நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அமலாக்கத்துறை உதவி இயக்குநர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஆக. 21- நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் நேரில் ஆஜராக வேண் டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணைக்கு தடை

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அதன் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதன் அடிப்படையில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தினர். பல ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆகாஷ் பாஸ்கரனும், விக்ரம் ரவீந்திரனும் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை திருப்பி ஒப்படைக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது. இவர்கள் இருவர் மீதான வழக்குகளை விசாரிக்க தடையும் பிறப்பித்தது.

ஆஜராக வேண்டும்

ஆனால், இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி தங்களுக்கு அமலாக்கத்துறை தாக்கீது அனுப்பி உள்ளது. இது உயர் நீதிமன்றம் உத்தரவை அவமதிக்கும் செயல் என்று கூறி நீதி மன்றத்தில் அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆகாஷ் பாஸ்கரனும், விக்ரம் ரவீந்திரனும் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் கொண்ட அமர்வு விசா ரித்து வருகிறது. நேற்று (20.8.2025) மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ ஆஜராகி, இந்த வழக்கில் பதில் மனுதாக்கல் செய்யாத தால் ரூ.30 ஆயிரம் அபராதத்தை இந்த உயர் நீதிமன்றம் விதித்துள்ளது. இதை எதிர்த்து அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கை வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம். அன்று அமலாக்கத்துறை உதவி இயக்குநர் விகாஷ்குமார் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *