ராமேஸ்வரம்,ஆக.20 தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் உடனே விடுவிக்க கோரி, காலவரையற்ற வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவது என ராமேஸ்வரத்தில் மீனவ சங்கங்கள் முடிவு செய்தன. அதன்படி கடந்த ஆக. 11ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கச்சி மடத்தில் கடந்த 13ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம், 15ஆம் தேதி உண்ணா நிலைப் போராட்டமும் நடத்தினர்.
ஆனாலும், ஒன்றிய அரசு மீனவர்களை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், ஏற்கனவே அறிவித்தபடி நேற்று தங்கச்சிமடத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட மீனவர்கள் திட்டமிட்டனர். இதையடுத்து ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் முதல் கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சுமூக உடன்பாடு ஏற்படாததால், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று, ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் நடந்தது. அதிலும் உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டப்படி 19.8.2025 அன்று பிற்பகல் 3 மணியளவில் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் மாபெரும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ள தாக அறிவிக்கப்பட்டது. ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.