கேள்வி 1: இந்து தர்மத்தையும், இந்துக் கலாச்சாரத்தையும், இந்துக் கடவுள்களையும் அவதூறாகப் பேசுபவர்களையும், சமூக வலைதளங்களில் பதிய விடுபவர்களையும் இந்துக்கள் ஒன்று சேர்ந்து சகல விதமான ஆயுதங்களை கையில் எடுத்துக்கொண்டு அவர்களை சாலையில் நடமாட விடமுடியாத அளவுக்கு எதிர்கொள்ள வேண்டும் என மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் பேசியுள்ளாரே?
– மன்னை சித்து, மன்னார்குடி – 1.
பதில் 1: மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் இப்படிப் பேசுவதைக் கண்டு சட்டமும், காவல்துறையும் கைகட்டி இருக்கலாமா? திராவிடர் கழகத் தோழர்கள் – பொறுப்பாளர்கள் மன்னை துவங்கி பல ஊர்களிலும் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, புகார் மனுக்கள் கொடுத்து, நடவடிக்கை உடனடியாக செயல்வடிவம் பெறாவிட்டால், உயர்நீதிமன்றத்தில வழக்கும் தொடர, நமது இயக்க சட்டத்துறை ஆயத்த ஏற்பாடுகளை அவசர நடவடிக்கையாகவே செய்ய முன்வர வேண்டும்!மதுரை ஆதீனம் பேசியதைவிட அதீத வன்முறைப் பேச்சு இது.
••••
கேள்வி 2: இந்தியா கூட்டணியின் சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக மேனாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான சுதர்சன் ரெட்டியை அறிவித்திருப்பது மிகச்சரியான தேர்வாகக் கருதலாமா?
– கோ.நண்பன், மேற்கு தாம்பரம்.
பதில் 2: தகுதிமிக்க, சரியான, நல்ல தேர்வு. ஜனநாயகத்தில் – அரசியல் சட்டப்படி, மனித உரிமைகளின் பாதுகாவலராக இருப்பார் – இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜஸ்டிஸ் சுதர்சன் ரெட்டி. எனது அறிக்கையைப் (‘விடுதலை’ 20.8.2025) படியுங்கள்.
••••
கேள்வி 3: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலக்கெடு விதித்த விவகாரத்தில், குடியரசுத் தலைவரின் கேள்விகள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், “தீர்ப்பை மாற்ற மாட்டோம், கருத்து மட்டுமே தெரிவிப்போம்” என்று நீதிபதிகள் தெரிவித்திருப்பதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
-ஆர்.கார்த்தி, புதுடில்லி.
பதில் 3: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு அரசியல் சட்டத்தின் மாண்புகளைக் காப்பாற்றும் காவல் அரணாக இருப்பது ஆறுதல் அளிக்கிறது!
••••
கேள்வி 4: ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வறுமை ஒழிப்புத் திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, பக்தர் ஒருவர் தனது தொழிலில் வெற்றி அடைந்ததால் திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் தருவதாகத் தெரிவிப்பதை அடுத்து அத் தங்கத்தை ஆக்கப்பூர்வமான பணிகளுக்குப் பயன்படுத்துவாரா?
– வே.பெருமாள்சாமி, அய்தராபாத்.
பதில் 4: “காளை ஒருபோதும் கன்று போடாது!”, “எட்டிப்பழம் இனித்தாலும்; இளித்தாலும் யாருக்கும் பயன்படாது!” – வீண் நம்பிக்கை வேண்டாம்!
••••
கேள்வி 5: தேர்தல் ஆணையம் – பா. ஜனதா இடையே கூட்டு நிலவுவதாகவும், பீகாரில் ‘ஒரு வாக்குகூட திருட விடமாட்டோம்’ என்றும் ராகுல்காந்தி திட்டவட்டமாக தெரிவித்திருப்பதையொட்டி அக்கட்சியினர் இதுகுறித்து விழிப்பாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கலாமா?
– அ.அப்துல்சமத்,, திண்டிவனம்.
பதில் 5: அக்கட்சி என்ன – அனைத்துக் கட்சிகளும் சுதந்திரத் தேர்தல், நியாயமான கடமையாற்றும் தேர்தல் ஆணையம் பற்றிக் கவலைப்படும் அனைத்து ஜனநாயக கட்சிகளும் தொடர் விழிப்பாகவே இருப்பது இன்றைய காலத்தின் கட்டாயம்!
••••
கேள்வி 6: நீண்டகாலமாக தொலைநோக்குப் பார்வையோடு தூய்மைப் பணியாளர்களின் நலனிற்காகக் குரல் கொடுத்துவரும் தொல்.திருமாவளவன், சென்னை மாநகராட்சியில் பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தரம் தொடர்பாக கூறிய அவரது கருத்தை தவறான பார்வையில் எடுத்துக்கொண்டு அவரை விமர்சிப்பது சரியா?
– இ.தனசேகரன், அரூர்.
பதில் 6: அவரது உட்கருத்து – சொல்ல வந்தது ‘குலத்தொழிலாக ஆக்கி ஒடுக்கப்பட்ட – எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு அந்த வேலையே சாசுவதம் – நிரந்தரம்’ என்ற மனப்பான்மைக்கு ஆளாகாமல், ஒடுக்கப்பட்ட அச் சமூகப் பிள்ளைகள் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்க்கோர்ட் நீதிபதியாக வேண்டாமா என்பது! அது தெளிவாகப் படாததால்தான் இந்தத் தவறான புரிதல். குலத்தொழில் என்ற ‘விஸ்வகர்மா’ திட்டத்தை எதிர்க்கும் அதே கருத்தின் மற்றொரு பிரதிபலிப்பே தோழர் திருமாவின் கருத்து. விளக்கிய முறை – விதம் சற்று பிறழ்ந்ததால் இப்படி தேவையற்ற கேள்விகள்.
••••
கேள்வி 7: தந்தை பெரியார் அவர்களின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், சீன விஞ்ஞானிகள் உலகின் முதல் கர்ப்பகால ரோபோவை உருவாக்கியிருக்கிறார்களே?
– க.தமிழ்ச்செல்வி, செய்யாறு.
பதில் 7: ‘இனிவரும் உலகம்’ உரை 80 ஆண்டுகளுக்கு முந்தைய முன்னோக்கு ஆய்வுரை. தந்தை பெரியாரின் மண்டைச் சுரப்பாக – இன்று மின்சாரக் கார் முதல் பரிசோதனைக் குழாய் குழந்தை உள்பட பலவும் செயல்முறையில் ‘வெற்றி உலா’ வருகின்றனவே–! “அவர்‘தாம்’ பெரியார்” என்பது எவ்வளவு சரியானது!
••••
கேள்வி 8: தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்கத் தீர்மானம் கொண்டுவர இந்தியா கூட்டணிக் கட்சிகள் திட்டமிட்டிருப்பதற்கு மற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவு கிடைக்குமா?
– ரேவதி சுதாகர், புதுவை.
பதில் 8: தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்; ஒரு முக்கிய முடிவை எடுக்கும்போது, அது சரியா – தவறா என்றுதான் முதலில் யோசிக்க வேண்டும். ‘சரி’ என்று பட்டுவிட்டால், வெற்றி – தோல்வி பற்றி அஞ்சாமல், செயல் வீரர் – வீராங்கனைகளாகி களம் காண முந்த வேண்டும் என்பதுதான் இப்போது நினைவூட்டப்பட வேண்டிய தேவையாகும்!
••••
கேள்வி 9: தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் (நெகிழி) பயன்பாடு சர்வசாதாரணமாக நடைமுறையில் இருப்பதைக் கட்டுப்படுத்த திராவிட மாடல் ஆட்சி ஆவன செய்யுமா?
– ந.மண்ணுபெருமாள், மானாமதுரை.
பதில் 9: நெகிழி செயல்பாட்டினைக் கட்டுப்படுத்த இன்னும் தீவிரமான சட்டப்பிணைப்புடன் கூடிய நடவடிக்கைகளை நிச்சயம் தமிழ்நாடு தி.மு.க. அரசு மேற்கொள்ளும்!
••••
கேள்வி 10: மேனாள் ராணுவ வீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டம் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் தொடங்கப்பட்டுள்ளதே?
– பா.ஆகாஷ், ஆதம்பாக்கம்.
பதில் 10: நாட்டுக்காக பாதுகாப்புக் களம் கண்டு பணி ஓய்வு பெற்றவர்கள் தங்கள் இறுதிக் கால வாழ்வை மகிழ்ச்சியுடன் தொடர இத் திட்டம் வெகுவாக மேற்கொள்ளப்படுகிறது. இது ஒரு புதிய பெரும் சாதனை!