மு.க. ஆட்சியை ஒழிப்போம் என்று விஜய் பேசியிருக்கிறாரே, அது சாத்தியமா?
தமிழர் தலைவர்: அவருக்கு இன்னும் நிறைய பேரினுடைய படம் தேவைப்படுகிறது. அடுத்தடுத்து மாநாட்டில் எத்தனை படம் தேவைப்படும் என்று சொல்ல முடியாது.
ஏனென்றால், அவர் படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையும் காட்டுவதற்கு இல்லை. அதனால்தான், இரவல் படத்தை வாங்கலாமா? என்று நினைக்கிறார்கள்.
எம்.ஜி.ஆரை இவர்கள் படுத்துகின்ற பாட்டைப் பார்த்தால், நமக்கே பரிதாபமாக இருக்கிறது. காரணம் என்னவென்றால், ஒருவர், ‘‘நான் கருப்பு எம்.ஜி.ஆர்.’’ என்றார்.
இன்னொருவர் ‘‘சிவப்பு எம்.ஜி.ஆர்.’’ என்கிறார். இன்னொருவர், ‘‘வெள்ளை எம்.ஜி.ஆர்.’’ என்கிறார்.
மொத்தமே ஏழு வண்ணங்கள்தான் இருக்கின்றன. எல்லா வண்ணங்களையும் தாண்டி, எத்தனை எம்.ஜி.ஆர்.?
ஆகவேதான், சொந்தமான சரக்கு என்ன? என்னை மக்கள் ஆட்சியில் அமர்த்தினால், இன்னின்ன கொள்கைகளைச் செய்வேன். சிறப்பான கொள்கைகள் அவை என்று அவர் சொல்லியிருக்கிறாரா?
பண்பாடற்ற பேச்சு – ஒரு முதலமைச்சரை எப்படி அழைப்பது என்று தெரியாத அளவிற்கு, சினிமா டயலாக் பேசியே பழக்கப்பட்டவர்கள்; இதையும் ஒரு திரைப்பட டயலாக்காகவே ஆக்கிக் கொண்டிருக்கின்றார்.
திரைப்படக் காட்சியில், சண்டையின்போது 10 பேர் கீழே விழுவார்கள்; கதாநாயகர் கடைசியில் இருப்பார். அது திரைப்படக் காட்சி. அது திரைப்படத்திற்கு வேண்டு மானால் நன்றாக இருக்கலாம். இப்போது சண்டைக் காட்சிகள் இருக்கும் திரைப்படங்கள் ஓடுவதில்லை என்று சொல்கிறார்கள்.
130 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் –
அரசியல் சட்டத்திற்கு விரோதமானது!
அரசியல் சட்டத்திற்கு விரோதமானது!
செய்தியாளர்: 30 நாள்கள் சிறைச்சாலையில் இருந்தால், முதலமைச்சரோ, அமைச்சரோ பதவியில் நீடிக்க முடியாது என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு 130 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இந்தச் சட்டத்தைக் கண்டு தி.மு.க. பயப்படுகிறது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லியிருக்கிறாரே?
தமிழர் தலைவர்: அது ஒரு கருப்புச் சட்டம். ஏனென்றால், நீதிமுறைக்கே முரணானது அது.
நான் வழக்குரைஞர் என்ற முறையில், சட்டம் தெரிந்தவன் என்ற முறையில் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறேன்.
சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு, குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட பிறகுதான், ஒருவர் குற்றவாளி. கொஞ்சம் அதில் சந்தேகம் இருந்தாலும்கூட, ’பெனிபிட் ஆஃப் தி டவுட், வில் கோ டூ தி அக்கியூஸ்ட்’
கிரிமினல் லா என்று சொல்லக்கூடிய குற்றவியல் சட்டத்தினுடைய தத்துவம் என்னவென்றால், ‘‘பத்து குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஆனால், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது’’ என்பதுதான்.
இந்தச் சட்டத்தை அனைவரும்
ஒன்றிணைந்து எதிர்க்கவேண்டும்!
ஒன்றிணைந்து எதிர்க்கவேண்டும்!
ஆகவேதான், ஒருவர் குற்றம் சுமத்தப்பட்டவரே தவிர, அவர் குற்றவாளி ஆகமாட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை கொடுத்தால்தான் அவர் குற்றவாளி.
ஒன்றிய பா.ஜ.க.வில், ஓர் அம்மையார் , கோட்சேவி னுடைய புகழ் பாடினார். குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டவர். அவர் ஜாமீனில் வெளியே வருகிறார். அவருடைய தண்டனையை நிறுத்தி வைக்கி றார்கள். தண்டனையை நிறுத்தி வைக்கின்ற சட்டம் எல்லாம் இருக்கின்றன. இதனுடைய தத்துவம் என்ன?
இதற்கு நேர் முரண் அல்லவா, இப்போது ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள 130 ஆவது அரசியல் சட்டத் திருத்தச் சட்டம்.
பிடிக்காத ஒருவர்மீது வழக்குப் போடுகிறார்கள்; நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள்கள் ரிமாண்ட் செய்யப்படுகிறார். 15 நாள்கள் முடிந்தவுடன், நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்படும்போது, ‘‘இவரை வெளியே விட்டால், சாட்சியங்களைக் கலைத்து விடுவார். ஆகவே, இவருக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது’’ என்று காவல்துறை சொன்னவுடன், மேலும் 15 நாள்கள் ரிமாண்ட் செய்யப்படுவார். 30 நாள்கள் அவர் சிறைச்சாலையில் இருக்கிறார்.
ஒரு விசாரணையும் நடைபெறாமல், அவருடைய பதவி பறிக்கப்பட்டால், அது என்ன நியாயம்?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்ற பிரதமர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்ற முதல மைச்சர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் இந்தச் சட்டத்தால் பாதிக்கப்படுவார்கள்.
ஆகவேதான், ஒன்றிய அரசின் இந்தச் சட்டத் திருத்த மசோதா, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. குற்றவியல் சட்டத்திற்கு விரோதம். இயற்கைச் சட்டத்திற்கு விரோதம். நியாயத்திற்கு விரோதமாகும். ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் ஒன்றி ணைந்து அந்தச் சட்டத்தை எதிர்க்கவேண்டும்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களி டம் கூறினார்.