இஸ்லாமாபாத், ஆக. 21- பாகிஸ்தானின் வடமேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் கடந்த ஜூன் 26ஆம் தேதி முதல் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 750அய்த் தாண்டியுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு நேற்று (20.8.2025) வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வடக்கில் உள்ள கில்ஜித்பால்டிஸ்தான் பகுதியில் 11 பேரும், தெற்கில் உள்ள கராச்சி நகரில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். வெள்ளப்பெருக்கு, வீடுகள் இடிந்து விழுந்தது மற்றும் மின்சாரம் தாக்கியது ஆகியவை இந்த உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணமாக அமைந்தன.
இதேபோல, ஜூன் 26 முதல் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்த 750க்கும் மேற்பட்டோரில் கைபர்பக்துன்க்வாவில் 356 பேர், பஞ்சாபில் 164 பேர், சிந்துவில் 29 பேர், பலூசிஸ்தானில் 22 பேர், பாகிஸ்தான்ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 56 பேர், இஸ்லாமாபாதில் 8 பேர், கில்ஜித்பால்டிஸ்தானில் 11 பேர் அடங்குவர். 22.8.2025 வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்துள்ளது.