தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் கருத்து

1 Min Read

சேலம், ஆக. 18- திமுக கூட்டணிக் கட்சிகள் யாரும் கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு குறித்து பேசவில்லை என்று தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார்.

ஆட்சியில் பங்கு

சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று (17.8.2025) கூறியதாவது: சேலத்தில் தனியார் மின்னணு ஆலை தொடர்ந்து இயங்க வேண்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளோம். பாமகவில் தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையை, அவர்கள் பேசி தீர்த்துக் கொள்வார்கள்.

பாமக எனது பழைய வீடு, அவ்வீட்டை பற்றிக் குறை கூற மாட்டேன். திமுக கூட்டணிக் கட்சிகள் யாரும் கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லை. அதேபோல, ஆட்சியில் பங்கு குறித்தும் யாரும் பேசவில்லை. இது சம்பந்தமாக இரண்டாம் கட்ட தலைவர்கள், அவரவர் ஆசையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனால், திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் யாரும் அதைப்பற்றி பேசவில்லை. அந்த எண்ணமும் இல்லை. திமுக கூட்டணியை உடைப்பதற்காக எதிர்கட்சிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஒருபோதும் பலிக்காது. நான் சட்டப்பேரவையில் கோபமாக பேசினாலும், திமுக அமைச்சர்கள் அதை ஏற்றுக் கொண்டு, உரிய பதில் அளித்து வருகின்றனர்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு

ஜாதி வாரியான கணக்கெடுப்பு தான் இடஒதுக்கீட்டுக்கான தீர்வு. அதை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. விரைவில் ஒன்றிய அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

ஒன்றிய அரசு காலம் தாழ்த்தினால், தமிழ்நாடு அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துமாறு வலியுறுத்த வேண்டும். அதேபோல, அந்தந்த மாநில வேலைகளை அந்தந்த மாநில மக்களுக்கு வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *