சிட்னி, ஆக. 21- காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு ஆஸ்திரேலியா எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பானீஸ்-யை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடியாக, “வலிமை என்பது மக்களைக் கொல்வதல்ல” என ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி புர்கே தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்கான காரணம்:
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவில்லை என்றால், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்போம் என ஆஸ்திரேலியா அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பானீஸ்-யை, “வரலாற்றில் ஆஸ்திரேலிய யூதர்களுக்குத் துரோகம் செய்த பலவீனமான அரசியல்வாதி” எனச் சமூக வலைதளத்தில் விமர்சித்தார்.
ஆஸ்திரேலிய அமைச்சரின் பதிலடி:
நெதன்யாகுவின் இந்தக் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி புர்கே தேசிய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “வலிமை என்பது எத்தனை பேரை உங்களால் வெடிக்க வைக்க முடியும் அல்லது எத்தனை குழந்தைகளை உங்களால் பட்டினியிட முடியும் என்பதன் மூலம் அளவிட முடியாது. இஸ்ரேல் விரும்பாத ஒரு முடிவை எங்கள் பிரதமர் அல்பானீஸ் எடுத்ததன் மூலம், அவரது வலிமை சிறப்பாகவே அளவிடப்படுகிறது. நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை அவர் நேரடியாக நெதன்யாகுவிடம் கூறுகிறார்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, காசா போர் மற்றும் மனிதாபிமான உதவிகள் முடக்கப்படுவது போன்ற காரணங்களால், நீண்டகால நட்பு நாடுகளான ஆஸ்திரேலியா மற்றும் இஸ்ரேல் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோல, பிரான்சு, பிரிட்டன் போன்ற நாடுகளும் போர் நிறுத்தத்தைக் கோரி இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.