* 5 லட்சம் – பாராட்டு சான்றிதழ் – ‘‘சமூகசேவகர்களுக்கான கவர்னர் விருது” என்ற ஆளுநர் மாளிகை அறிவிப்பு சட்டப்படி சரிதானா?
* நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சியா, ஆளுநர் ஆட்சியா?
அமைச்சரவையின் ஆலோசனைகளை ஏற்று செயல்படவேண்டிய ஆளுநர் தன்னிச் சையாக நடப்பது – ஆளுநர் ஆட்சி என்ற மனப்பான்மையில் தான்தோன்றித்தனமாக நடப்பதை எதிர்த்து ஜனநாயக சக்திகள் ஒன்று திரளவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டுக்கு ஆளுநராக திரு.ஆர்.என்.ரவி அவர்கள்- ஒன்றிய டில்லி அரசால் நிய மிக்கப்பட்டவர் – அவர் பதவியேற்ற நாள்முதல் இன்றுவரை – அரசமைப்புச் சட்டப்படி தாம் ஏற்ற பதவிப் பிரமாணத்திற்கு எதிராகவும் ஓர் ஆர்.எஸ்.எஸ். – சனாதனியாகவும் தனது நிலைப் பாட்டை பகிரங்கமாகவே வெளிப்படுத்தி நடத்தி வருவதோடு, தமிழ்நாடு அரசின் எதிர்க்கட்சித் தலைவராகவே தம்மை பாவித்து, முற்றிலும் விரும்பத்தகாத வகையில், தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘திராவிட மாடல்’ ஆட்சியான மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை முதலமைச் சராகக் கொண்ட தி.மு.க. ஆட்சிக்கு எதிராக போட்டி அரசு ஒன்றினை தனது ராஜ்பவன் நடவடிக்கைகள்மூலம் நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமும் நடத்தி வருகிறார்!
ஏற்கெனவே கடந்த ஆண்டு (2022) ஏப்ரலில் பேரறிவாளன் வழக்கில் இவரது நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் பகிரங்கமாகவே தனது கண் டனத்தைத் தெரிவித்து, கருத்துரையைப் பதிவு செய்தது – தீர்ப்பின்மூலம்.
ஆளுநர் மாளிகையா?
சனாதன மாளிகையா?
‘‘மாநில ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர்; தனித்த கண்ணோட் டத்துடன் செயல்பட முடியாது” எனத் தெளி வாகக் குறிப்பிட்டது.
அதற்குப் பிறகு ‘‘ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் ஓர் அங்கம் என்பதை அரசமைப்புச் சட்டம் 163(1) கூறு தெளிவுபடுத்து கிறது; அதன்படிதான் அவர்கள் கடமையாற்ற முடியும்” என்றும் மேலும் சில வழக்குகளில் அண்மையில் இவ்வாறான பல தீர்ப்புகள் வெளிவந்துள்ளன!
ஆனால், இங்குள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, தேவையற்ற சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசுவதோடு, ஆளுநர் மாளிகையை சனாதன சத்சங்க பிரச்சார அலுவலகம்போல ஆக்கி யுள்ளார். தமிழ்நாடு அரசுக்கு விரோதமான கருத்துகளை – சட்டம் ஒழுங்குப் பிரச்சினை யானாலும், சிதம்பரம் தீட்சிதர்கள் நடத்தும் குழந்தை மணம்பற்றியும் (தானே குழந்தைத் திருமணம் செய்துகொண்டவன் என்று பெரு மையாகப் பேசியும் உள்ளதோடு), தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் போன்று வெளிநடப்புச் செய்து (ஆளுநர் உரை நிகழ்த்து கையில் அரசமைப்புச் சட்ட மரபுகளைச் சிதைத்தும்) அப்பதவியின் மாண்பையே சீர்குலைத்தார்.
கவர்னர் ஆட்சியா
நடைபெறுகிறது?
நேற்று (5.6.2023) ஒரு செய்தி – ராஜ் பவனிலிருந்து வந்துள்ளது!
5 லட்சம்-பாராட்டு சான்றிதழ் – ‘‘சமூக சேவ கர்களுக்கான கவர்னர் விருது” – விண்ணப்பிக்க ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள்.
தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பல விருதுகளை தக்கவர்களை அடையாளம் கண்டு கொடுத்து வருகிறது – பல ஆண்டுகளாக.
அதற்குப் ‘போட்டி’யாகவோ அல்லது தனக்குத் தனி விளம்பரம் தேடவோ இப்படி ஒரு முயற்சியா? நாட்டில் நடப்பது கவர்னர் ஆட்சியா? புரியவில்லை!
இது அனுமதிக்கத்தக்கதா?
அரசுடன் ஒத்துழையாமை இயக்கம்
நடத்தும் ஆளுநர்!
தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்துதானே இவருடைய ஊதியம் – மற்றச் செலவுகள் வழங்கப்படுகின்றன – அரசமைப்புச் சட்டப்படி!
நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சமும், தனி நபர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்குவாராம் – அறிவிப்பு நேற்று வந்துள்ளது!
தமிழ்நாடு அரசுக்கு எதிராக இப்படி ஒரு ‘‘போட்டி அரசு” நடத்துகிறார்!
அரசின் கொள்கை முடிவுகளுக்கு (Policy Decisions) எதிராக பகிரங்கமாகப் பேசி, சர்ச்சை களை வளர்த்து வருவதை வாடிக்கையாக்கிக் கொள்ளுகிறார்!
சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப் பட்ட மசோதக்களை – சட்ட வரைவுகளை – மாதக் கணக்கில் நிலுவையில் போட்டு வைத்து அரசுடன் ‘ஒத்துழையாமை’ இயக்கத்தை நடத்துகிறார்!
முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தைக் கேலி செய்வதா?
தமிழ்நாட்டை தொழில் மயமாக்கி, இளைஞர் களின் வேலை வாய்ப்பைப் பெருக்கி, தமிழ் நாட்டை வளப்படுத்த வளர்ச்சியடையச் செய்ய வெளிநாட்டு முதலீட்டார்களைச் சந்தித்து அழைக்க நமது முதலமைச்சர் தனது குழுவின ருடன் (ஒன்றிய அரசின் ஒப்புதலோடு) துபாய், சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்குச் சென்று முதலீடுகளைப் பெற்றுவந்துள்ள நிலை யில், அதனைக் கொச்சைப்படுத்துவதுபோல, அதற்கு எதிராக நேற்று (4.6.2023) உதக மண்ட லத்தில் பல்கலைக் கழகத் துணைவேந்தர்களை அழைத்துப் பேசியபோது சிறிதும் சம்பந்தம் இல்லாத வகையில்,
‘‘வெளிநாடு செல்வதால் மட்டும் முதலீட் டாளர்கள் வரமாட்டார்கள்” என்று நையாண்டி செய்வது அவர் வகிக்கும் பதவிக்கு அழகா? சம்பந்தா சம்பந்தமில்லாதது இது.
நல்ல மனநிலையில் உள்ளவர்கள் இப்படி பேசுவார்களா?
தமிழ்நாட்டு மக்களின் பொறுமைக்கு மேலும் மேலும் சோதனை ஏற்படுத்துகின்றார்!
ஆளுநருக்கு எதிராக
ஜனநாயக சக்திகள் ஒன்று திரளட்டும்!
வன்மையான கண்டனத்திற்குரிய ஆளுநரின் இத்தகைய அரசமைப்புச் சட்ட விரோத பேச் சுக்கும், செயலுக்கும் ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டு மக்கள் பொங்கி எழுவர் என்பது உறுதி!
இதுபற்றி தமிழ்நாட்டு அனைத்து ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைந்த பதில் நடவடிக் கையை விரைவில் அறிவிப்பது காலத்தின் கட்டாயமாகும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
6.6.2023