தூய்மைப் பணியாளர்களுக்கு முப்பதாயிரம் வீடுகள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் – தூய்மைப் பணியாளர்களுக்கு மேலும் சலுகைகள்!

சென்னை, ஆக. 15– தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம், நேற்று (14.8.2025) காலை, சென்னை – தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் தூய்மைப் பணி யாளர்கள் தொடர்பாக 6 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டது.

தூய்மைப் பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள் கட்டித் தருவது என்பது உள்ளிட்ட அம்முடிவுகளை அமைச்சரவைக் கூட்டம் நிறைவுற்றதும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

நிதி அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

இன்றைக்கு நடைபெற்றிருக்கக்கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகளில், தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்விற்காக பல சிறப்பு நலத் திட்டங்களை நம்முடைய தலமைச்சர் அவர்கள் இன்றைக்கு வழங்கி, அறிவிப்புகளை செய்திருக்கிறார்கள். பொதுவாக, தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வில் நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய தலைமையில் நடைபெற்றுக் கொண்டி ருக்கக்கூடிய திராவிட மாடல் ஆட்சியான தி.மு.கழக அரசு எந்த அளவிற்கு பெரிதும் அக்கறைக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

முத்தமிழறிஞர் கலைஞரால்தான் – தூய்மைப் பணியாளர் நலவாரியம் ஏற்படுத்தப்பட்டது!

2007 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பில் இருந்த கால கட்டத்தில் தான், தூய்மைப்பணியாளர் நல வாரியம் ஏற்படுத்தப்பட்டு, தூய்மைப் பணியாளர்களுக்கான பல்வேறு நலத் திட்டங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. அந்த நலவாரியத்திற்கான உரிய நிதி நல்கியதும் அரசு முறையான வகையில் வழங்கி, அந்த நலவாரியம் சிறப்பாக செயல்படவும், அந்த நலவாரியத்தின் திட்டங்கள், நன்மைகள் அது வழங்கக்கூடிய நலன்கள், தூய்மைப் பணியாளர்களுக்கும், அவர்களுடைய குடும்பங்களுக்கும் தருவதை அரசு முடிவு செய்து வந்திருக்கிறது.

எனவே, நம்முடைய முதலமைச்சர் அவர்கள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய காலத்திலிருந்து தொடர்ந்தி ருக்கக்கூடிய அந்த பாரம்பரியத்தை அவர்களும் கடைப்பிடித்து, தூய்மைப் பணியாளர்கள் மீது அவருக்கும் தனிக் கரிசனத்தோடு அவர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் இங்கே உங்களிடத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

பெரும் கருணை கொண்ட
‘திராவிட மாடல்’ அரசு!

பொதுவாக, தூய்மைப் பணியாளர்கள் மட்டுமின்றி, அரசு ஊழியர்களின் நலனிலும் முதலமைச்சர் அவர்களின் அரசு பெரும் கருணை கொண்டதாகவே இருக்கிறது. இன்றைக்கு காலையில் கூட பார்த்தீர்கள் என்று சொன்னால், நிதி நிலை அறிக்கையில், நிதித் துறையின் சார்பில் நான் அறிவித்திருக்கக்கூடிய அரசு ஊழியர்களின் நலன்களுக்காக தெரிவித்திருக்கக்கூடிய அறிவிப்பு களில் ஒன்றாக அரசு ஊழியர்கள் பணியில் இருக்கின்றபோது அவர்கள் திடீர் மறைவுற்றால் / இயற்கை எய்தினால்,அவர்களுக்கான அந்த விபத்து காப்பீட்டுத் தொகையாக வழங்கக்கூடிய அந்தத் தொகை வருவாய் கோட்டாட்சியர் அறிவித்திருக்கிறார் – அவருடைய குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் வழங்கி யிருக்கிறோம் என்று சொன்னால், படி நிலைகளில் இருக்கக்கூடிய பலருக்கும் அந்த வாய்ப்புகள் வழங்கப்பட்டு, அங்கன்வாடிபணியாளர் ஒருவருடைய குடும்பத்திற்கும் அதே 1 கோடிரூபாய் இன்றைக்கு வழங் கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் தான் குறிப்பாக நான் தொடக்கத்தில் குறிப்பிட்டுச் சொன்னது போல, நம்முடைய தூய்மைப் பணியாளர்கள் அவர்களுக்கான குறிப்பிட்ட சிறப்புத் திட்டங் களை நம்முடைய அமைச்சரவைக் கூட்டத்தில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்டு, அதை உங்களிடத்தில் நான் இங்கே தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அறிவிப்பு 1:

தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளைக் கையாளும்போது அவர்களுக்கு நுரையீரல் மற்றும் தோல் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, இத்தகைய தொழில்சார் நோய்களை கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

அறிவிப்பு 2:

தற்போது தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால், அவர்களுக்கு தூய்மைப் பணியாளர் நலவாரியத்தின் மூலமாக, நிதி யுதவி வழங்கப்பட்டு வருகிறது. தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களின் எதில்கால நலன்களையும், வாழ்வாதரத்தையும் முழுமையாக உறுதி செய்யக்கூடிய வகையில், இந்த நிதியுதவியுடன் கூடுதலாக இந்தப் பணியாளர்களுக்கு 5 இலட்சம் ரூபாய் அளவிற்கு காப்பீடு இலவசமாக வழங்கப்படும். இதனால், பணியின் போது இறக்க நேரிடும் தூய்மைப் பணியாளர்கள் குடும்பங்களுக்கு 10 இலட்சம் ரூபாய் கிடைப்பதற்கு வழிவகை ஏற்படும்.

அறிவிப்பு 3:

தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சமூகப் பொருளாதார நிலையினை உயர்த்திட சுய தொழில் தொடங்கும்போது, அத்தொழில் திட்ட மதிப்பீட்டில், 35 விழுக்காடு நிதி அதிகபட்சமாக 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும். மேலும், இந்த கடனுதவியைப் பெற்று தொழில் தொடங்கி கடன் தொகையை தவறாமல் திருப்பிச் செலுத்துவோருக்கு 6 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். இந்தப் புதிய திட்டத்திற்கு ஆண்டுதோறும் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

அறிவிப்பு 4:

தூய்மைப் பணியாளர்களின் குழந்தை கள் எந்தப் பள்ளியில் பயின்றாலும், அவர்களுக்கு உயர் கட்டணச் சலுகைகள் மட்டுமின்றி, விடுதிக் கட்டணம், புத்தகக் கட்டணங்களுக்கான உதவித் தொகையை வழங்கிடும் வகையில், “புதிய உயர் கல்வி உதவித் தொகை திட்டம்” ஒன்று செயல்படுத்தப்படும்.

தூய்மைப் பணியாளர்களுக்கு

மேலும் பல சலுகைகள்!

தூய்மைப் பணியாளர்களின் தொழில் சார் நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளித்திடத் தேவையான தனித் திட்டம் செயல்படுத்தப்படும்!

தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.5 லட்சம் அளவிற்கு இலவசக் காப்பீடு!

பணியின் போது இறக்க நேரிடும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்திற்கு ரூ.10 இலட்சம்!

தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு – புதிய உயர் கல்வி உதவித் தொகைத் திட்டம்!

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவு!

அறிவிப்பு 5:

நகர்ப்புறங்களில், சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு வரும் மூன்று ஆண்டுகளில், தூய்மைப் பணியாளர் நலவாரியத்தின் உதவியோடு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் திட்டங்கள், தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் இடத்திலேயே வீடு கட்டுதல் என பல்வேறு முறைகளின் கீழ் 30,000 குடியிருப்புக்கள் கட்டித் தரப்படும். கிராமப் பகுதிகளில் வசிக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் இந்த வீட்டு ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும்.

அறிவிப்பு 6:

தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணியை அதிகாலையில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், காலை உணவு சமைப்பதற்கும், அதை பணிபுரியும் இடத்திற்கு கொண்டு வந்து அருந்துவதற்கும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இப்பிரச்சினைகளுக்குத் தீர்வாக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

இந்த 6 முக்கியமான அறிவிப்புகள் நம்முடைய தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இன்றைய அமைச்சரவையில் இந்தத் திட்டங்களை சிறப்பாக அறிவித்தி ருக்கிறார்கள். எனவே, நான் அரசின் சார்பில் கேட்டுக்கொள்வது, தூய்மைப் பணியாளர்கள் உங்களுடைய உணர்வுகளை மதிக்கக்கூடிய முதலமைச்சராக உங்களுக்கான நலத் திட்டங்களை உருவாக்க வேண்டிய அதை முன்னுரிமை அடிப்படையில் சிந்தித்துக் கொண்டிருக்கக்கூடிய உங்கள் நலனுக் காக இந்தத் திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய முதலமைச்சராக இருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் அறிவித்திருக்கக்கூடிய இந்தத் திட்டங்களின் பின்னணியில் அரசு உங்கள் மீது கொண்டிருக்கக்கூடிய அக்கறையை மனதில் வைத்து பொதுமக்களுடைய நலனை கருதி, அதைப்போல உங்களுடைய மற்ற கோரிக்கைகளை எல்லாம் மனதில் வைத்து நீங்கள் உங்களுடைய வேலை நிறுத்தத்தை விடுத்து பணிகளுக்குத் திரும்பி அந்தப் பணிகளில் உங்களை ஈடுபடுத்திடவேண்டும் என்று நான் அரசின் சார்பாக மிகுந்த அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு நிதி அமைச்சர் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *