சென்னை, ஆக 16- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற (14.8.2025) அமைச்சரவைக் கூட்டத்தில், பல்வேறு முக்கிய தொழில்துறை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மின்னணு உற்பத்தி, பொறியியல் வடிவமைப்பு, தொழில்நுட்ப ஜவுளி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொதுத்துறை, உணவு மற்றும் வேளாண் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் மொத்தம் ‘‘ரூ.1,937.76 கோடி’’ முதலீட்டில் புதிய திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ‘‘13,409 வேலைவாய்ப்புகள்’’ உருவாக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “PayPal மற்றும் AmericanExpress போன்ற நிறுவனங்கள் கடந்த ஆண்டு முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் விளைவாக முதலீடு செய்ய முன்வந்துள்ளன. நாங்கள் வெறும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதில்லை, மாறாக அந்த முதலீடுகளை வேலைவாய்ப்புகளாக மாற்றி வருகிறோம். புதிய முதலீடுகள் மற்றும் முக்கிய திட்டங்களின் விரிவாக்கங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது” என்று குறிப்பிட்டார்.