கோவை, ஆக. 19 கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 10 முதல் 15 வயதுக் குட்பட்ட மாணவர்களுக்கு டைப் 2 வகை சர்க்கரை நோய் வருவதற்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சில மாணவர்கள் தூக்கமின்மைக்காக மருந்துகள் உட்கொள்வதும் தெரியவந்துள்ளதால், மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பொதுவாக பெரியவர்களுக்கு வரும் டைப் 2 சர்க்கரை நோய், தற்போது சிறுவர்களிடம் பரவி வருவதற்கு உணவு மற்றும் வாழ்வியல் மாற்றங்களே முக்கிய காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி நடத்திய இந்த ஆய்வில், 400 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 16% மாணவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் இருந்தன. இந்த ஆய்வு கிராமப்புறங்களில் நடத்தப்பட்டதாகவும், நகர்ப்புறங்களில் பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளை அதிகம் உட்கொள்ளும் மாணவர்களிடம் ஆய்வு செய்தால் இந்த சதவீதம் மேலும் அதிகரிக்கலாம் என்றும் பி.எஸ்.ஜி. மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு இயக்குநர் டாக்டர் சுதா ராம லிங்கம் தெரிவித்துள்ளார்.
ஆய்வின் மற்றொரு அதிர்ச்சியான தகவல், 10 முதல் 15 வயதுக்குட்பட்ட 100 மாணவர் களில் 6 முதல் 7 பேர் தூக்கமின்மை பிரச்சனைக்காக மருந்து உட் கொள்வதுதான். கைப்பேசி பயன்பாடு, இரவில் தூங்கும் நேரம் மாறுவது போன்ற காரணங்களால் இந்த நிலை ஏற்படுவதாகவும், இது குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது என்றும் அவர் கூறினார்.
குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு பெற்றோர், பள்ளிகள் மற்றும் அரசு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். அனைத்து பள்ளிகளிலும் தினசரி ஒரு மணிநேரம் கட்டாயம் விளையாட்டு வகுப்பை நடத்த வேண்டும் என்றும், மற்ற பாடங்களைப் போலவே இதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சாக்லேட், பிஸ்கட் போன்ற துரித உணவுகளைத் தவிர்க்குமாறு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வழிநடத்த வேண்டும் என்றும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது என்றும் அவர் கூறியுள்ளார்.