சகுனம் பார்ப்பதில்
காரை முதலில் இயக்கும்போது கார் டயருக்கு அடியில் எலுமிச்சை பழத்தை வைத்து நசுக்குவது பெரும்பாலானவர்கள் வழக்கம். முக்கியமான வேலைககாக வீட்டைவிட்டு வெளியே கிளம்பும் போது பூனை குறுக்கே வந்துவிட்டால் அவ்வளவுதான் மீண்டும் வீட்டுக்குள் வந்து தண்ணீர் அருந்தாமல் மீண்டும் வெளியே செல்லமாட்டார்கள். இதைபோல கொரிய நாட்டு மக்களிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் உண்டு. முக்கியமான வேலை நிமித்தமாக வெளியே செல்லும்போது காகத்தை பார்த்துவிட்டார்கள் என்றால் அவ்வளவுதான் குழப்படைந்து விடுவார்கள். வீட்டுக்குள் வந்து அமர்ந்துவிட்டு சிறிது நேரம் கழித்துதான் செல்வார்கள்.
நாட்டுக்கு நாடு வேறுபடும் மூடநம்பிக்கைகள்
“மனிதன் தனக்குள் இருக்கும் மூடநம்பிக்கையால் தன் அறிவின் மூலம் அடைய வேண்டிய வளர்ச்சியை அடையாமல் இருக்கிறான்” என அறிவு ஆசான் பெரியார் கூறுகின்றார். நம்மிடம் அறிவுப்பகுதியைவிட அறியாமை பகுதி தான் மிகுந்து காணப்படுகிறது. அறியாமையால் மற்றும் மூடபழக்கங்களால் பொருள் இழப்பும் கால விரயமும் ஏற்படுகின்றன. போட்டி நிறைந்த இன்றைய உலகில் நேர மேலாண்மை மிக முக்கியமானது.
பிரேசில் நாட்டை எடுத்துக்கொண்டால் அங்கு ஒரு வித்தியாசமான பழக்கம் வழக்கத்தில் உண்டு அங்கே எந்த ஹோட்டலுக்கு சென்று காபி அல்லது தேநீர் கேட்டீர்கள் என்றால் கப்பை எடுத்துக்கொண்டு முதலில் அதில் சர்க்கரையைத்தான் போடுவார்கள். பிறகுதான் தேயிலைத்துாள், டிகாஷன் மற்றும் பால் சேர்ப்பார்கள் மறந்தும் கூட கப்பில் முதலில் பாலையோ அல்லது தேயிலை வடி நீரையோ ஊற்ற மாட்டார்கள். காபியோ அல்லது தேநீரோ தயாரிக்கும் போது முதலில் சர்க்கரையை போடாவிட்டால் தம்மிடம் இருக்கும் எல்லா பணமும் நம்மை விட்டு போய்விடும் என்பதும் அங்கே காலம் காலமாக வழக்கத்தில் இருந்து வரும் ஒரு நம்பிக்கை ஆகும்.
அதே போன்று இங்கு நரிக்கொம்பு விற்கும் நரிக்குறவர்கள் போல மெக்ஸிகோ நாட்டில் மிகவும் பிரபலமானவர்கள் முயலின் வால் மற்றும் தோல் விற்பவர்கள் ஆவர். காரணம் வீட்டில் முயலின் தோலோ அல்லது வாலோ இருந்தால் அவ்வீட்டில் வசிப்பவர்களின் முயற்சிகள் எந்த தடையும் இல்லாமல் வெற்றியடையும், சிறப்பாக வாழ்வார்கள் என்பது மெக்ஸிகோ நாட்டு மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை ஆகும். எந்த பாத்திரமாக இருந்தாலும் சரி ஒருவேளை அது புதிய பாத்திரங்களாகவே இருந்தாலும் சரி அந்த பாத்திரத்தின் ஏதாவது ஓர் இடத்தில் சிறிய நசுக்கங்கள் இருந்தாலும் அந்த பாத்திரங்களை ரஷ்ய மக்கள் பயன்படுத்த மாட்டார்கள். அதே போல உடைந்த கண்ணாடியிலும் முகம் பார்க்கமாட்டார்கள்.
கிளி சோதிடம்:
கிளி ஜோதிடம் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாகும். ஆருடம் கேட்க வந்தவனிடம் கிளி சோதிடன் பெயரைக் கேட்பான். வந்தவன் தன் பெயர் சுப்பிரமணியன் எனச் சொல்ல சுப்பிரமணியன் என்ற இந்த நபருக்கு வருங்காலம் வளமாக நல்ல சீட்டை எடுத்து போடுடா ராஜா என்பார். கிளி ஒவ்வொரு சீட்டாக எடுத்து போட்டுவிட்டு சோதிடனின் விரல் இடுக்கை பார்க்கும். பச்சைநிற காகிதம் ஓட்டப்பட்ட அட்டை வந்தவுடன் தன் விரல் இடுக்கில் இருக்கின்ற அரிசியை வெளிப்படுத்தி காட்டுவார். ஏன் என்றால் அந்த அட்டையில் தான் முருகன் படமும், பொதுவான ஆருட கணிப்பும் இருப்பது சோதிடருக்கு முன்னரே தெரியும். பிள்ளையை நரபலியிடுதலும், வாயிலிருந்து 8, 13, 17 என்ற கெட்ட எண்கள், தலைச்சன் உருவங்களை எடுப்பதும், சிலை பால் குடிப்பதும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் உள்ளது.
தன்னுடைய பத்து மாத மகளுக்கு தாயே விஷம் கொடுத்து கொன்றாள். காரணம் என்னவென்றால் அந்த குழந்தை சித்திரை மாதத்தில் பிறந்ததால் அதற்கு எதிர்காலத்தில் நல்ல வாழ்க்கை அமையாது என்று மந்திரவாதி ஒருவன் கணித்து சொன்னதுதானாம்.
எட்டு என்பது இந்தியாவில் கெட்ட எண் என்றால், பதிமூன்று என்ற எண் இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸைக் குறிப்பதாகவும், எனவே பதிமூன்று என்பது கெட்ட எண் என்பதும் மேல் நாட்டினரின் கருத்து. அதுவும் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆகிவிட்டால் அது படுபயங்கரமான மோசமான நாளாம். காரணம் இயேசு சிலுவையில் அறையப்பட்டது ஒரு வெள்ளிக்கிழமை. ஸ்பெயின் நாட்டில் 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வந்துவிட்டால் அன்று எந்த நல்ல செயல்களையும் செய்யமாட்டார்கள். இத்தாலியில் 13ஆம் எண்ணைப்போல 17ஆம் எண்ணும் கெட்ட எண்ணாக கருதப்படுகிறது. அது மரணத்தைக் குறிப்பாக அவர்கள் எழுதுகிறார்கள். அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பெரும்பாலான கட்டடங்கள் 13ஆவது மாடி வீடுகளே இல்லாமலேயே கட்டப்படுகின்றன. ஏராளமான குடியிருப்புகளில் 13ஆவது இருக்காது விமான நிலையங்களில் கூட 13ஆவது எண்ணுள்ள வாசல் இருப்பதில்லை. சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியின் கீழே நடப்பது கெட்ட நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்பது எகிப்தியர்களின் நம்பிக்கை.
சுவரில் ஏணி சாய்த்து வைக்கும்போது முக்கோணம் உருவாகிறது. பிரமிடுகளையும் முக்கோணத்தையும் தங்கள் நம்பிக்கை பின்னணியாகக் கொண்டுள்ள எகிப்தியர்கள் ஏணியின் கீழே நடப்பது அந்த முக்கோணத்தின் புனித தத்துவத்தை பாழ்படுத்துவதாக நம்புகிறார்கள்.
நீண்ட ஆயுளைத் தருபவை
ஒரு மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் கண்ணாடியை உற்றுப்பார்த்தால் இறந்து போனவர்களின் ஆவியை காணமுடியும் என்பதும், வலது காலணியை முதலில் போடுவதும் நீண்ட ஆயுளைத்தரும் என்பதும் இங்கிலாந்து உட்பட பல மேல்நாடுகளில் உலவி வரும் மூடநம்பிக்கை ஆகும்.
மின்னல் தாக்கி உயிர் பிழைப்பவர்கள் பிரபலமாவார்கள் என்ற நம்பிக்கை சீனாவிற்கு சொந்தமானது. கால் நகத்தை வெட்டி பழச்சாற்றுடன் போட்டு யாருக்கேனும் கொடுத்தால் அவர்கள் உங்களோடு காதல் வயப்படுவார்கள் என்பது மேல்நாட்டு நம்பிக்கைகளில் ஒன்று. மூடநம்பிக்கைகள் எல்லா நாட்டிற்கும் சொந்தமாக உள்ளன.
இதைத்தான் பெரியார் மூடநம்பிக்கை என்பது இந்த நாட்டிற்கு மட்டுமே உரியதன்று, மாறாக உலகிற்கே சொந்தம் என்பது இதன் மூலம் அறிய முடிகின்றது எனக் கூறுகின்றார்.
அறிவியல் சார்ந்த மருத்துவத்தை
நம்பாததால் பலியான 4 உயிர்கள்
நம்பாததால் பலியான 4 உயிர்கள்
கேரளாவில் கண்ணுணூரில் 55 வயதுடைய அப்துல்சத்தார் என்பவரின் 12 வயதை கடந்த மகள் கடும் காய்ச்சலுக்கு ஆளானார். மகளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவில்லை. மாறாக இமாம் முகம்மது உசேன் என்பவரிடம் அழைத்துச் சென்றார்.
அவர் என்ன செய்தார்? “புனித நீர்” கொடுத்து ‘புனித’ நூலைப் படிக்குமாறு செய்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லக் கூடாது என்றும் தடை போட்டார் முடிவு சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் கொடுமையை தாங்க முடியாமல் சத்தாரின் சகோதரர் காவல்துறைக்குப் புகார் கொடுத்தார்.
மதக் குருவின் மீது வைத்த நம்பிக்கையால் தன் குடும்பத்தில் 2014, 2016 2018ஆம் ஆண்டுகளிலும் இதற்குமுன் மூவர் உயிரிழந்ததாகவும் அந்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து அபதுல் சத்தார் மற்றும் முகம்மது உசேன் ஆகிய இருவரையும் காவல்துறை கைது செய்தது என்பது செய்தி.
அறிவியல் ரீதியான மருத்துவத்துறையை நம்பாமல், மதக் குருவின் அற்புதத்தை நம்பியதால் ஒரு குடும்பத்தில் நான்கு உயிர்கள் பலியானது என்பது எத்தகைய கொடுமை!