சென்னை, ஆக. 16- தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்கும் முதலமைச்சரின் அறிவிப்பை ஆதித்தமிழர் பேரவை வரவேற்றுள்ளதுடன், மனித மாண்பை முழுமையாகப் பாதுகாக்க, இந்தப் பணியில் இருந்து மனிதர்களை விடுவித்து நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் – தலைவர் இரா.அதியமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
“எளியோரிலும், வலியோராக இருக்கும் தூய்மைப் பணியாளர் களின் மாண்பை எப்போதும் விட்டுக் கொடுக்காது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதை ஆதித்தமிழர் பேரவை மனதார வரவேற்கிறது. ஜாதியின் நிர்பந்தத்தால் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மீது திணிக் கப்பட்ட தூய்மைப் பணி, மனித மாண்பிற்கு எதிரான ஒரு சவாலாக உள்ளது.
நவீன தொழில்நுட்பங்கள் நம் கைகளில் இருந்தாலும், “தூய்மைப் பணி நிரந்தரம்” என்ற புறவாசல் வழியே தீண்டாமை நுழைவதைத் தடுக்க அறிவியல்பூர்வமான அணுகுமுறை தேவை. அர்ச்சகரும், தூய்மைப் பணியாளரும் வேண்டாம் என்ற சிந்தனையுடன் புதிய கருவிகளையும், நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி, மேலை நாடுகளைப் போல ஒவ்வொரு தனிநபரும் தனது மற்றும் பொது சுகாதாரத்தைப் பேணிக்காக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற சிந்தனை புகுத்தப்படுவது காலத்தின் அவசியம். மனிதனை வைத்து மனிதன் இழுத்த கை வண்டி ரிக்சாவை ஒழித்து சுயமரியாதையை மீட்ட தலைவர் கலைஞர் வழியில், மனித மலக்கழிவுகள் மற்றும் சுகாதாரமற்ற குப்பைகளை மனிதர்கள் கையால் அப்புறப்படுத்தும் அவலத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
அண்மையில், திமுக அரசுக்கு எதிராக ரிப்பன் கட்டடம் அருகே தூய்மைப் பணியாளர்களை வைத்து சிலர் போராட்டத்தை முன்னெடுத்தனர். மனிதர்களை வைத்துதான் தூய்மைப் பணி செய்ய வேண்டும் என வற் புறுத்தும் தலைவர்களும், செயல் பாட்டாளர்களும் தங்களை ஒருமுறை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
தற்போது தூய்மைப் பணியில் ஈடுபடுவோரைப் பாதுகாக்க முதல மைச்சர் அறிவித்துள்ள திட்டங்கள் ஆறுதல் அளிக்கும் நடவடிக்கை. இருப்பினும், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் நிபந்தனை யின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும்.
வருங்காலங்களில், மனித மாண்பைப் பாதுகாக்கும் வகையில், பொது சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிகளுக்குப் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் நவீன இயந்திரங்களை இறக்குமதி செய்ய வேண்டும். இதன் மூலம், மலக்குழியில் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதோடு, பொதுச் சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணியில் இருந்து மனிதனை முழுவதுமாக விடுவித்து, அவர்களின் மாண்பையும் சுயமரியாதையையும் பாதுகாக்க வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் தலைவர் இரா. அதியமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.