சென்னை, ஆக.19 பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பள்ளிக்கல்வி அமைச்சருடன் நேற்று (18.8.2025) பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஆக.22-ஆம் தேதி நடக்க இருந்த கோட்டை முற்றுகை போராட்டம் தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக டிட்டோ ஜாக் அமைப்பு அறிவித்துள்ளது.
கோட்டை முற்றுகை போராட்டம்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைவது, ஆசிரியர்களின் உரிமைகளை பறிக்கும் அரசாணை எண் 243-அய் ரத்து செய்வது என்பன உள்பட 10 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ-ஜாக்) சார்பில் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆக.22-ஆம் தேதி கோட்டை நோக்கி முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என டிட்டோ-ஜாக்அமைப்பு அறிவித்திருந்தது.
இந்நிலையில், அந்த அமைப்பின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களுடன் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமைச் செயலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது பள்ளிக்கல்வித் துறை செயலர் டாக்டர் பி.சந்திரமோகன், தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ் ஆகியோர் உடனிருந்தனர். டிட்டோ ஜாக் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் வின்சென்ட் பால்ராஜ், இரா.தாஸ், எஸ்.மயில், தியோடர், சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு டிட்டோ ஜாக் கூட்டமைப்பின் உயர்நிலைக் குழு கூட்டம் நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.
தள்ளி வைப்பு
இதுகுறித்து உயர்நிலைக் குழு உறுப்பினர்களில் ஒருவரான இரா.தாஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “எங்களின் 10 அம்ச கோரிக்கைகளை பரி சீலிப்பது தொடர்பாக அமைச்சர் 2 நாள் அவகாசம் கோரியுள்ளார். இதைத்தொடர்ந்து நாங்களும் ஒரு வாரத்துக்கு பின்னர் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்ய உள்ளோம். எனவே, ஆக.22-ஆம் தேதி நடத்த திட்ட மிட்டிருந்த கோட்டை முற்றுகைப் போராட்டம் தள்ளிவைக்கப்படுகிறது” என்றார்.