கொள்கை வீரர் திருவாரூர் அர. திருவிடம் மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல்!

2 Min Read

கொள்கை வீரர்
திருவாரூர் அர. திருவிடம் மறைவு

கழகத் தலைவர் ஆசிரியர்  இரங்கல்!

திருவாரூர், திராவிடர் இயக்க வரலாற்றில், தனி இடம் பெற்றுத் திகழும் முக்கியமான நகரம். அதில் அடி நாளில்  நீதிக்கட்சி ஆழ வேரூன்றியதோடு, சுயமரியாதை இயக்கத்தின் பாசறையாகவும் வளர்ந்த பகுதி.

அங்கு திராவிடர் இயக்கம் செழுமையுடன் எதிர்ப்பைத் தாண்டி வளர்ந்ததற்கு முக்கிய காரணம் மூவேந்தர்கள் போன்ற திருவாரூர் சிங்கராயர், ‘தண்டவாளம்’ ெரங்கராஜ், முத்துக்கிருஷ்ணன்  ஆவர். மூவரும் தீவிர பெரியார் பெருந் தொண்டர்கள். அவர்களது ஊக்கம், உற்சாகம் மாணவப் பருவத்திலிருந்த ஆற்றலாளர் கலைஞரை அடையாளம் கண்டு, அம் மாவட்டத்தில் பல கொள்கைப் பரப்புரைகளை, நிகழ்ச்சிகளை நடத்தி  அவரை  ஊக்கப்படுத்தியவர்கள்.

அதில் ‘முரட்டுப் பெரியார் பெருந்தொண்டர்’ தண்டவாளம் ரெங்கராஜ் அவர்கள் கடலூரில் ‘திருவிடம் ஸ்டோர்ஸ்’ என்று ஆயத்த ஆடைகள் கடை வணிகமும் (கிளை போல) செய்து வந்தார். எனது ஆசிரியர் ஆ. திராவிடமணி மூலம் என்னை மாணவப் பருவத்தில் ஊக்கப்படுத்தியவர்.

அவரது மகன்தான் மறைந்த (16.8.2025) கொள்கை வீரர் அர. திருவிடம் (வயது 81) .  சிறந்த எழுத்தாற்றல், மேடைப் பேச்சில்கூட வாதத்திறமை, கொள்கை எதிரிகளுக்குச் சாட்டை அடி தருவதில் அவர் ஒரு தனி ரகம் – தி.மு.க.வுக்கு மிகவும் பயன்பட்ட எழுத்தாளர், நம்மிடம் ஈர்ப்பும் உள்ளவர்.

அவரது மறைவுச் செய்தி அறிந்து மிகவும் துயருருகிறோம்.

அவரது மறைவு திராவிடர் இயக்கத்தவருக்கு பேரிழப்பாகும்.

அவரை இழந்து வருந்தும் அவரது குடும்பத்தினருக்கும், இயக்கத்தினருக்கும் நமது ஆறுதலையும், ஆழந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

    தலைவர்
திராவிடர் கழகம்

 

சென்னை
17.8.2025

 

கழகத் தோழர்கள் இறுதி மரியாதை

திராவிடர் கழக மாநில விவசாய அணித் தலைவர் வீ. மோகன், மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர்  சவு. சுரேஷ், ஆசிரியர் க. முனியாண்டி, மாவட்டக் கழகத் துணைத் தலைவர் அருண்காந்தி மற்றும் கழகத் தோழர்கள் நேரில் சென்று மானமிகு அர. திரவிடம் அவர்களின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *